அவள்
வசந்த காலம்.........
பூஞ்சோலை எல்லாம்
பூத்துக் குலுங்கும்
வண்ண வண்ணப் பூக்கள்,
தடாகத்தில் மொட்டவிழ்ந்து
பூத்த கமல மலர் ,
தாமரைப் பூக்களை பறிக்க
வந்த மாது , அவள் கைகள் தாமரையா
இல்லை தாமரைதான் அவள் கைகளானதா
என்று திகைத்து நின்றேன் நான் ;
இப்போது அவள் முல்லைக் கொடிக்குப் பின்னே,
கொடியாய் நின்றாள், புன்னகைத்தாள்
இதழ்கள் சற்றே விரிய.
முல்லை மொட்டெல்லாம் அவள்
இதழ்களின் பின்னே , கொடியில் மொட்டிலையே!
கொடி இடையாள் நடந்துவந்தாள்
வண்ண மலராள் மெல்ல மெல்ல
அவள் பின்னே அன்னங்கள் வந்தன
இவள் நடையைப் பயின்று!
வசந்த கால பருவ மங்கை இவள்
என் மனதைப் பறித்தாள்
வசந்தமே வசந்தமே என்று மெல்ல
ஓர் மெட்டெழுப்பி அவள் பின்னே நான்
அடைக்கலம் எனக்கு நீயே அம்மா என்று
அவள் காதில் மெல்ல கேட்க பாடி.
கொடியில் பூத்த முல்லை மலரெல்லாம்
அவள் சிரிப்பாய் மாறி என் நெஞ்சை அள்ள
மானாய்த் துள்ளி சென்றாள் மங்கை
என் பார்வையில் இப்போது அவள்...
அவள் பார்வை என் மீது
பார்த்த முகம் தரையைப் பார்க்க
நாணினாள் நங்கை மெல்ல மெல்ல
என்னை நாடி வந்தாள் அவள் பூவையவள்
அன்னமும் இவள் நடைப் பார்த்து பயில