பேராசை பொங்கிப் பேயாய் மனம்திரிந்து நீராசை கொண்டநாய் போல - நசை, தருமதீபிகை 443

நேரிசை வெண்பா

பேராசை பொங்கியதேல் பேயாய் மனம்திரிந்து
பாராசை எங்கும் பறந்துமே - நீராசை
கொண்டநாய் போலக் குலைந்தோடி யாண்டுமே
கண்டமே காணும் கழிந்து. 443

- நசை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கொடிய ஆசை பெருகி எழுந்தால் மனம் நிலைகுலைந்து, மதியழிந்து வெறிகொண்ட நாய் போல் உலகமெங்கும் மனிதன் ஓடி உழலுவான்; யாண்டும் அபாயமே கண்டு அலமருவான் என்கிறார் கவிராஜ பண்டிதர் இப்பாடல், இச்சை மிகின் ஈனங்கள் மிகும் என்கின்றது.

ஆசை அளவு மீறின் பேராசை ஆகி மனிதனை அது பேயாக்கி, நாயாக்கிப் பெருங்கேடு செய்ய நேர்கின்றது. வெறி கொண்டு விரைந்து அலைதற்கும், இழிந்து திரிதற்கும் பேயும் நாயும் இனமாய்ப் பேச வந்தன.

அறிவும், அமைதியும், நிதானமும் மனிதனை இதமும், இனிமையும், பதமும் உடையவனாய்ச் செய்கின்றன. அகத்தில் மருவிய இயல்புகளின்டியே புறத்தில் செயல்கள் நிகழுகின்றன.

ஆசை பொல்லாததாதலால் அது புகுந்தவுடனே நல்ல நீர்மைகள் எல்லாம் நாசம் அடைந்து, மனிதன் பேயனாய்த் தீய வழிகளில் செருக்கித் திரிகின்றான். பல வகை இழிவு நிலைகளுள் சில அயலே காண வருகின்றன.

வறிய வான உரைபல கேட்பன:
மாண்டு மீண்டினி வாரா வழியினைச்
செறிய லான பொருள்கள் தெரிந்துரை
செய்யும் எல்லை செவிடுகள் ஆவன. 1

வம்பு கூறின் உடம்பெ லாம்வெறும்
வாய்க ளாகி வடித்தற்கு வல்லன:
உம்பர் கோனடித் தாமரை போற்றிநின்(று)
உரைக்க என்னில்வெற் றுாமைகள் ஆவன. 2

ஆவ(து) ஒன்றிலை யாயினும் தன்னைமேல்
ஆக வுன்னி அறக்கடை யாவன:
பாவ கத்தொன்(று) இலாதமை காட்டவே
படப டத்துத்தன் பாழ்வாய் திறப்பன. 3

உண்ண லான யிடந்தொறும் மற்றவர்க்(கு)
உற்ற நட்டவர் போலுற(வு) ஆடுவ:
கணண னார்சிலர் ஆயினும் கைப்பொருள்
இல்லை யாகில் கழலக் கழல்வன. 4

கண்ட மட்டின் இதுவன்றி வேறொன்றும்
கண்டி லம்கதி என்னும் கருத்தினால்
பிண்டம் இட்டவர் தம்பிறகே ஞஞ்ஞை
பிஞ்ஞை என்று பிதற்றித் திரிவன. 5

வயிறு சாணும் வளர்த்தற் பொருட்டந்த
வானும் சென்று வரக்கால் உடையன:
கயிறும் கம்பையும் ஏடும் பிறர்க்கொரு
காட்சி போல்வரும் புத்தகக் கையன. 6 - அஞ்ஞவதைப் பரணி

உலகக் காட்டில் திரிகின்ற மனிதப் பேய்களுள் சிலவற்றைக் குறித்துக் தத்துவராயர் இப்படி வருணித்திருக்கின்றார், கூறியுள்ள அடையாளங்கள் கூர்ந்து காணவுரியன. ஆன்ம நலனை இழந்து அவல நிலையில் இழிந்து அலைந்து படுகின்ற மக்களை மாக்கள் எனவும், பேய்கள் எனவும் மேலோர் இகழ்ந்துள்ளனர். இகழ்ச்சி எல்லாம் அவர் மேல் வைத்த இரக்கத்தால் நேர்ந்தன.

ஆசை மதியைக் கெடுக்கும்; மதிப்பைத் தொலைக்கும்; ஆண்மையை அழிக்கும்; மேன்மையை ஒழிக்கும்; பான்மையைச் சிதைத்துப் படுதுயராக்கி யாண்டும் கீழ்மைகளையே விளைக்கும்; அந்த ஈன நிலையை மருவாதிருத்தலே ஞான சீலமாம்.

’பேராசைக்காரனைப் பெரும் புளுகன் வெல்லுவான்’ என்னும் பழமொழி ஆசையின் அவநிலையை வெளிப்படுத்தியுள்ளது. பொருள் இருந்தாலும் ஆசை மிகின் அவன் மருளனாய் இருளடைந்து இழிகின்றான். தலைமையான அறிவை நாசம் செய்தலால் அந்த நீசம் மனிதரை நிலை குலையச் செய்கின்றது.

கலி விருத்தம்

பேராசை யாலீனர் பின்சென்(று) உழன்றும்
தீராத மிடியாளர் சிலர்பா ரிலுண்டே,
நேராக வரில்வாழ்வு நினையாமல் வருமால்
வாராத(து) ஆர்தாம் வருந்தினும் வராதே. - மெய்ஞ்ஞான விளக்கம்

பேராசையுறின் மானம் இழந்து மனிதன் ஈனமாய்த் திரிய நேர்வான் என்பது இதில் அறிய வந்தது. பலவகைகளிலும் இழிவுகளை உளவாக்குதலால்.அது ஒரு அழிபிசாசு என அஞ்ச நின்றது.

'ஆசையே தீய இராட்சசி; மனிதர்க்கு அது கொடிய நஞ்சுத் திரள்; கெட்ட கள்; எல்லாக் கேடுகளுக்கும் காரணமானது. அந்தப் பொல்லாத நீசத்தை யாண்டும் தீண்டாமல் ஒழித்து விட வேண்டும்' என்னுமிது எண்ணத்தக்கது.

பேராசை என்பது பெரும்பாலும் செல்வர்களிடத்தேதான் வளர்ந்து பொல்லாத நிலையில் பேய்க்கூத்து ஆடுகின்றது. பொருள் பெருகப் பெருக ஆசையும் பெருகி வருதலால் அங்கே பேராசை உருவாகி ஓங்கி நிமிர்கின்றது.

Excess of wealth is cause of covetousness. - Marlowe

செல்வப் பெருக்கமே பேராசைக்கு மூல காரணம்' என மார்லோ என்பவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொருளின் மேலுள்ள பேராசைதான் உலோபம் என வேறு ஒரு இழி பெயரை எடுத்து வெளியே தலைநீட்டி நிற்கிறது.

பொருளான்ஆம் எல்லாமென்(று) ஈயா(து) இவறும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு: 1002 நன்றியில் செல்வம்

பேராசை கொண்ட உலோபிக்குப் பேய்ப்பிறப்பு உண்டாம் என வள்ளுவர் இங்ஙனம் வாய் மலர்ந்துள்ளார்.

பொருளாசை பெருகிய பொழுது அருள் அகலுகின்றது; மருளும் இருளும் குடிபுகுந்து எல்லாத் தீமைகளும் அங்கே இடம் பெறுகின்றன.

The love of money is the root of all evil.

கொடுமைகளுக்கெல்லாம் மூலவேர் பண ஆசையே' என்னும் இது இங்கே கூர்ந்து சிந்தித்து ஓர்ந்து கொள்ள வுரியது.

பொருள் வரவு பெருகி ஏறவும் நெருப்பில் நெய் வார்த்தது போல ஆசை மேலே சுழித்து எழுகின்றது.

கிடைத்த பொருளை எல்லாம் உள்ளே விழுங்கி மேலும் மேலும் தீராத பசியாய்ப் பேராசைப் பேய் வாயைப் பிளந்து கொண்டே நிற்கின்றது. தீய ஆசை தீயினும் தீயது.

நேரிசை வெண்பா

பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும்
சிற்றுயிர்க்(கு) ஆக்கம் அரிதம்மா - முற்றும்
வரவர வாய்மடுத்து வல்விராய் மாய
எரிதழன் மாயா(து) இரா. 64 நீதிநெறி விளக்கம்

பேராசை மண்டிய சீவர்களுடைய அழிவுநிலையை இது தெளிவாகக் குறித்துள்ளது. விராய் - விறகு,

மன நிறைவு இல்லாமல் பொருளை எண்ணி எண்ணி ஏங்கித் தவிக்கின்றவன் இறுதியில் பரிதாபமாய்ப் பாழ்படுகின்றான்.

விறகு ஏற ஏற தீ முறுகி வளர்தல் போல், பொருள் சேரச் சேர ஆசை பெருகி வளர்கின்றது. ஆதலால் நாசமே விளைகின்றது. ஆசையை நீள விடுவது தீயை மூள விடுவது போல் மோசமேயாம்.

ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
ஆளினுங் கடல்மீதிலே
ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா ளிருந்தபேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவது மாகமுடியும்
உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகி்ன்ற
பரிபூர ணானந்தமே. 10 பரிபூரணானந்தம், தாயுமானவர்

கடவுளை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு வேண்டியிருக்கிறார் ஆசையின் கொடுமைகளைக் குறித்துக் காட்டி அந்த நீசம் நெஞ்சு புகாதபடி காத்துப் பரிசுத்த நிலையைத் தமக்குத் தந்தருளும்படி உருகி முறையிட்டுள்ளார். இந்தப் பாசுரத்தை ஊன்றியுணர்ந்து அனுபவ நிலைகளை ஓர்ந்து கொள்ள வேண்டும்.

‘பேராசை பெருங்கேடு’ என்னும் பழமொழியை உளங்கொண்டு எவ்வழியும் அமைதியாய் நலம் கண்டு வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-19, 10:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 83

மேலே