உற்ற கிளையின் உரிமை உளமுணர்த்தும் அறவி - வறுமையின் பெருமை, தருமதீபிகை 454

நேரிசை வெண்பா

உற்ற கிளையின் உரிமை உளமுணர்த்தி
மற்றவர் உண்மை மதிதெளித்து - பெற்ற
பிறவிப் பயனைப் பெறும்படி செய்யும்
அறவி வறுமை அறி. 454

- வறுமையின் பெருமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உறவினருடைய உரிமை இயல்புகளை உணர்த்தி, உலகத்தவரது உண்மை நிலைகளைத் தெளிவித்து, பிறந்த பிறவிப் பயனை. அடைந்து கொள்ளும்படி செய்யும் தருமத் துணை வறுமையே; இதனை உறுதியாக உணர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

’உற்ற’ என்றது தாய் வழி, தந்தை வழியாக வந்து பொருந்திய கிளைஞரின் தொடர்புநிலை தெரிய வந்தது. பக்கமாய் ஒட்டிக் கிளைத்தது ’கிளை’ என நேர்ந்தது. உறுதல் - பொருந்துதல், சேர்தல்.

மனிதன் தனியே வாழ்பவன் அல்லன்; அவனுடைய வாழ்வு பல சூழல்களைத் தழுவி இயங்குகின்றது கேளும் கிளையும் கெழுமி வருதலால் குடி வாழ்க்கை நெடிது செழித்து நிலவுகின்றது.

உலக உறவுகள் பல வகை நிலைகளில் பெருகியுள்ளன. செல்வ நிலையில் காண முடியாத உண்மைகளை வறுமை காட்டி அருள்கின்றது. வறுமையிலிருந்து பல படிப்பினைகளையும், உலக அனுபவங்களையும் நாம் அறிந்து கொள்ளுதலால் அது நமக்கு ஓர் உறுதியான அறிவுத் துணையாய் மருவியுள்ளது. கொடிய அல்லலாக வெளியே தோன்றினும் இனிய உணர்வு நலங்கள் உள்ளே அதனால் உளவாகின்றன.

உணர்த்தி, தெளித்து, பெறும்படி செய்யும் என்றது வறுமையின் கருமக் காட்சிகளைக் கருதிக் காண வந்தது.

செல்வம் உள்ள பொழுது நல்ல.அன்பர் போல் பலர் நடித்து வருகின்றார், அது இல்லாத போது மெல்ல ஒதுங்கி விடுகின்றார், அந்தக் கள்ள வஞ்சரது உள்ள நிலையை உணர்ந்து கொள்ளுதற்கு வறுமை நல்ல உதவியாய் இருத்தலால் ‘உரிமை உளம் உணர்த்தி’ என அதன் நிலை குறிக்கப்பட்டது.

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். 796 நட்பாராய்தல்

கேட்டிலும் ஒரு ஆக்கம் உண்டு என்று வள்ளுவர் காட்டியிருக்கும் அழகை இதில் கண்டு மகிழ்கின்றோம். முழம்போட்டு அளந்து பார்த்துக் கிளைஞரைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதற்குக் கேடு சரியான அளவுகோல் என்றதனால் அதன் பாடும் பயனும் நாடி அறியலாகும்.

ஒருவனிடம் உண்மையான உள்ளன்புடையவர் அவனுக்கு இடர் நேர்ந்த காலத்தும் உடனிருந்து பலவகையிலும் உதவி புரிவர்; போலியான பொய்யுறவாளர் கேடு வந்தபோது யாதும் உதவாமல் ஓடி விடுவர். உரிமையான நண்பர் போல் அளவளாவி நின்ற அந்தக் கொடிய வஞ்சரை நன்கு தெரிதற்கு வறுமை கருவியாய் நிற்றலால் மனித வாழ்க்கையில் அஃதோர் இனிய துணையாயது. தத்துவ சோதனையின் தக்க சாதனம் புத்துணர்வு தருகிறது.

செல்வம் காட்டாத காட்சியை நல்குரவு காட்டியருளுதலால் அது நல்ல ஒரு ஊதியம் என உவந்து சொல்ல வந்தது

Sweet are the uses of adversity. - Shakespeare

‘வறுமையின் அனுபவங்கள் இனிமையுடையன’ என ஷேக்ஸ்பியர் இங்ஙனம் கூறியிருக்கிறார்.

உண்மையை நன்கு ஓர்ந்து தெளிதற்கு இன்மையே யாண்டும் இனிய துணையாய் நேர்ந்திருக்கின்றது.

அரிய பல உணர்வு நலங்கள் வறுமையிலிருந்துதான் உதயமாகியுள்ளன. பெரிய மகான்களுடைய சரித்திரங்கள் பலவற்றைத் துருவி நோக்கின் பெரும்பாலும் வறுமையே அவர்க்கு உரிமையாயிருந்து உதவி புரிந்துள்ளமை உணரலாகும்.

’பிறவிப் பயனைப் பெறும்படி செய்யும் அறவி’ வறுமையை இவ்வாறு குறித்தது அதன் அருமையை நுணுகி ஓர்ந்து கொள்ள வந்தது. பிறவிப்பயன் ஆவது மீண்டும பிறவாத நிலையைப் பெறுவது. புண்ணியவதியை அறவி என்றது.

பாவத் தொடர்புகளில் இழிந்து படாமல் தடுத்து உயர்ந்த புண்ணிய நெறிகளில் செலுத்தி சிறந்த பேரின்ப நிலையை அடையும்படி செய்தருளுதலால் ’வறுமை ஒரு தரும தேவதை’ என அமைந்தது. உயிர் மாசு கழிய அது உயர் தேசு புரிகின்றது.

பிறவி நீங்கி முத்தி பெற விரும்புகின்றவர் துறவினை அடைகின்றனர். உலகப் பொருள்கள் எல்லாவற்றையும் துறந்து விடுதல் துறவு எனப்படும். யாதொன்றும் இல்லாதிருத்தலே துறவு நிலையாம்; ஆகவே அதற்கும் வறுமைக்கும் உள்ள உறவுரிமை தெளிவாகின்றது. உண்மை நிலை வெளி வருகின்றது.

துன்பத் தொடர்பை நீக்கி என்றும் அழியாத இன்பநிலையை இனிதருள வல்ல துறவு போலவே, வறுமையை உறவுடன் உரிமை செய்து கொண்டவர் அரிய பல உறுதி நலங்களை எளிதே அடைந்து கொள்கின்றனர்.

நேரிசை வெண்பா

பொன்றும் பொருள்கள் புறத்தொழிந்து போயினோ
என்றும் அழியா இறைவனை - ஒன்றிநின்று
பேரின்பம் காணும் பெருமையால் நேர்வறுமை
ஓரின்ப மாக உணர்.

உன்பால் வறுமையுறின் பரமனை உரிமையுடன் அருளும் பாக்கியமாக அதனைப் பதிவு செய்து கொண்டு கதிகலம் காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Sep-19, 6:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

மேலே