உலகில் உயிரெல்லாம் ஆசைக் கடல்வீழ்ந்து அலறுமால் - நசை, தருமதீபிகை 441

நேரிசை வெண்பா

ஓசைக் கடல்சூழ் உலகில் உயிரெல்லாம்
ஆசைக் கடல்வீழ்ந்(து) அலறுமால் - பேசரிய
துன்பம் அடைந்தும் தொடர நினைந்திலதே
இன்பம் இருக்கும் இடம். 441

- நசை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அலைகளை வீசி முழங்குகின்ற கடல் சூழ்ந்த உலகில் உடல் சூழ்ந்த உயிர்கள் யாவும் ஆசைக் கடலில் வீழ்ந்து அலமருகின்றன; சொல்ல முடியாத கொடிய துன்பங்களை அனுபவித்தும் நல்ல இன்ப நிலையை நாடியுணராமல் இருக்கின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயிர் வாழ்வு பலவகை மருள்களில் படிந்து அலையிடைத் துரும்புபோல் நிலைகுலைந்து அலைந்து மயங்கி இயங்கி வருகின்றது. பசியும் காமமும் உடலையும் உயிரையும் தொடர்ந்து அடர்த்து வருதலால் சீவ கோடிகள் ஓயாது ஓடி உளைந்து உழலுகின்றன.

'பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க’ - மணிமேகலை

என வாழ்த்தித் தெய்வத்தை வழிபாடு செய்துள்ளமையால் வையத்தவர்களின் வாழ்க்கைக் கவலைகளை நன்கு அறியலாகும்.

மனிதன் முன்னும் பின்னும் எண்ணி அறியும் இயல்பினனாதலால் எண்ணரிய இச்சைகள் அவன் உள்ளத்தில் இடம் பெறலாயின. அவற்றுள் ஆசை என்பது உச்ச நிலையில் ஓங்கியுள்ளது. அளவு மீறியது அவலமாய் மாறியது.

நினைவு, எண்ணம், விருப்பம், வேட்கை, ஆசை என்னும் இவை ஒன்றினும் ஒன்று கிளர்ந்து வளர்ந்து உயர்ந்து நிற்கின்றன.

தனக்கு ஒரு பொருள் வேண்டும் என்.று மனிதன் நினைக்கின்றான். அது ’நினைவு’ என நேர்ந்தது. அந்த நினைவு தொடர்ந்து நிகழ்ந்து ’எண்ணம்’ என வந்தது. அந்த எண்ணம் விரிந்து எழுந்தது ’விருப்பம்’ என நின்றது. அவ் விருப்பம் வீறு கொண்டு விரைந்தது ’வேட்கை’ என விளைந்தது. அவ் வேட்கை எல்லை கடந்து சென்றது ’ஆசை’ என்று. சொல்ல அமைந்தது.

இது பலவகை நிலைகளில் பரவி உயிரினங்களை மருவி ஊசலாட்டி வருகின்றது. அவ்வுருவங்களுக்கும் பருவங்களுக்கும் உரிய பெயர்கள் அமைந்தன. சில கீழே வருகின்றன.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

மாதர்நச்(சு) இச்சை ஏடை வயாநம்பு நசைந யப்புக்
காதல்வெப் பம்வி ருப்பம் காமமே இராகம் பற்றே
ஆதரம் பெட்பு வேட்கை ஆர்வமே மேவல் வெஃகல்
ஓதிய விழைவு மூவேழ் உறுபெயர் ஆசை ஆமே. - நிகண்டு

ஆசையின் பரியாயமாய் இங்கே இருபத்தொரு நாமங்கள் வந்துள்ளன. யாவும் காரணப் பெயர்கள்.

தன்னுள் வீழ்ந்தவர் எல்லை காண முடியாமல் அல்லல் உழந்து ஆழ்ந்து படுதல் கருதி ஆசையைக் கடல் என்றது..

ஆசைச் சுழற்கடலில் ஆழாமல் ஐயா,நின்
நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ'

ஈசனை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு கூறியிருக்கிறார். கடலில் விழுந்தவன் கப்பல் தலைவனை அலறி அழைத்தது போல் கதறியுள்ளார். சுழல் கடல் என்றதனால் எவரையும் சுழித்து இழுத்துத் தன்னுள் அழுத்தி ஆழ்த்தும் அபாய நிலை அறியலாகும்.

’ஆசைக்கடல் வீழ்ந்து அலறுமால்’ என்றது ஆசைப் பிணிப்புகளிலிருந்து மீளமுடியாமல் சீவர்கள் பரிதபித்து உழலும் பாடு தெரிய வந்தது. மெய்யுணர்வுடையவரும் அதை ஒழித்து உய்ய மாட்டாமல் ஐயகோ! என அலறியுள்ளனர். பாசப் பிணிப்பு படுதுயர் ஆகின்றது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

ஆசைவன் பாசம் எய்தி
..அங்குற்றேன் இங்குற் றேனாய்
ஊசலாட் டுண்டு வாளா
..உழந்துநான் உழித ராமே
தேசனே! தேச மூர்த்தி!
..திருமறைக் காடு மேய
ஈசனே! உன்தன் பாதம்
..ஏத்துமா(று) அருளெம் மானே! 8 – 076 பொது, நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

திருநாவுக்கரசு நாயனார் இறைவனை நினைந்து இங்ஙனம் மறுகியிருக்கின்றார் வலிய பெரிய இரும்புச் சங்கிலியாய் உள்ளத்தை ஆசை பிணித்துள்ளமையால் அதனைத் தள்ளி நீங்க முடியாமல் உயிர் தளர்ந்து தவிக்கின்றது.

எழுசீரடியாசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

ஆசைவன் பாசத் திரளினால் கட்டுண்(டு)
அரும்பிணி ஈக்கடிக்(கு) அணுங்கி
ஏசுறு போகக் கதைகளால் மொத்துண்(டு)
இச்சைமுட் கோலினால் உலைந்து
காசுறு கருமச் சேற்றிலே அழுத்திக்
கடுஞ்சகக் காட்டிலே சுழன்று
வீசுமா மோகத் தளிர்நிழல் துயிலும்
வீரனே சீவனாம் எருது. 1

மேவுறு துன்பப் பெருஞ்சுமை சுமந்து
மீட்சிபோக் கிவைஉடற் புண்ணா
ஈவறு பிறவிக் குழியில்வீழ் சீவ
எருத்தினை இக்குழி நின்றும்
ஒவலின் முயல்வால் எடுப்பதே வலியாம்;
உயர்ந்தஞா னிகளுற உளதேல்
நாவிகர் நாவாய் தருவபோல் ஊகம்
நல்குவர் பவக்கடல் கடக்க. 2

எவ்விடத் தில்லை நல்லஞா னிகளாம்
ஈர்ங்கனி மலர்குளிர் சோலை
அவ்விடம் கானல் மேடதாம்; ஆங்கே
அமர்பவர் அறிவிலா ரன்றோ?
கவ்விய செல்வம் நட்புநூல் சுற்றம்
கருமமா திகள்எலாம் உதவா:
செவ்விய மனமே உதவுறல் வேண்டும்
சீவனைச் செல்கதி ஏற்ற. 3 ஞான வாசிட்டம்

இந்தப் பாடல்களில் வந்துள்ள உருவக நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். சீவன் ஆகிய எருது, ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு, அல்லல்களாகிய ஈக்கள் கடிக்க, காம இச்சையாகிய தாற்றுக் கோலினால் அடியும் குத்தும் பட்டு, கருமச் சேற்றில் அழுந்தி, உலகக் காட்டில் அலைந்து, சிற்றின்பமான குளிர்மர. நிழலிலே சிறிது கண் அயர்ந்து எழுந்து, பெரும் பாசங்களைச் சுமந்து பிறவிக் குழியில் விழுந்து வருந்துகின்றது. திவ்விய குரு அல்லது செவ்விய மனம் துணை கிடைக்குமாயின் அது உய்தியடையும் என இது உணர்த்தியுள்ளது.

மனித வாழ்வை இனிது சித்தரித்திருக்கும் இக் காவிய ஒவியத்தைக் கருதி நோக்கிச் சீவிய நிலைகளைச் சிந்திக்க வேண்டும்.

ஆசைக் கயிற்றில் அகப்பட்டு உறுதி நலன் ஒன்றும் கருதாமல் ஓயாது உழைத்து வருதல் நோக்கிச் சீவனை மாடு என்றது. பாடுபட்டு எவ்வளவு பணம் தேடி வைத்தாலும், வயது முதிர்ந்தவுடன் மனைவி மக்கள் அவனை மதியாது போகின்றனர். 'கிழட்டு மாட்டைப் புழக்கடையில் கட்டு' என இந்நாட்டில் வழங்கிவரும் பழமொழியைக் கிழவர் எவரும் தமக்குக் கிழமையாகச் சொல்லிக் கொள்ளுகின்றனர்.

பாசம் – கயிறு, வன்மை அதன் தன்மையை உணர்த்தியது. ஆசைக் கூட்டங்களைத் ’திரள்’ என்றது.

'ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்'

என மனித வாழ்வைக் குறித்துப் பட்டினத்தார் இங்ஙனம் பாடியிருக்கிறார். பல பிறவிகளிலும் உயிர்களை ஒயாமல் ஆட்டி வருதலால் ’ஆசைப் பூட்டு ஊசல் ஆட்டு’ என நேர்ந்தது.

நேரிசை வெண்பா

ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கி
பூசிப் பொதிந்த புலாலுடம்பு - ஊசல்
கயிறற்றாற் போலக் கிடக்குமே கூற்றத்(து)
எயிறுற்(று) இடைமுரிந்தக் கால். 113 அறநெறிச்சாரம்

உயிர் பிரிந்த போது உடல் கயிறற்ற ஊஞ்சல் பலகை போல் தரையில் கிடக்கும் என இது காட்டியிருக்கும் காட்சியைக் கருதிக் காணுக; உயிர் வாழ்வு துயர் வீழ்வாய் முடிகின்றது.

துன்பம் அடைந்தும் இன்பம் நினைந்திலதே! ஆசையால் அல்லல் பல உழந்துமதனை ஒல்லையில் ஒருவி நல்ல சுகம் நாடாமல் மனிதன் மடமையால் மடித்துள்ளானே! என்று மறுகி இரங்கி பரிவு கூர்ந்து வந்தது.

உணர்வை நிலை குலைத்து உள்ளத்தைச் சூறையாடுதலால் ஆசையைக் சூறாவளி என்பர். சூறைக்காற்றில் அகப்பட்ட செத்தைகளைப் போல் ஆசைச் சுழலில் அகப்பட்ட சீவர்கள் யாதும் அமைதியின்றி அலமந்து உழலுகின்றனர்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

ஆசையுட் பட்டவர் அல்லற் பட்டவர்;
ஆசையுட் பட்டவர் அளற்றிற் பட்டவர்:
ஆசையுட் பட்டவர் அயர்விற் பட்டவர்;
ஆசையுட் பட்டவர் அரங்கப் பட்டவர். 1

ஆசையில் லார்களே அறவர் மேலவர்;
ஆசையில் லார்களே அருந்த வத்தினர்;
ஆசையில லார்களே அருட்க லப்பினர்
ஆசையில் லார்களே அரிய முத்தர்கள், 2 காசி ரகசியம்

ஆசை உற்றவர் நிலைமையும், அற்றவர் தலைமையும் இவை தெற்றென விளக்கியுள்ளன. ஆசை அல்லல் எனப் பழமொழியாகவும் வெளி வந்துள்ளது.

தனது விருப்பத்தை முறையான வகையில் பயன்படுத்தி நிறையோடு நிதானமாய் நடத்திவரின் அந்த மனித வாழ்வு இனிமையுடையதாம்: அங்ஙனம் இன்றிப் பேராசை மண்டி நின்றால் அது தீராத துன்பமாம்.

நெருப்பை அடுப்பில் வைத்துப் பாகம் செய்து கொள்வது போல் உன் விருப்பை அளவாக இருத்திப் போகம் செய்து கொள்க; அளவு மீறினால் கூரையில் ஏறிய தீபோல் ஆசை உன்னை மோசம் செய்து நாசம் ஆக்கி விடும்.

ஆசை வெறி மீறி நாசம் அடையாமல் வாழ்வை யோசனையுடன் வாசமாய் நடத்தி ஈசனருள் நாடித் தேசு பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-19, 10:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

சிறந்த கட்டுரைகள்

மேலே