வாராத வருமென்று பேராசை பெருக உள்ளம் புண்ணாகும் - நசை, தருமதீபிகை 445

நேரிசை வெண்பா

வாராத எல்லாம் வரும்வருமென்(று) எண்ணியெண்ணிப்
பேராசை நாளும் பெருகியே - ஆராத
உள்ளம்புண் ஆக உளைந்து பலரல்லல்
வெள்ளம்வீழ்ந்(து) ஆழ்கின்றார் வீண். 445

- நசை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கிடையாத பொருள்களை அடைய விரும்பி நெடிது ஏங்கிப் பேராசை மண்டித் தம் உள்ளத்தைப் புண் ஆக்கி அல்லல் வெள்ளத்தில் விழுந்து பலர் அவமே அழிகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நெஞ்சில் ஆசையுடையவன் பஞ்சையாய் இழிந்து படாதபாடுகள் படுகின்றான். தன் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் தன்னிடம் நிறைந்திருந்தாலும் மேலும் பலவும் விழைந்து மனிதன் நிலை குலைகின்றான்.

உள்ளத்தின் பதைப்புகளையும், நோக்கங்களையும், ஏக்கங்களையும் அடுக்குகள் வெளியே தெளிவாக விளக்கி நின்றன. வரும் வரும் என்றது வரவின் வழிகள் மேல் தாவிய ஆவல்களை உணர்த்தியது. எண்ணி எண்ணி என்றது ஏங்கிக் கழித்த காலங்களைக் காட்டியது. நெடிய ஆவல்கள் கொடிய அவலங்களாய் விரிகின்றன.

நிலைமைக்கு மிஞ்சிய நசை பேராசை என நின்றது. ’ஆசைக்கு உரோசம் இல்லை’ என்னும் பழமொழியால் அதனையுடையாரது நிலைமை புலனாம். ஆசை வசப்பட்டவர் பேய் கொண்ட பித்தராகின்ரார். வெறி ஏறிய குரங்கு போல் நசை ஏறிய மனம் உரியதொன்றும் உணராமல் கண்டபடி ஓடியலைந்து கடுகித் திரிகின்றது. முடிவில் பரிதாபமாய் இழிவடைகின்றது. இச்சை மனிதனை ஈனமாக்கி விடுகின்றது.

ஒரு வணிகன்; வறிய நிலையினன். சில்லறை வியாபாரங்கள் செய்து சிறிது பொருள் சேர்த்தான்; மெல்ல மெல்ல முயன்றதில் மேலும் பொருள் சேர்ந்தது; அது கொண்டு நல்ல கண்ணாடிச் சாமான்களை வாங்கினான். மறுநாள் அவற்றின் விலைகள் உயர்ந்தன; இவன் உள்ளம் உவகையில் துள்ளியது; பெரிய பெட்டிமேல் வரிசையாக அடுக்கிக் கண்டவர் எவரும் விரும்பும்படி காட்சிப்படுத்தி வைத்தான்; அதன் அருகே பெருமகிழ்வுடன் அமர்ந்தான்; பல பல கருதினான்; சிறிது சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டு பொருள் வருவாய்களைக் குறித்துப் பெரிதும் எண்ணினான்.

‘இந்தப் பண்டங்களை அதிக விலைக்கு விற்கலாம்; அத்தொகையால் வேறு பல தொழில்கள் புரிந்து இாண்டு வருடத்துள் பெரும் பொருள் திரட்டலாம்; பெரிய செல்வம் திரண்டபின் சிறந்த மாளிகை கட்டி உயர்ந்த குலத்தில் ஒரு பருவமங்கையை மணந்து அந்த அழகிய மனைவியோடு செல்வச் சீமானாய் உவந்து வாழ வேண்டும்; இடையே ஏதேனும் ஊடல் நிகழ்ந்தால் அவள் என் காலில் விழுந்து வணங்கி வேண்டும் வரையும் பிணங்கியே நிற்பேன்; அவள் வந்து கெஞ்சாமல் தோழியை ஏவித் தொழுது வேண்டும்படி செய்தால் அப்பாங்கியைக் காலால் ஓங்கி எற்றி விடுவேன்' என்று நினைந்து கொண்டே தன் காலை நீட்டி உதைத்தான். பெட்டி சாய்ந்தது; கண்ணாடிகள் எல்லாம் உடைந்து போயின. இந்தப் பேயன் திடுக்கிட்டு எழுந்து தன் மடத்தனத்தை நினைந்து மறுகி நொந்தான்; ஒருவரிடமும் கூறாமல் அயலிடம் போனான். மயல் உழந்தான். அந்த மனவேதனையோடு மாண்டு முடிந்தான்.

நேரிசை வெண்பா

எட்டி உதைத்தான் எதிரிருந்த கண்ணாடிப்
பெட்டி உடைந்து பிதிர்ந்தது; - மட்டிமகன்
வீணாசை மண்டி விளிந்தான்; இழிநசையின்
பூணாசம் கண்டு புலந்து.

ஆசை ஒருவன் உள்ளத்தில் புகுந்தால் அவனை அது என்ன பாடுபடுத்தும்? என்பதை இதனால் அறிந்து கொள்ளலாம்.

அசையாத ஆண்மையாளனும் நசை வாய்ப்படின் நாய் வாய்ப்பட்ட முயலாய் அவன் நைந்து சிதைந்து நாசம் படுகின்றான்.

எவ்வளவு பொருள்கள் எய்தினாலும் அமைதியின்றி மேலும் ஆவலித்து நிற்கும் அதன் இயல்பு கருதி’ஆராத உள்ளம்’ என்றது. ஆர்தல் - நிறைதல். அவா நீங்கிய மனம்தான் உவாமதி போல் சாந்த நீர்மை சுரந்து ஆர்த்த இன்பங்களை மாந்தி மகிழ்கின்றது.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். 370 அவா வறுத்தல்

எவ்வழியும் நிறைவுறாமல் யாண்டும் ஆவலாய்த் தாவி நீளுகின்ற ஆசை ஒருவனிடம் ஒழியுமாயின் அப்பொழுதே என்றும் நிலையான பேரின்ப நலம் அவனுக்கு உரிமை ஆகின்றது என வள்ளுவர் இவ்வாறு உறுதி கூறி உணர்வு அருளியுள்ளார்.

நசை உள்ளத்தைப் புண்ணாக்கி அல்லல்களை வளர்த்து மனித வாழ்வை மண் ஆக்கி விடும்; அந்தப் பொல்லாத இச்சையை எல்லைகட்டி நீக்கி நல்ல சுக நிலையை நாடிக் கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Sep-19, 10:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

மேலே