இல்லாமை என்னும் இறைவியே - வறுமையின் பெருமை, தருமதீபிகை 452

நேரிசை வெண்பா

இல்லாமை என்னும் இறைவியே நின்பெயரைச்
சொல்லாடின் யாரும் துளங்குவார் - பொல்லாயென்(று)
எள்ளுவார்; நின்பெருமை எண்ணார்; இறையடியை
உள்ளுவரார் நீயின்றேல் ஓது. 452

- வறுமையின் பெருமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வறுமை என்னும் தெய்வமே! உன் பெயரைச் சொன்னால் யாரும் நடுங்குகின்றனர்; பொல்லாதவள் என்று இகழுகின்றனர்; நீ இல்லையானால் கடவுளைக் கருதுவார் எவர்? உனது பெருமையை ஒருவரும் உணரவில்லையே! என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் இன்மையின் தன்மையைக் கூறுகின்றது.

இல்லாமை என்பது வறுமைக்கு ஒரு பெயர். பொருள் யாதும் இல்லாத நிலைமையை அது குறித்து வந்தது. நல்குரவு முதலிய பல நாமங்களும் காரணக் குறிகளாய் அதற்கு அமைந்திருக்கின்றன

மிசைகுறை மிடியே தரித்திரம் ஒற்கம்
இலம்பாடு இலாமை நல்குரவும் வறுமை. – பிங்கலந்தை

குறைஇலம் பாடு மிச்சை குறுவாழ்க்கை மிடிநி ரப்புச்
சிறுமையே ஒற்கம் இன்மை தீயநல் குரவே அல்கல்
வறுமையின் பெயர்பன் னொன்றும் வருதரித் திரமு மாகும். - நிகண்டு

வறுமை குறித்து இவ்வாறு பெயர்கள் வந்துள்ளன. மருவிய குறிப்புகள் அதன் உருவ நிலையை உணர்த்தி நிற்கின்றன.

அதன் அருமையும் பெருமையும் கருதி இல்லாமையை இறைவி என்றது. இறைவி - பராசத்தி. இறைவனைக் காட்டியருளும் கருணைத் தாயாய் வறுமை மருவியுள்ளமையை உரிமையாய் உய்த்துணர வந்தது.

தெய்வக் காட்சி தந்து உய்வைச் செய்தருளும் உண்மையை உணராமையால் வறுமை கொடியது என்று வையம் வைய நேர்ந்தது.

’பொல்லாய் என்று எள்ளுவார்’. இல்லாமையை எல்லாரும் இகழ்ந்து வருவதை இது அகழ்ந்து சொல்லியது. வறுமை பல வகையிலும் மனிதரை வாட்டி வருதலால் உலகம் அதனை வெறுத்து வருகிறது.

பசி நோய்க்கு மருந்து ஆகிய உணவையும், உலக வாழ்க்கையில் இனிய பல உல்லாச வசதிகளையும் பொருள் உளவாக்கி அருளுகின்றன; அந்தப் பொருள் இல்லாத நிலை வறுமையாதலால் அது பொல்லாதது என எல்லாரும் அஞ்சியதனை இகழலாயினர். வறுமை குடிபுகின் எல்லாப் பெருமைகளும் அடியோடு போய் விடும் என்று முடிவு செய்து நின்றனர்.

கலி விருத்தம்
(மா மா மா மா)

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வேல் அரசே!
மிடியென்(று) ஒருபா விவெளிப் படினே. - கந்தரனுபூதி

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

பெண்டிர் மதியார்; பெருங்கிளை தானது:
கொண்டவீ றாகா: குறுப்பின் அஃகுப;
வெண்டரை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார். வளையாபதி

நேரிசை வெண்பா

கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்(று) உண்டாயின்
எல்லாரும் சென்றங்(கு) எதிர்கொள்வர்; - இல்லானை
இல்லாளும் வேண்டாள்;மற்(று) ஈன்றெடுத்த தாய்வேண்டாள்;
செல்லா(து) அவன்வாயின் சொல். 34 நல்வழி

நேரிசை வெண்பா

பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு. 285 நாலடியார்

இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். 1042 நல்குரவு

வறுமையைக் குறித்து மேலோர் இங்ஙனம் எள்ளியுள்ளனர்.

உலக வாழ்வுக்கு உதவி புரியாததை நினைந்து நெஞ்சம் கனன்று இவ்வாறு அதனை வெறுத்து இகழ நேர்ந்தனர்; ஆன்ம வாழ்வுக்கு அனுகூலமாய் நிற்கும் அதன் நீர்மையைக் கூர்மையாய் ஓர்ந்துணரும் போது யாரும் உவந்து கொள்கின்றனர்.

’நீ இன்றேல் இறை அடியை யார் உள்ளுவார்?’ வறுமையை நோக்கி இவ்வாறு வினவியது அதன் உரிமை உண்மைகளை உலகம் கூர்ந்துணர்ந்து கொள்ள வந்தது. யாதும் இல்லாத போதுதான் எல்லாம் உடையானைச் சீவர்கள் உள்ளி உருகுகின்றனர்.

செல்வ வளங்கள் நிறைந்து தேக போகங்களில் மூழ்கியுள்ள பொழுது மறுமையையோ, தெய்வத்தையோ மனிதன் சிந்திக்கவே மாட்டான்; துயரங்கள் நேர்ந்த போது தான் அவற்றை நீக்கும் பொருட்டு கடவுளை நோக்க நேர்கின்றான்

பசிப்பிணி உணவைத் தேடச் செய்தல் போல் வறுமைத் துயரம் இறைவனை நாடச் செய்கின்றது. ஆகவே கடவுளுடைய திருவருளை அடைய விரும்புகின்றவர் தம் கையிலுள்ள பொருளையெல்லாம் விரைந்து துறந்து விட்டு வறுமையை விழைந்து கொள்ளுகின்றனர். அதில் அரிய நன்மைகளைப் பெறுகின்றனர்.

செல்வம் பல் வகையிலும் களிப்பு மிகச் செய்தலால் தெய்வ சிந்தனை முதலிய நல்ல உறுதி நலங்களைச் செல்வர் இழந்து போகின்றனர். அது வந்தபோது வருகின்ற மடமைகள் பல.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

செல்வம்வந்(து) உற்ற காலைத்
..தெய்வமும் சிறிதும் பேணார்;
சொல்வன அறிந்து சொல்லார்;
..சுற்றமும் துணையும் நோக்கார்;
வெல்வதே நினைவ(து) அல்லால்,
..'வெம்பகை வலிதென்(று) எண்ணார்;
வல்வினை விளைவும் ஓரார்;
..மண்ணின்மேல் வாழும் மாந்தர்.. 141 - 27 கிருட்டிணன் தூதுச் சருக்கம், மூன்றாம் பாகம், பாரதம்

உண்மையான அனுபவ நிலைகளை இது உணர்த்தியுள்ளது.

இம்மையில் தமக்கு எல்லாச் சுகங்களும் நிறைந்திருப்பதாக இறுமாந்து கொள்ளுதலால் செல்வர்க்கு மறுமை நோக்கம் இல்லாமல் ஒழிந்து இழிவுகள் விளைகின்றன.

ஏசுநாதரை ஒரு பெரிய செல்வன் கண்டு தொழுது வணங்கி தனக்கு அருள் புரிய வேண்டினான். 'உன் பொருளில் கொஞ்சம் ஏழைகளுக்குக் கொடு; ஏழை பங்காளன் ஆகிய கடவுளருள் உனக்கு உண்டாம்' என்று அப்பெரியவர் சொன்னார். இது கேட்டு அச்செல்வன் மெல்ல விலகினான். பணம் குறைந்து போமே என்று மனம் கலங்கி அவன் விரைந்து மறைந்து போனான். அவன் போக்கை நோக்கி ஏசு புன்னகை செய்தார். தம் அருகே நின்ற சீடரிடம் செல்வர் நிலையைக் குறித்துச் சுவையாக ஓர் உவமையை உரைத்தார். அயலே வருகின்றது காண்க.

“It is easier for a camel to go through the eye of a needle, than for a rich man to enter into the Kingdom of God” (Bible, Mark, 10-25)

'ஒரு ஒட்டகம் ஊசித் துளையில் துழையினும் நுழையும்; செல்வன் பரலோக ராச்சியத்தில் புகல் அரிது' என அத் தீர்க்கதரிசி இவ்வாறு தெளிவாகக் குறித்திருக்கிறார்.

பொருளுடைமை மறுமையைக் காண முடியாதபடி மருளுடையதாய் இருளடைந்திருக்கும் என்பதை இது தெளிவித்துள்ளது. செல்வம் அறிவைக் குருடாக்கி விடுகின்றது.

வறுமை மறுமைக்கு உரிமையாய் அரிய பல நலங்களை உதவியருளுதலால் ஞானிகளும் துறவிகளும் தமக்கு உறுதியாக அதனை உவந்து கொண்டுள்ளனர்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

பிறந்தகுலம் அழியுமென்றும் பேராண்மை ஒழியுமென்றும்
..பேச நின்ற
அறந்திகழும் வறுமையே! உன்னைநான் அடைந்தமையால்
..அகிலம் எல்லாம்
சிறந்தகுல முனிவனெனத் திசைநோக்கித் தொழநின்றேன்;
..சீர்த்தி யோடு
பிறந்தபெரும் பேறெய்திப் பேரின்ப நிலைகண்டேன்
..பேசல் என்னே!

வறுமையால் தான் பெற்றுள்ள மகிமைகளை ஒரு பெரியவர் இவ்வாறு வியந்து மகிழ்ந்து கூறியுள்ளார். உள்ளம் தூயவர் வறுமையை மருவினால் புடம் இட்ட பொன்போல் புனிதம் அடைந்து உயிர் ஒளி மிகுந்து உயர்கதி பெறுகின்றனர்.

கடவுளைக் காட்டிக் கதிநலம் அருளுதலால் வறுமை அரிய தவத்தின் உருவம் என நின்றது. உறுதி உண்மைகளைக் கருதியுணர்ந்தவர் பொருள் இன்மையை நன்மையாக எண்ணியுள்ளனர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Sep-19, 5:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 160

மேலே