வறுமை வேண்டும் எனவே விழைந்து கொள்வர் - வறுமையின் பெருமை, தருமதீபிகை 451

நேரிசை வெண்பா

பொறிபுலன்கள் இன்பம் பொருந்தஒன்(று) இல்லா
வறிய நிலையே வறுமை; - அறிவரதை
வேண்டும் எனவே விழைந்துகொள்வர்; உள்ளதையும்
வேண்டாம் எனவே வெறுத்து. 451

- வறுமையின் பெருமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மெய், வாய் முதலிய பொறிகள் நுகரவுரிய போகப் பொருள்கள் யாதுமில்லாமையே வறுமையாம்; நல்ல அறிஞர் தமக்கு உள்ள பொருள்களையும் வேண்டாம் என வெறுத்து விடுத்து அந்த இன்மையை விரும்பிக் கொள்ளுகின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் வறுமையின் நிலைமையை உணர்த்துகின்றது.

உலகப் படைப்பு அதிசய வினோதம் வாய்ந்தது. எவ்வகையிலும் அளவிடலரியது. யாண்டும் எதிர் பொருள் உடையது. பகல் இரவு, பிறப்பு இறப்பு, விழிப்பு உறக்கம், ஒளி இருள், புகழ் பழி, புண்ணியம் பாவம், மெய் பொய், மேல் கீழ், நன்மை தீமை, மேதை பேதை, இன்பம் துன்பம், பெருமை சிறுமை, வெற்றி தோல்வி, கல்வி மூடம், செல்வம் வறுமை என இன்னவாறு யாவும் இரட்டைகளாய்ப் பின்னிப் பிணைந்துள்ளன.

நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தம்முள் மாறுபாடு உடையனவாதலால் அவற்றின் கூறுபாடுகளாய் வந்தனவற்றுள் வேறுபாடுகள் விரிந்திருக்கின்றன. பேதங்களாய் விரிந்துள்ளதே உலகம் என வேதங்கள் வரைந்துள்ளன. எல்லையில்லாத இந்தப் பேத விரிவுகளில் அபேத நிலையை ஓர்ந்து தெளிவதே தேர்ந்த ஞானமாம். ஞாலத்தையும், காலத்தையும், கோலத்தையும், மூலத்தையும் கருதியுணருந்தோறும் அரிய அதிசயங்கள் பெருகி விரியும். குறுகிய அறிவால் அறிய முடியாது.

அனுபவ அறிவும் அனுமான உணர்வும் மனித மரபுள் மருவியுள்ளமையால் இயன்ற அளவு எதையும் துணுகி ஓர்ந்து சிந்தனை செய்து தெளிந்து கொள்ளுகின்றது.

தனக்கு இதமானதை உவந்து கொள்ளுவதும்,. இதமல்லாததை இகழ்ந்து தள்ளுவதும் மனிதனிடம் இயல்பாக அமைந்திருக்கின்றன. உணவு, உடை, மனைவி முதலிய இனிய துணைகளை அவன் நனி விழைந்து நிற்கின்றான்.

உலக போகங்களை உதவி வருதலால் பொருள் மேல் பேராசை கொள்கின்றான்; அது இல்லாத நிலை பொல்லாதது என்று மிகவும் அஞ்சி அயர்கின்றான். அந்த அச்சம் உச்சநிலையில் எங்கும் பரவியுள்ளது. அது கொச்சை என வறுமையின் பெருமையை உரிமையோடு தெளிந்து கொள்ளும்படி இது தெளிவு கூறுகிறது.

வறுமை என்றால் என்ன? வறந்தது; வற்றியிருப்பது எனப் பொருள் வளம் குறைந்துள்ளமையைக் குறித்து நின்றது. இந்த வறுமைக்கு எதிர்மறையாய் நிற்பது செல்வம் என வந்தது. இதனை எல்லாரும் பேராவலோடு விரும்பியுள்ளனர். இதனை விரும்பாதவர் மிகவும் அரியர்.

எல்லாவற்றையும் துறந்து பரம்பொருளே தஞ்சம் என்று நெஞ்சம் துணிந்து நெடுவனம் போன பெரிய துறவிகளும், அரிய தவசிகளும் செல்வத்தைக் கண்டபோது உள்ளம் மயங்கி எள்ளலையும் மறந்து அதனை விழைத்து கொள்ளுகின்றனர்.

நேரிசை வெண்பா

மண்ணாசை பெண்ணாசை மற்றுமுள்ள ஆசைஎல்லாம்
ஒண்ணா(து) எனவெறுத்த யோகியர்கள் - பண்ணுதவ
மாண்புடையோர் ஒன்றான வத்துவைக் கண்டாலும் உன்னைக்
காண்பதிலே ஆசை கணக்குண்டோ? - பணவிடு துாது

ஆசை கடந்த ஞானிகளும் பொருளில் மருள் கொண்டுள்ளமையை இது காட்டியுள்ளன. கடவுளை ஒன்று ஆன வத்து என்றது. பரமனை நேரே கண்டு மகிழ்கின்ற மவுன யோகிகளும் பணத்தைக் கண்டபொழுது வாயைப் பிளந்து ஆசை மண்டி நிற்கின்றனர் என்றமையால் அதன் மாய மயக்கம் அறியலாகும்.

செல்வத்தை இங்கனம் எவரும் எவ்வாறு அவாவி வருகின்றனரோ அவ்வாறே வறுமையை யாவரும் அஞ்சி நிற்கின்றனர். செல்வத்தை வேண்டாம் என்று வெறுத்து விடுபவரினும் வறுமையை வேண்டும் என்று விரும்பிக் கொள்பவர் மிகவும். அதிசயமான அரிய நிலையினர்; எவரும் துதி செய்யும் நெறியினர்.

’அறிவர்’ அதை வேண்டும் எனவே விழைந்து கொள்வர். எல்லாரும் அஞ்சி வெறுக்கின்ற வறுமையைத் தமக்கு உரிமையாக வேண்டும் என்று. விரும்பிக் கொள்கின்ற அற்புத நீரரை இது குறித்து நின்றது. மெய்யுணர்வுடைய தத்துவ தரிசிகளை ’அறிவர்’ என்றது. உலக பந்தங்களை ஒருவி உயர்கதி அடையவுரியவர் பொருளை மருள் என்று தள்ளி வறுமையைப் பெருமையாக மருவிக் கொள்ளுகின்றனர்.

பகீரதன், சிகித்துவசன் என்னும் முடி மன்னரும் தமது பெரிய அரச செல்வங்கள் யாவும் வேண்டாம் என்றறவே துறந்து மறுமையையும் விரும்பாமல் வறுமையை மருவி மகிழ்ந்திருந்தனர். யாதொரு பொருளும் இல்லாமல் தனியே இருக்கும் பொழுது ஏதோவோர் அரிய பேரின்பம் உள்ளதாக அவர் கூறியிருக்கின்றனர்.

பற்றின்றித் தனிஇருக்கும் மனத்தைப்போல் பனிமதியும்
பதுமத் தோனும்
பொற்றிரள்சேர் இந்திரனும் சுகமடையார். - ஞான வாசிட்டம்

தான் அனுபவித்துள்ள ஆனந்த உண்மையைச் சிகித்துவசன் இவ்வாறு உலகம் அறிய உரைத்துள்ளான்.

’கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்'

என்று குலசேகரன் என்னும் சேர மன்னன் இவ்வண்ணம் சொல்லி .அரச செல்வத்தை வெறுத்து இல்லாமையோடு கூடி இன்பம் அடைக்கிருக்கிறான்.

மாணிக்கவாசகரும், தாயுமானவரும் சிறந்த மந்திரி பதவியையும், உயர்ந்த செல்வங்களையும் வேண்டாம் என்று தள்ளி விடடு வறுமையை உவந்து கொண்டு பெருமை பெற்றுள்ளனர். அரசு விழை திருவோடு உயர்ந்திருந்த பட்டினத்தார் அனைத்தையும் துறந்து அகிலமும் தொழ நின்றுள்ளதை நினைத்து நோக்கின் செல்வத்தின் சிறுமையையும், வறுமையின் பெருமையையும் நன்கு தெளிந்து கொள்ளலாம்.

உலக நோக்கில் கொடுமையாகத் தோன்றுகின்ற வறுமையை மதிமான்கள் சிலர் இனிமையாகத் தழுவிக் கொள்ளுகின்றனர்.

இன்மை ஒருவற்(கு) இளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். 988 சான்றாண்மை

வறுமையுறினும் சால்புடையார் பெருமையுறுவர் என இஃது உணர்த்தியுள்ளது. இன்மைக்கும் சான்றோர்க்கும் உள்ள உறவுரிமையும் உண்மை நிலையும் இங்கே நுண்மையாக உணர வந்தது. நல்குரவு நல்லோர்க்கு நல்வரவாயுள்ளது.

பொருள் இல்லாமலே அருளுடையார் தம் உள்ளப்பண்பால் உயர்ந்த மகிமைகளை யடைந்து சிறந்து மகிழ்ந்துள்ளனர்.

My mind to me a kingdom is!
Such present joys therein I find
That it excels all other bliss
That earth affords, or grows by kind:
Though much I want which most would have,
Yet still my mind forbids to crave. - Edward Dyer

'என்னுடைய மனமே எனக்கு ஒரு இராச்சியம்; உலக இன்பங்கள் எவற்றிலும் மேலான ஆனந்தத்தை அங்கே அனுபவிக்கின்றேன்; நான் வறியனாயினும் யாரிடமும் எதையும் விரும்புவதில்லை’ என்னும் இது இங்கே அறிய உரியது.

வறுமை சிறுமை தரும்; துன்பம் புரியும் என்று. பொதுவாகக் கருதப்படினும் அதனைப் பெருமையாகவும் இன்பமாகவும் மகான்கள் மருவி மகிழ்கின்றனர்; மன நிறைவோடு எளிமை தழுவி வருகின்ற அந்த உண்மையை உய்த்துணர்ந்து நன்மையுற அறிவுறுத்துகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-19, 10:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே