ஈசன் அருளெய்த வறுமையே நல்லார் உறுவர் - வறுமையின் பெருமை, தருமதீபிகை 453

நேரிசை வெண்பா

ஈசன் அருளெய்த எண்ணிய போதத்தே
நீசம் பொருளென்று நீங்குவார் - பாசமென
எல்லாம் அகற்றி இனிய வறுமையே
நல்லார் உறுவர் நயந்து. 453

- வறுமையின் பெருமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஈசன் அருளை அடைய விரும்பிய பொழுதே பொருளை நீசம் என்றிகழ்ந்து நீங்கி பற்றுக்களை எல்லாம் விட்டு வறுமையை நயந்து பெரியோர் உவந்திருக்கின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் வறுமை மறுமையின் உரிமை என்கின்றது.

உலகம், கடவுள், சீவன் என மூன்று பிரிவுகள் உள்ளன. முதலில் உள்ள இரண்டு நிலைகளையும் இறுதியில் உள்ளவன் உரிமையாய் மருவி நிற்கின்றான்; முன்னது அநித்திய நிலையது; பின்னது என்றும் நித்தியமுடையது. தெளிவான மெய்யுணர்வு தோன்றிய பொழுது இளிவான பொய்யுலக வாழ்வு கழிவாய் ஒழிகின்றது. சீவான்மா பரமான்வைத் தோய்ந்து கொள்வதே பேரின்ப நிலையமாய் வாய்ந்து வருகின்றது. என்றும் நிலையான ஈசனைச் சீவன் எய்த நேர்ந்தவுடன் பொன்றும் புலையான உலகப் பொருள் யாவும் நீசமென நீக்கி விட நேர்கின்றான். தெய்வ ஒளி தெரியவே மையல் இருள் ஒழிந்து உய்தி நலம் வருகின்றது.

அரிய பல செல்வங்களையுடைய ஒரு பெரிய அரசன். பல சன்மங்களில் செய்து வந்த புண்ணிய பரிபாகத்தால் தெளிவான ஞானம் ஒரு நாள் அவனுக்கு உதயம் ஆயது. ’உலக வாழ்வு எவ்வளவு உயர்வுடையதாயினும் எவ்வழியும் நிலையில்லாதது; கடவுள் ஆகிய பெரிய சோதியிலிருந்து பிரிந்த ஒரு ஒளித்துளியே சீவன் எனப் பாவ உலகங்களில் பரிதபித்து உழல்கின்றது; பரிதாபமான இந்தப் பாசபந்தங்கள் ஒழிந்து பழைய நிலையை அடைய வேண்டும்' என்று துணிந்து தனது அரச பதவியைத் துறந்து வெளியே போனான். மந்திரி தொடர்ந்து போய் மறுகித் தடுத்தான். அப்பொழுது அமைச்சனை நோக்கி அம் மன்னன் கூறிய உறுதி மொழிகள் யாவரும் உணர சில அயலே வருகின்றன.

அறுசீர் விருத்தம்
மா 3 அரையடிக்கு)

இந்த இழிவை யுடைய இந்த மாயை அசத்தே;
அந்த உயர்வை யுடைய அந்தப் பிரம மசத்தே;
தந்தம் மனத்தில் தேர்ந்தோர் தள்ளி எதனைக் கொள்வர்;
உன்றன் மன்த்தில் நன்றாய் யூகித்(து) அமைச்ச பாராய்! 1

பொய்யென்(று) இதனை அறிந்தோர் பொருந்தி நிற்ப(து) உளதோ?
மெய்யென்(று) அதனை அறிந்தோர் மேவா திருப்ப(து) உளதோ?
ஐயம் உளதோ இதனில் அமைச்ச! பாராய் நன்றாய்
உய்ய அறிவி லாதோர் உழல்வர் நீக்க மாட்டார். 2

பொய்பை மெய்என்(று) அறிந்து போதம் இன்மை யாலே
மெய்யைப் பொய்என்(று) எண்ணி மெலிந்தே உழல்வர் உலகர்,
பொய்யைப் பொய்என்(று) அறிந்து போத குருவின் அருளின்
மெய்யை மெய்என்(று) அறிந்தே மெலிவு தீர்வர் உயர்ந்தோர். 3

துன்பம தோன்றில் எவரும் துறந்தே கராய்த்த னித்தே
இன்பம் தேடல் இயற்கை; இன்பம் என்றே தோன்றின்
அன்ப தாக நீங்கார் அவர்கட்(கு) எங்கன் கூடும்
நன்ப ரமான ஞான நாட்டம் அமைச்ச! சொல்லாய்? 4

இழிவை உணர்ந்தால் உயர்வை எவரும் தேடி அடைவர்:
இழிவை உணரார் உயர்வை எய்த நோக்கார் என்றும்
இழிவை இழிவென்(று) உணர எந்தக் காலம் வாய்க்கும்?
இழிவை யுடையோர்க்(கு) அமைச்ச! இதனை யூகித் துணராய்! 5 மகாராசா துறவு

தத்துவ ஞானத்தால் தெளிவடைந்த மன்னன் மந்திரியிடம் இவ்வாறு கூறியிருக்கிறான். உரைகளில் பொதிந்துள்ள உணர்வு நலங்கள் ஓர்ந்து சிந்திக்கத் தக்கன. மெய்யுணர்வுவரின் வையக வாழ்வை வெய்யது என வெறுத்துத் தெய்வ கதியை எவரும் நாடி எழுவர் என்பது இதனால் தெளிய வந்தது.

’இனிய வறுமையே நல்லார் உறுவர்’ இறைவன் அருளையே நாடி உருகும் ஞான சீலர்கள் உலகப் பொருள்களை வெறுத்து விடுத்து வறுமையையே உரிமையாக மருவிக் கொள்ளுதல் அரிய ஒரு அதிசயமாய்ப் பெருகியுள்ளது. அவ் உண்மையை இது உணர்த்தி நின்றது.

ஈசனை அடைய நேர்ந்தவர்க்குச் செல்வம் கொடுமையாகவும், வறுமை இனிமையாகவும் தெரிதலால் இனிய என்னும் அடையை ஈண்டு அது மருவி வந்தது. கொடியது என்று வையம் அஞ்சுகின்ற வறுமை மெய்யறிவாளருக்கு இனியதாய் உய்தி புரிந்தருள்கின்றது. உண்மையுணர்வு நன்மையை ஓர்ந்து கொள்கின்றது.

முதலில் வறியராயிருந்த குசேலர் பின்பு பெரிய செல்வங்களை அடைந்தார். அந்தச் செல்வ வளங்கள் அவர்க்கு மிகுந்த தொல்லையாய்த் தோன்றின. எல்லாரும் உறவினராய், யாவரும் நண்பர்களாய்ப் பல்லோரும் பெருகி வந்தனர். நாளும் புகழ்ச்சி மொழிகள் பொங்கி வளர்ந்தன. முன்பிருந்த சித்த சாந்தத்தை இழந்து குசேலர் தத்தளித்தார். அந்தச் செல்வ நிலை கொடிய அபாயம் என்று முடிவு செய்தார்.

அடியோடு அது ஒழிந்து போக வேண்டும் என்று கண்ணனைக் கருதி வேண்டினார். பொருள் மருள் என்று வெருவி அவர் உருகி வேண்டியுள்ள நிலையை அடியில் காண்க.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

அடியனே னுய்ந்தே னென்னா
..அங்கைக ளிரண்டுங் கூப்பி
முடிமிசை யேற்றி நின்று
..மூதறி வுடையோர் கொள்ளாக்
கொடியவிச் செல்வ மொன்றே
..குணிப்பரும் பவத்திற் கேது
படியற வாயி லின்பம்
..பயப்பதெட் டுணையு மின்றால். 726

மனமொழி யுடல மென்ன
..வகுத்திடு கரண மூன்றுந்
தினமுநின் றிருவ டிக்கே
..செலுத்துநா யடியே னிந்தக்
கனவெனுஞ் செல்வத் தாழ்ந்தோ
..களித்துநாள் கழியா நிற்பன்
உனதடி யவர்பூந் தாளில்
..உறப்பணிந் துய்த னீக்கி 727

ஆதலா லைய விந்த
..அநித்தியச் செல்வம் வேண்டேன்
மேதக முன்னி ருந்த
..மிடியதே யின்னும் வேண்டுங்
காதலி னடியார் வேண்டுங்
..காரிய மளித்துக் காக்கும்
நீதயை புரிந்தென் னுள்ளக்
..கருத்தினை நிரப்பு கென்றான். 730 குசேலோபாக்கியானம்

செல்வத்தை ஒழித்து வறுமையை அளித்தருள் என்று கண்ணனை நோக்கிக் குசேலர் இவ்வண்ணம் வேண்டியிருக்கிறார். ஈசனருளை எய்த ஒட்டாதபடி செல்வம் மோசம் செய்து விடுதலால் அதனை நீசம் என்று வெருவி மேலோர் ஒருவுகின்றனர்.

தெருளுடையார் பொருளை மருளென்று வெருளுகின்றார்; வறுமையை இனிதென்று தழுவுகின்றார். ஆகவே உயிர்க்கு உண்மையான உறுதிநலம்.அது உதவிவரும் உரிமை உணரலாகும்.

Adversity's sweet milk. - Shakespeare

வறுமை இனிய பால்' என மேல்நாட்டுக் கவிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார் அரிய பல நன்மைகள் அதனால் தெரிய வருதலால் வறுமையை மேலோர் மறுமையின் துணையாக உரிமை செய்துள்ளனர். ஞானமுடையவர் நன்மையை நாடுகின்றனர்.

ஈசனிடம் அன்பு பெருகவே பாசங்கள் ஒருவி, உலகில் எதையும் வேண்டாமல் சித்த சாந்தியுடன் உத்தம நிலையில் உயர்ந்து விளங்குகின்றனர்.

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;

பூத மைந்தும் நிலையிற் கலங்கினும்
மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காத லுறைப்பி னெறிநின்றார்
கோதி லாத குணப்பெருங் குன்றனார் . 142

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார். 143

ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே
பார மீசன் பணியல தொன்றிலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவிலார்
வீர மென்னால் விளம்புந் தகையதோ. 144 பாயிரம் - திருமலைச் சருக்கம், சேக்கிழார், பெரிய புராணம், பன்னிரண்டாம் திருமுறை.

ஈசன் அருளையே நாடி வேறு யாதொரு பொருளையும் வேண்டாத மெய்யடியார்களுடைய நிலைகளை இவை காட்டியுள்ளன. உலகப் பொருள்கள் யாதுமின்றி வறுமையே தமக்கு உரிமையாக மருவியுள்ளவரைத் ’திருவினார்; யாதும் குறைவிலார்’ எனக் குறித்தது அவரது ஆன்ம நீர்மையைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வந்தது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-19, 11:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 104

மேலே