செவப்பி ‍- அத்தியாயம் 2

செவப்பி - 2
==========

செவப்பி..

அந்த கிராமத்துக்கே காவல் தெய்வம் மாதிரி..

எல்லா நேரமும் சாதாரணமாகத்தான் இருப்பா.. ஆனா.. யாராவது ஊருக்குள்ள தப்பித்தவறி ஏதாவது தவறு பண்ணாங்கனு தெரிஞ்சா.. நிச்சயமா செவப்பி கையால தண்டனை உண்டு.

செவப்பி யாரையாவது அடிச்சுட்டா அப்படீனா.. கண்டிப்பா அவன் தப்பு செஞ்சிருக்கானு அர்த்தம்.

அதனால ஊருக்குள்ள யாருமே தப்புத்தண்டாவுக்கு போறதே இல்ல.

அவகிட்ட ஒரு பெரிய சக்தி இருக்குனு எல்லாருக்குமே நம்பினாங்க..

அதுக்கு தகுந்த மாதிரி தான் அவளோட நடவடிக்கைகளும் இருக்கும்.

தெனம் தெனம் விடிய‌றதுக்கு முன்னாடியே எந்திரிச்சு ஆத்துக்குப் போயி குளிச்சிட்டு, பூவெல்லாம் பறிச்சுப் போயி சாமிக்கு படைச்சு.. நல்லா கும்பிட்டுட்டுத்தான் அவளோட‌ எல்லா நாட்க‌ளும் தொடங்கும்.

அப்படி அவ சாமி கும்பிட்டுட்டு ரோட்டுல‌ நடந்து வரும் போது, ஒரு சாமி போலவே இருக்கும். ரோட்ல நடக்குற எல்லாருமே கையெடுத்துக் கும்பிடுவாங்க..

செவப்பிக்கு சொந்த பந்தம்னு யாருமில்லை.

நாடோடியா வந்த ஒரு கூட்டம், தெரிஞ்சோ தெரியாமலோ ஆத்தங்கரையோரமா ஒரு குழந்தைய விட்டுட்டுப் போயிட்டாங்க..

அப்ப அந்த வழியாப் போன பூசாரி பொஞ்சாதி ருக்மணி தான், அந்த அழுக சத்தத்தைக் கேட்டு, அத வாரி அணைச்சுக்கிட்டா.. அவளும்தான் பாவம் என்ன பண்ணுவா..? பல வருஷமா குழந்தை பாக்கியம் இல்லாம இருந்தவ..

பூசாரிக்கும் சந்தோஷம் சொல்லி மாளல.. ஏதோ கடவுளே வந்து வரம் கொடுத்த மாதிரி அவ்ளோ கொண்டாடினாங்க..

அவங்க வீட்ல தான் ராணி மாதிரி வாழ்றா செவப்பி..

சில மாசங்களுக்கு முன்னாடி..

பண்ணையார் அவங்க ஆளுங்களோட எங்கேயோ போயிருக்கும் போது, அவரு கண்ணுல‌ முத்துலட்சுமி பட்டுட்டா..

முத்துலட்சுமி ராணுவத்துல இருந்த கணவன இழந்து தனியா வாழ்ந்து வர்றவ..

அவள அடையனும்னு பண்ணையார் செஞ்ச முயற்சியில எப்படியோ தப்பிச்சவ, செவப்பிகிட்ட போயி அழுதுகிட்டு நின்னா..

அந்த காட்சி இப்போது..

கலகலப்பா இருந்துச்சு பண்ணையார் வீடு, வீட்டுப் பெண்கள் எல்லாம் சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க.. பசங்க எல்லாம் ஓடிப் பிடிச்சு விளையாடிக்கிட்டு இருந்தாங்க..

காலையில ஒரு ஒன்பது மணி இருக்கும்.. ஆடு, மாடு, கோழி எல்லாம் அது அதுக‌ வேலையப் பார்த்துட்டு இருந்துச்சுங்க..

பண்ணையாரு குளிச்சிக்கிட்டு இருந்தாரு.. ஒரே கத்தலா இருந்த வீடு, சட்டுனு மயான அமைதி ஆச்சு.. பண்ணையார் காதுல கேட்டுக்கிட்டிருந்த சத்தமெல்லாம் நிக்கவும், அவரு காதை கூர்மையாக்கி என்னனு கேக்கப் பாத்தாரு.. பெரும் நிசப்தம் தான் அவருக்கு பதிலாக கெடச்சுச்சு.. சரினு.. சட்டுபுட்டுனு குளிச்சிட்டு தலைய துடைச்சுக்கிட்டே வெளியே வந்தாரு பாருங்க..

வெளிய பத்ரகாளி கணக்கா... கண்ணெல்லாம் நெருப்பா, கையில ஒரு பெரிய கட்டையோட‌ நின்னுகிட்டு இருந்தா செவப்பி..

இவரு என்ன ஏதுனு யோசிக்கிறதுக்குள்ள சாத்து சாத்துனு சாத்த ஆரம்பிச்சுட்டா.. 'ஐயோ அம்மா'னு அவர் கத்துன‌ கத்துக்கு ஒருத்தர் கூட உதவிக்கு வரல..

தன்னோட ஆவேசம் தீர்ந்த பிறகு, கலைஞ்சு போன முடிய இழுத்து நல்லாக் கட்டிக்கிட்டு, வந்த விஷயம் முடிஞ்ச திருப்தியோட கெளம்பி போனா செவப்பி..

அப்புறமென்ன, நாலஞ்சு நாளு பண்ணையாருக்கு ஆஸ்பத்திரியில இருக்க வேண்டியதாப் போச்சு, எதுவுமே வெளிக்காயம் இல்ல.. எல்லாமே உள்காயம்.

அவரப்பத்தியும் ஊரு முழுக்க பரவிடுச்சு.. கொஞ்ச நஞ்ச மரியாதை வச்சிருந்தவங்களும், அவரப் பார்த்தா விலக ஆரம்பிச்சிட்டாங்க..

வன்மம் கொஞ்சம் கொஞ்சமா அவருக்குள்ள விஷம் போல பரவ ஆரம்பிச்சிருச்சு..

அப்பயிருந்து செவப்பிய ஏதாவது செஞ்சே தீரணும்னு துடிச்சுக்கிட்டு இருக்காரு பண்ணையார்..

(வன்மம் தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (14-Sep-19, 7:11 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 222

மேலே