உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள்

உடைந்து போயிருக்கும்
ஒரு பெண்ணைக் காதலியுங்கள்
தனிமையை நாடி
எங்கோ வெறித்துப் பார்க்கும் விழிகளோடு,
நினைவுகளிலும்,
படபடப்பிலும்
அவள் தொலைந்திருப்பாள்

எல்லாக் குழப்பங்களையும்
தலைக்குள் ஏற்றிக்கொள்ள முடியாமல்,
இதயத்தின் துயரங்களை எல்லாம்
வார்த்தையில் வடிக்க முடியாமல்,
"நான் நல்லாத்தான் இருக்கேன்." என்பாள்
அவள் போராட்டக்குணத்தை இழந்துவிடவில்லை,
பயனற்ற ஒன்றுக்கு போராடுவதையே
அவள் நிறுத்திவிட்டாள்

உடைந்து போயிருக்கும்
ஒரு பெண்ணைக் காதலியுங்கள்
எல்லாம் சரியாகிவிடும் என
அவளிடம் சொல்லாதீர்கள்
அது மாறவே மாறாது
என்கிற அளவிற்கு
அவள் அதனோடு போராடி ஓய்ந்து விட்டாள்
அதற்கு மாறாக,
ஒவ்வொன்றாகச் சரி செய்ய
அவளுக்கு உதவுங்கள்
இதுவும் கடந்து போகும்
என ஆறுதல் சொல்லாமல்
கடக்க உதவுங்கள்
அவளுக்கு
யாருடைய உதவியும் தேவையில்லை
எனினும், அதைக்குறித்து
அவள் வருந்தவில்லை

உடைந்து போயிருக்கும்
ஒரு பெண்ணைக் காதலியுங்கள்
அவள் உடைந்து போயிருக்கலாம்
எனினும்,
அவள் வலிமையோடு
எழுந்து நிற்பாள்
கானல் நீராகிப் போன கனவுகள்
அவளை வாட்டினாலும்
எப்படி வாழ்வது என்றும்,
இதயம் காயப்பட்டுக்
கண்ணீர் வடித்தாலும்
எப்படி அன்பு செய்வது என்று
அவள் கற்பிப்பாள்
எப்படி அச்சமில்லாமல் இருப்பது என்று
நரகத்துக்குச் சென்று திரும்பிய
அவள் கற்பிப்பாள்
அவளை அச்சப்படுத்தக் கூடியது
எதுவுமில்லை
உங்களுக்கு எப்பொழுதும் கைகொடுக்கும்
உங்கள் மீது நீங்கள்
வைக்க வேண்டிய நம்பிக்கையை
அவள் புலப்படுத்துவாள்.

உடைந்து போயிருக்கும்
ஒரு பெண்ணைக் காதலியுங்கள்
புதிராகப் பரவசப்படுத்தும்
அவளை விடுவிக்க முயன்று
மகிழ்ச்சியைச் சுவைப்பீர்கள்
எனினும்,
அவளை உங்களால்
எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாது
அவளைப் புரிந்து கொள்ள
முயலாதீர்கள்
அவளுக்கே அவளைப்பற்றிய
புரிதல் இல்லாத பொழுது
உங்களால் எப்படி
அவளைப் புரிந்து கொள்ள முடியும்?

தன்னுடைய வாழ்வின்
போராட்டங்களை
மனதின் பக்கங்களில்
எழுதிச் செல்லும் திறந்த புத்தகம் அவள்
அவளின் வாழ்வின்
இறுதிக்கணம் வரை நீளும்
அந்தப் புத்தகத்தை
நீங்கள் ஒரு கணமும் வாசிக்காமல்
இருக்க முடியாது
அவளின் கொடுங்கனவுகளில்
இருந்து
பேய்க்கதைகளையும்
வலிகளில் இருந்து
கவிதைகளையும்
அவள் படைப்பாள்.

உடைந்து போயிருக்கும்
ஒரு பெண்ணைக் காதலியுங்கள்
அவளை யாரும் ஏற்றுக்கொள்ளவோ,
அன்பு செய்யவோ தேவையில்லை
அவளை யாரும் காப்பாற்றவும்
வேண்டியதில்லை
அவளின் நினைவு
நரகத்தின் பூதங்களை ஊற்றெடுக்கும்
மனதின் குழப்பங்களில்
உயிரூட்டி உலவ விடுகிறாள்
அந்தப் பூதங்களை விரட்டாதீர்கள்
அவை மனிதர்களைப் போல
ஆபத்தானவை அல்ல
அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு,
அவளின் மனவெளியில்
ஒரு நடை போங்கள்.

அவளின் கலைப்பண்பால்
மாற்றப்பட்டுவிட்ட
உலகின் மகத்தான இடத்தைக்
காண்பீர்கள்
அவளின் பிணைந்த நினைவுகள்
கொடிகள் போலக் கூடிச்சிரிக்கும்,
படபடப்பு மரங்கள்
அவளின் தலையில் வேர்விட்டிருக்கும்,
நம்ப முடியாத இடங்களில்
நம்பிக்கை மலர்கள்
பூத்துக் குலுங்கும்
அவளின் நம்பிக்கையின்மை
தழைக்கும்
மண்ணில்
ஆங்காங்கே தன்னம்பிக்கை,
அன்பு விதைகள் தூவிக் கிடக்கும்
கருணை நதி பாய்ந்து ஓடும்
பிரபஞ்சத்தைப் போல அழகும்,
முடிவற்றதாகவும்
அவளின் இதயம் இருப்பதை
மேலும்
அவளின் மனவெளியின் பரப்பில்
நடமாடுகையில் கண்டு பிரமிப்பீர்கள்

உடைந்து போயிருக்கும்
ஒரு பெண்ணைக் காதலியுங்கள்
அவள் பெரிதாக
எதுவும் கேட்க மாட்டாள்
எதிர்பார்ப்புகள்
பிரிவில் முடியும்
என அவள் அறிவாள்
அவளைக் காயப்படுத்தி விடுவோமோ
என அஞ்ச வேண்டியதில்லை
அவளுக்குக் கொடுத்திருக்கும்
வாக்குறுதிகளைத்
தெரியாமல் மீற நேரிடுமோ
எனக் கவலை கொள்ள
வேண்டியதில்லை
வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும்
என்றே அவள் எதிர்பார்க்க மாட்டாள்
மனிதர்கள் வாழ்க்கைக்குள்
வருவது விட்டு விலகத்தான்
என அறிந்திருப்பதால்
அவள் மிக மோசமானவற்றுக்கும்
தயாராகவே இருக்கிறாள்
இந்தப் பாதையில்
அடிக்கடி பயணத்திருப்பதால்
அவள்
தொலைந்து விடமாட்டாள்

உடைந்து போயிருக்கும்
ஒரு பெண்ணைக் காதலியுங்கள்.
உலகம் உங்களுக்கு அளித்த காயங்களை
அவள் ஆற்றுவாள்.
உங்களின் இதயத்தின்
உடைந்த துண்டுகளையும்,
அவளின் இதயத்தின் உடைந்த
துண்டுகளையும் இணைத்து
ஒரு அழகிய ஓவியத்தை வரைவாள்.
அது பிகாசோவின் தூரிகையையும்
தோற்கடித்து,
அவளின் வெற்றிக் குவியலின்
மகத்தான நினைவு பரிசாகும்

உடைந்து போயிருக்கும்
ஒரு பெண்ணைக் காதலியுங்கள்.
ஒரு நாள் அவள் மீண்டு வருகையில்,
இதுவரை கண்டிராத
அற்புதத்தைக் காண்பீர்கள்.
கடந்த காலம் கடந்து
பீனிக்ஸ் போல எழும் அவள்,
கதிரவனைப் போல
முழுமையான புகழில் ஒளிர்வாள்.
உலகை நம்பிக்கையோடு எதிர்கொள்வாள்.
நீங்கள் இருவரும் இணைந்து
உலகை மாற்றலாம்,
குறைந்தபட்சம்
ஒரு உடைந்த இதயத்தை மீட்கலாம்.

எழுதியவர் : தீப்சந்தினி (10-Sep-19, 3:22 pm)
பார்வை : 60

மேலே