உறவாய் வந்து மகிழ்ந்து வளர்ந்தவர் முந்தவே சென்று மறைகின்றார் - காட்சி, தருமதீபிகை 429

நேரிசை வெண்பா

தந்தைதாய் மக்கள் தமர்தாரம் என்றுறவாய்
வந்து மகிழ்ந்து வளர்ந்தவர் - முந்தவே
சென்று மறைகின்றார் செல்லவு,நீ நிற்கின்றாய்
நின்றபயன் என்னோ நினை. 429

- காட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தாய், தந்தை, மனைவி, மக்கள், ஒக்கல் என உற்றவரனைவரும் ஒழிந்து போகின்றார்; நீயும் அழிந்து கொண்டிருக்கிறாய்; ஆன பயனை விரைந்து உணர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர். கண்டுவந்த அனுபவ நிலைகளைக் கருதியுணர்ந்து உறுதி நலம் தெளிந்து உய்தி பெறுக என இஃது உணர்த்துகின்றது.

மனித வாழ்வு அதி விசித்திரமானது; மையல் மிக மலிந்தது; பாச நேசங்களும் பந்த வாசனைகளும் பல படியாகப் படிந்துள்ளது. புன்மைகளும் பொய்ம்மைகளும் நீண்டு நிறைந்துள்ளமையால் இதிலிருந்து உண்மை தெளிந்து நன்மை காண்பது யாண்டும் அரிதாய் நீண்டு நிற்கின்றது. இந்த மாயச் சூழல்களினின்று தப்பி உய்பவர் ’சீவன் முத்தர்’ எனச் செப்ப நின்றார், பிறவித் துயர் நீங்கிப் பேரின்ப நிலை அடைவதே சீவகோடிகளுடைய ஆவலாயிருக்கின்றது; இருந்தும் வழி தெரிந்து விழியாமல் அழி துயரங்களிலேயே சுழன்று அவலம் அடைந்த வருகின்றன.

சீவன் தனது பரிபூரணமான தேவ சம்பத்தை அடையும் பொழுது அதன் தேக சம்பந்தங்கள் யாவும் மாய பந்தங்களாய் மாய்ந்து போகின்றன. சொந்தநிலை தெரியவே இடையே வந்த பந்தநிலை பாழாய் மறைகின்றது.

உயிர் உடலை மருவி உலகில் உருவாய் வரவே அது பலவகைத் தொடர்புகளோடு படர்ந்து நிற்க நேர்ந்தது. தாயும் தந்தையும் தேகம் தந்தவர்களாதலால் அவர் மூல காரணராய் முதல் உரிமை ஆயினர். அதன்பின் மனைவி, மக்கள், ஒக்கல் முதலாயினோர் பக்கம் தொடர்ந்து படர்ந்து நின்றனர்.

இந்த உறவு நிலைகள் எல்லாம் ஓரளவு துணையாய்த் தோன்றி விரைவில் மறைந்து போதலால் அந்நிலைமையை நினைந்து தெளிவது தலைமையான தத்துவ ஞானம் ஆயது.

’சென்று மறைகின்றார் செல்லவும் நீ நிற்கின்றாய்’ என்றது சென்றதையும் செல்வதையும் நன்கு காண வந்தது. மிகவும் உரிமையாளராய் மருவி நின்ற அருமைத் தந்தை, தாயரும் அகன்று போயினர்; நீயும் அழிவில் போய்க் கொண்டிருக்கின்றாய்: முடிந்து போகுமுன் முடிவான பயனை அடைந்து கொள்க என இது அறிவுறுத்தியது.

கண் எதிரே கழிந்து படுவதைக் கண்டும் தெளிந்து கொள்ளாமல் இருப்பது தீய மடமையாம்; ஆதலால் தாய் தந்தையர் மாய்ந்து ஒழிவதையேனும் ஓர்ந்து உய்க என உணர்த்த நேர்ந்தது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் விளம் விளம் விளம் மா தேமா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

தந்தையார் போயினார் தாயரும்
..போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்
..பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம்
..வைத்தியால் ஏழை நெஞ்சே
அந்தணா ரூர்தொழு(து) உய்யலாம்
..மையல்கொண்(டு) அஞ்சல் நெஞ்சே! 2 – 079 திருவாரூர், இரண்டாம் திருமுறை, சம்பந்தர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தந்தை யாருந் தவ்வை யாரு
..மெட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவி
..வான நெறிகாட்டும்
சிந்தை யீரே னெஞ்சி னீரே
..திகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி
..யென்ப தடைவோமே. 9 – 007 திருவெதிர்கொள்பாடி, ஏழாம் திருமுறை, சுந்தரர்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

தந்தையார் தாயாரு டன்பி றந்தார்
..தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ
..மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின்
..திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
..என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே 10 – 93 பொது, ஆறாம் திருமுறை, திருநாவுக்கரசர்

தந்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவையெலாஞ்
சந்தையிற் கூட்டம் இதிலோ
சந்தேக மில்லைமணி மாடமா ளிகைமேடை
சதுரங்க சேனையுடனே
வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரசா லக்கோலம்
வஞ்சனை பொறாமைலோபம்
வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ
வாஞ்சனையி லாதகனவே
எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே
இரவுபக லில்லாவிடத்
தேகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே
யானென்ப தறவுமூழ்கிச்
சிந்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ
தேடரிய சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே. 3 - 12. தேசோ மயானந்தம், தாயுமானவர்

தந்தைதாய் மக்கள்மனை தாரமெனும் சங்கடத்தில்
சிந்தைதான் சென்று தியங்கி மயங்காமே
உந்தையென்போர் இல்லாத ஒற்றியப்பா! உன்அடிக்கீழ்
முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ. 36, அருள் திறத்து அலைசல், முதல் தொகுதி, இரண்டாம் திருமுறை, இராமலிங்கர்

பெற்ற தாய் தந்தையர், உற்ற உறவினங்கள், உரிய செல்வங்கள் யாவும் அயலே அகன்று ஒழிவன; இவற்றுள் மயலாய் மயங்காமல் உயர்நிலை அடைபவரே உயிர்க்குறுதி புரிபவர் என ஞானசம்பந்தர் முதலான பெரியோர்கள் அருளியுள்ளனர். தம் நெஞ்சை முன்னிலைப் படுத்தியும், கடவுளை நோக்கியும் அவர் பாடியுள்ள பாசுரங்கள் நாடி அறிய வுரியன.

தெய்வ பத்தியும், சீவ சத்தியும் ஞான சித்திகளாயுள்ளன. சந்தையில் வந்து கூடிய கூட்டம் போல் தந்தை, தாய் முதலிய பந்து சனங்கள் முந்துறப் பிரிந்து போதலால் அந்தப் போக்கை நோக்கியேனும் தன் உயிர்க்கு ஒருவன் ஆக்கம் காண வேண்டும்.

நேரிசை வெண்பா

கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து. 30 யாக்கை நிலையாமை, நாலடியார்

கூட்டை விட்டுப் பறவை பறந்து போதல் போல் கூடியிருந்த வீட்டை விட்டுக் கிளைகள் இறந்து போகின்றார் என அழிவு நிலையை இது தெளிவாகக் காட்டி உறுதிநலனை ஊட்டியுளது.

முன்னதாகப் போனவர் போலவே நீயும் போக நிற்கின்றாய்; பொன்றி நீங்குமுன் நன்று காணுக என்றும், ’நின்ற பயன் என்னோ? நினை’ உரியவராய் நின்றவர் ஒழிந்து போவதை விழி எதிரே கண்டு நிற்கின்ற நீ கைக்கொண்ட பயன் யாது? அதனைக் கருதியுணர்ந்து உறுதி தெளிந்து உய்தி பெறுக என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-19, 5:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

சிறந்த கட்டுரைகள்

மேலே