நாளின் கழிவை நினைந்து உளம் புனிதமாக ஒழுகி வருக - வாழ்நாள், தருமதீபிகை 440

நேரிசை வெண்பா

நாளின் கழிவை நறியவுயி ரின்னழிவாய்
நாளும் நினைந்து நவைஒரீஇ - நீளும்
உளம்புனித மாக ஒழுகி வருக
களம்புகுந்து நிற்கும் கதி. 440

- வாழ்நாள், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நாள் கழிவதை உயிரழிவதாக நினைந்து குற்றம் நீங்கி குணங்கள் ஓங்கிச் சித்த சுத்தியுடன் ஒழுகி வருக; முத்தி நிலை உன் முன் வந்து நிற்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் சீவிய நாள் சீவன் என்கின்றது.

தாம் சுகமாக வாழவேண்டும் என்றே சீவ கோடிகள் யாண்டும் ஆவல் கொண்டு அலைகின்றன. உயிரினங்களின் போக்கும் நோக்கும் துயரினங்களை நீக்கி உயரினங்களாகவே ஊக்கி நிற்கின்றன.

பசிப்பிணியை உணவு நீக்குகின்றது; ஆதலால் மனிதன் அதனை விழைகின்றான்; விழைந்தது கிடைத்தவுடன் உள்ளமுவந்து கொள்கின்றான். இவ்வாறே எல்லா இன்பங்களும் துன்பங்களை நீக்கிக் கொள்ளும் அளவில் தொடர்ந்து வருகின்றன. அதனால் மனித வாழ்வுகள் எவ்வழியும் அவலக் கவலைகள் அடர்ந்து படர்ந்தன என்பது விளங்கி நின்றது. இத்தகைய நிலையில் சீவிய காலம் ஓவியமாய்க் கழிந்து வருகின்றது.

’நாளின் கழிவு உயிரின் அழிவு’ காலம் கழிந்து போவதை உணர்ந்து கொள்வது தெளிந்த ஒரு திவ்விய ஞானமாம். உண்மை தெரிவது அரிதாதலால் நன்மையடையாமல் மனிதன் புன்மையாய்ப் போகின்றான்.

ஆயுள் ஒருவனுக்கு அறுபது ஆண்டுகள் வரை அமைந்துள்ளதாக வைத்துக் கொள்வோம்; அவற்றுள் ஒருநாள் கழியின் அவன் சிறிது செத்தவன் ஆகின்றான். நாள் கழிந்து போகுந்தோறும் ஆள்.அழிந்து வருதலால் அக் கழிவு ’அழிவு’ என வந்தது.

மனிதன் விடுகின்ற ஒவ்வொரு மூச்சிலும் உயிர் போய்க்கொண்டே இருக்கின்றது. அம்மூச்சைத் தரும சிந்தனையோடு வெளி விடுகின்றவன் மறுமையில் அழியாத இன்ப நலனை அடைந்து கொள்கின்றான்; அங்ஙனம் செய்யாதவன் இறுதி மூச்சோடு வறியனாய் முடிந்து அடுதுயரில் வீழ்கின்றான்.

காலம் கழிவதைக் கருதியுணர்ந்து வாழ்வை மேலான இன்ப நிலையமாகச் செய்து கொள்வதே சாலவும் நன்மையாகும்.

We should count time by beart-throbs. He most lives who thinks most feels the noblest, acts the best. -James Bailey

இருதயத் துடிப்புகளைக் கொண்டு காலத்தை நாம் கணித்துக் கொள்ள வேண்டும்; நன்மைகளை நினைந்து, உயர்ந்த தன்மைகளை உணர்ந்து, சிறந்த கருமங்களைப் புரிந்து வருகிற அந்த மனித வாழ்வே மாண்புடையதாம்’ என ஜேம்ஸ் பெய்லி என்னும் மேல்நாட்டுப் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிறார்.

கடிகாரத் துடிப்பு போல் இதயத் துடிப்பு காலக் கழிவைக் காட்டுகின்றது; அந்த உள்ளத் துடிப்புகளுள் நல்லதை எடுத்து எவ்வழியும் வாழ்நாளை நன்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

மனிதனுடைய வாழ்நாளின் முடிவு மரணம் எனப்படும். இளமை, மூப்பு என்பன அந்த மரண யாத்திரையின் இடையே சிறிது தங்கியிருக்கும் நிலையங்களாயுள்ளன.

முதல்நிலை கழியும் முன்னரே பிறவிப் பயனை அடைந்து கொள்ள வேண்டும்; இன்றேல் பிழை மிகப்படும் என்.று மேலோர் பலவாறு பரிந்து எச்சரித்து நிற்கின்றனர்.

நேரிசை வெண்பா

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்(று) ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39 நல்வழி

முப்பது வயதுள் மனிதன் பிறவிப் பயனைப் பெறவில்லை என்றால் பின்பு அவன் பிழையாய் நிற்க நேர்வான் என ஒளவையார் இவ்வாறு பாடியிருக்கிறார். இந்தப் பாட்டைக் கவனமாய் படித்துப் பாருங்கள். உவமான உவமேயங்கள் நவமான நயங்கள் படிந்துள்ளன.

காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களும் நீங்கி ஒரு பொருளான கடவுளைப் பருவமுள்ள பொழுதே உரிமையாய் மருவிக் கொள்; அங்ஙனம் கொள்ளாது விடின் உன் கல்வியறிவு புல்லிதாய் இழியும் என்று இவ்வாறு சொல்லியுள்ளார். நூலறிவுக்குப் பயன் வாலறிவனை மருவுதலேயாதலால் கலையும் கடவுளும் ஒரு நிலையில் வந்தன.

பரம பதியைத் தோயாதவன் கலை, தன் பதியைத் தோய முடியாத கிழவி முலை போல் ஒரு சுவையுமின்றி வீணே நாணமாய் விழுந்து கிடக்கும் என்பதாம். பருவத்தில் பரனை மருவினவன் தருணத்தில் கணவனைக் கூடிய பருவ மங்கை போல் பேரின்ப போகங்கனை நுகர்ந்து மகிழ்ந்து திகழ்கின்றான்.

சீவான்மா பரமான்வைச் சேர்ந்து கொள்வதே பிறவிப் பேறான பேரின்ப நிலையாம். அடையவுரியதைப் பருவம் தவறாமல் அடைந்து கொண்டவன் அமரனாகின்றான்; அடையாதவன் கடையனாய் இழிகின்றான்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

வேற்கண் மடவார் விழைவொழிய யாம்விழையக்
கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற்(று) உழையதா
நாற்ப(து) இகந்தாம் நரைத்தூதும் வந்ததினி
நீத்தல் துணிவாம் நிலையா(து) இளமையே. 40 வளையாபதி

நாற்பது வயது கழிந்தது; மரண தூதுவனைப் போல் நரையும் வந்தது; எமனும் அயலே நிற்கின்றான்; உயிர்க்குப் பயனை நாடி இனி உய்தி பெறவேண்டும் என ஒரு மெய்யுணர்வாளன் எண்ணியுள்ளமையை இச்செய்யுளில் காண்கின்றோம்.

மூப்பு வருமுன்னே சீவனுக்குக் காப்பைத் தேடிக் கொள்வது நலம்; இளமையில் பழகிய பழக்கமே முதுமையிலும் தொடருமாதலால் காலம் கழியுமுன்னரே ஞான சீலங்களில் ஒழுகி வருவது விழுமிய மேன்மையாய் விளைந்து வருகின்றது.

Be wise with speed: A fool at forty is a fool indeed. - Young

'இளமையிலேயே ஞானம் உடையவனாகுக: நாற்பதில் மூடனாயுள்ளவன் என்றும் முழு மூடனே ஆவான்' என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. பாலியத்திலேயே சீலவேலி கோலி சீவியம் பெறுக எனக் காவியங்கள் யாவும் போதித்து வருகின்றன.

’உளம் புனிதம் ஆக ஒழுகி வருக’ மனம் தூய்மையே எல்லா மேன்மைகளுக்கும் மூல காரணமாயுள்ளது. சித்த சுத்தியால் கருதிய சித்திகள் யாவும் எளிதே கைகூடுகின்றன. அந்தப் புனித உளம் இளமையிலேயே அமையின் அவன் தனி மகிமை அடைகின்றான்.

’களம் புகுந்து நிற்கும் கதி’ என்றது உள்ளம் புனிதமுடையார்க்கு உளவாம் உறுதி நலனை உணர்த்தியது.

மாசற்ற மனம் ஈசனுக்கு இடமாகின்றது. ஆகவே கதிநிலை அவன் எதிர் வருகின்றது. களம் - இடம், மனம்,

ஆயுள் விரைந்து கழியும் இயல்பினது; பருவம் ஒருவுமுன் தருமநலம் மருவி உய்வது இருமையும் பெருமையாம். தேகபோகங்களையே நச்சிச் சாகாதே; சீவ உய்தியைச் செய்து தேவ கதியை மேவிக் கொள்ளுக.

கலிவிருத்தம்
2619
இருந்திளமைக் கள்ளுண்(டு) இடைதெரிதல் இன்றிக்
கருந்தலைகள் வெண்தலைகள் ஆய்க்கழியும் முன்னே
அருந்தவமும் தானமும் ஆற்றுமினே கண்டீர்
முருந்தனைய தூமுறுவல் முற்றிழையார் சேரி. விசயமா தேவியார் துறவு, முத்தி இலம்பகம், சிந்தாமணி

பொறி வெறிகளிலேயே அழுந்தி உழந்து வறிதே அழிந்து போகாதே; நரை வருமுன் நல்லது செய்து உய்க என இது உறுதி கூறியுளது. உரைகள் உயிர்களின் நலன்களை உணர்த்துகின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

எரிபுரை எழில தாய
..இளம்தளிர் இரண்டு நாளின்
மரகத உருவ மெய்தி
..மற்றது. பசலை கொண்டு
கருகிலை ஆகி வீழ்ந்து
..கரிந்துமண் ஆதல் கண்டும்
வெருவிலர் வாழ்து மென்பார்
..வெளிற்றினை விலக்க லாமே. சூளாமணி

மரத்தில் கிளைத்த ஒரு தளிர் செந்நிறமாய்த் திகழ்ந்து பசிய இலையாய் மாறிப் பின்பு பழுத்துச் சருகாய்க் கரிந்து விழுதலைக் கண்டும் மனிதன் உறுதிநலம் காணாமல் தன் காலத்தை வீண்கழித்து விளிகின்றானே! என்று இது பரிந்து பகர்ந்துள்ளது.

நிலைமை தெரியாமல் வீணே மூத்து விளியாதே; பருவம் உள்ள பொழுதே உன் உயிர்க்கு நன்மையைப் பார்த்து வருக,

உனக்குச் சீவிய நிலையமாய் வாய்த்துள்ள வாழ்நாளை யாதும் பழுதாகாமல் ஆன்ம சிந்தனையுடன் மேன்மை அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Sep-19, 4:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

சிறந்த கட்டுரைகள்

மேலே