உன்னிடம் மயங்குகிறேன் - Part 7

உன்னிடம் மயங்குகிறேன் - Part 7
கண் கெட்ட பிறகு ...
சுந்தரி, ரங்கநாதன் தன்னை அலைப்பேசியில் தொடர்பு கொள்ள அடிக்கடி முயல்வதைப் பற்றியும் அவனைத் தான் பொருட்படுத்தாமல் நடந்து கொள்வதைப் பூரணியிடம் கூறினாள்.
”எல்லாம் பாழாய்ப்போன இந்த வாட்ஸ் அப்பால் வந்த வினை. எல்லா ஆண் நண்பர்களும் மோசம் என்று சொல்ல மாட்டேன். அவர்களுக்கு இடம் கொடுக்கும் நாமும் ஒரு காரணம். வீட்டு முகவரியை மட்டும் எந்த காரணத்துக்கும் ஆண் நண்பரிடம் கொடுக்காதே. நீயோ கல்யாணம் ஆனதை வெளிப்படையாய் சொல்வதில்லை. உன் வீட்டு முகவரி தெரிந்திருந்தால் தேடிக்கொண்டு வந்துவிடுவார்கள். ஆண்களிடம் பழகும்போது ஜாக்கிரதையாய் இரு” என்றாள்.
”நான் நெருப்புன்னு உனக்குத்தெரியாதா பூரணி? எனக்கு யாரிடமும் நெருங்கிய சினேகிதம் கிடையாது. நலமா? எப்படி இருக்கீங்க? என்று கேட்பதோடு சரி. எல்லாம் விளையாட்டுக்குத்தான் பண்ணறேன்.”
”விளையாட்டு வினையாகாமல் இருக்கணும். அதுதான் நான் சொல்வது.”
”ஒண்ணும் நடக்காதுங்குற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
அன்று ஞாயிற்றுக் கிழமை வழக்கம்போல் காலையில் நேரம் கழித்து எழுந்தாள் சுந்தரி. எப்போதும் அவள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பாள். ஞாயிற்றுக் கிழமை அவளும் மாமியாரும் சேர்ந்து சமையல் செய்வார்கள். மற்ற நாட்களில் காலையில் மட்டும் சுந்தரி சமையல் செய்து விட்டு அவசர அவசரமாய் அலுவலகம் ஓடுவாள்.
அன்று நண்பர்கள் தினம் என்பதால் நூறு பேருக்கு மேல் வாழ்த்துக்கள் அனுப்பியிருந்தார்கள். அவள் பொதுவான மெசேஜ் ஒன்றை அனுப்பி அதன் மூலம் எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்து செய்தி அனுப்பினாள். அவளுக்குச் சரவணன் என்னும் நண்பரிடமிருந்து போன் வந்தது. முன்பு ஒரு முறை அவன், நீ குணத்தாலும் பணத்தாலும் கோடீஸ்வரி என்று செய்தி அனுப்பியிருந்தான்/ சுந்தரி பதிலுக்கு நான் குணத்தில் கோடீஸ்வரி. பணத்தில் இல்லை என்று பதிலுக்கு மெசேஜ் அனுப்பினாள். அவனும் விடாமல் நீங்கள் சீக்கிரம் பணத்தாலும் கோடீஸ்வரி ஆகிவிடுவீர்கள் என்று பதில் தந்தான். அவன் அடிக்கடி வாட்ஸ் அப்பில் ஏதாவது கேள்வி கேட்டு லொள்ளு செய்யும் ஆள் என்பதால் அவனை அவளுக்குப் பிடிக்காதென்பதால் அவள் அலைபேசியை எடுக்கவில்லை. ஐந்தாவது முறை வந்ததும் எரிச்சலடைந்தாள். சிறிது யோசித்துவிட்டு அலைபேசியில் இருக்கும் குரல் மாற்றும் செயலியை உபயோகித்து ’ஹலோ’ என்றாள். அந்தப் பக்கம் சரவணுக்கு ஆண் குரலில் ’ஹலோ’ என்று கேட்டதும் பதில் பேசாமல் போனை துண்டித்து விட்டான்.
பூரணியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததைச் சொன்னாள்.
”அடி கள்ளி ! சரியான குறும்புக்காரிடி நீ ! ! “ என்றாள் பூரணி
சுந்தரி ஒரு நாள் காலை வாட்ஸ் அப் பார்க்கும்போது அவளுக்குக் கண் வலி ஏற்பட்டது. உடனே கண் டாக்டரிடம் போய் காண்பித்தாள்.
டாக்டர் கண்ணைப் பரிசோதித்து விட்டு,“வாட்ஸ் அப், முகநூல் பார்ப்பீர்களா?” என்று கேட்டார்.
”எப்பவாது பார்ப்பேன்” என்றாள். மனசுக்குள்,” தினந்தோறும் மூன்று மணி நேரத்துக்கு குறையாமல் வாட்ஸ் அப், முகநூலில் புதைந்து கிடப்பேன்” என்று சொன்னாள்.
” ஸ்மார்ட் போனிலிருந்து வெளிவரும் நீல கதிர்கள் உங்கள் கண்ணைப் பாதித்து விட்டன. உடனே கண்ணில் அறுவை சிகிட்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கண் பார்வை போய் விடும்” என்று டாக்டர் சொன்னதால் அம்மாவை உடனே வரச்சொன்னாள். விஷயம் தெரிந்து அம்மா மருத்துவமனை வந்தாள். , ”நான் அடிக்கடி உன்னிடம் வாட்ஸ் அப் ரொம்ப நேரம் பார்க்கக் கூடாதுன்னு சொன்னேன். நீ கேட்கல. இப்போ கண் கெட்ட பிறகு ... என்பதுபோல் வாட்ஸ் அப்புக்கு விடை கொடுத்துடு” என்றாள்.
” அம்மாவிடம் பூரணிக்குப் போன் செய்து தான் ஆஸ்பத்திரியில் இருக்கும் விஷயத்தைச் சொல்லி உடனே வந்துப் பார்க்கும்படி சொல்லச் சொன்னாள் சுந்தரி . அவள் அம்மாவும் போன் செய்து பூரணியிடம் பேசினாள். தன் கணவர் வந்தவுடன் உடனே வருவதாகக் கூறினாள் பூரணி.

எழுதியவர் : Shivani (11-Sep-19, 1:58 pm)
சேர்த்தது : shivani
பார்வை : 61

மேலே