வறுமை பணிவே பயிற்றிப் பரனருள் அருளும் - வறுமையின் பெருமை, தருமதீபிகை 455

நேரிசை வெண்பா

அடங்காமை காட்டி அகங்கரிப்பு நீட்டி
மடங்காட்டும் செல்வம்; வறுமை - அடங்கியெவர்
பாலும் பணிவே பயிற்றிப் பரனருளை
மேலும் அருளும் விரைந்து. 455

- வறுமையின் பெருமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

துடுக்கு, செருக்கு, மடமைகளை விளைத்துச் செல்வம் சிறுமைப் படுத்தும்; அடக்கம், பணிவு முதலிய இனிய நீர்மைகளை வளர்த்து இறைவன் அருளையும் வறுமை விரைவில் அருளும் என்கிறார் கவிராஜ பண்டிதர்

செல்வம் வறுமை என்பன மனித வாழ்க்கையில் யாண்டும் மருவி நிற்கின்றன. அவற்றின் நிலைகள் எவ்வழியும் நிலையில்லாதன; நேர்மாறான நீர்மைகளோடு நிலவியுள்ளன. நாளில் பகலும் இரவும் போல் வாழ்வில் அவை உறழ்ந்து வருகின்றன.

நல்லது என்று எல்லாரும் நயந்து கொள்ளுகின்ற செல்வம் பலரிடம் அல்லலே புரிந்து அவகேடுகளே செய்கின்றன; பொல்லாதது என்று எள்ளுகின்ற வறுமை நலம் பல செய்து சிலரிடம் உயர்ந்த மகிமைகளை விளைத்தருளுகின்றன. செல்வர் பலர் பழி பாவங்களில் நடந்து இழிந்து படுவதும், வறியர் பலர் புகழ் புண்ணியங்களை அடைந்து உயர்ந்து திகழ்வதும் உலக அனுபவங்களாய் விளங்கி நிற்கின்றன.

’அடங்காமை காட்டி அகங்கரிப்பு நீட்டி மடம் காட்டும்’. என்றது செல்வம் மிகுந்துள்ள இடங்களைக் கண்டு கொள்ள வந்தது. வன்மையான செல்வரிடம் புகுந்துள்ள பொல்லாத புன்மைகளுள் சில இங்ஙனம் வரைந்து காட்டப்பட்டன.

அடங்காமை ஆவது தீய வழிகளில் துணிந்து செல்லுதல். மனம், மொழி, மெய்கள் இனியனவாய் அடங்கி ஒழுகின் அந்த அடக்கம் புனிதம் உடையதாய்ப் புகழ் மிகப் பெறுகின்றது. அங்ஙனம் இன்றித் துடுக்காய் நிமிர்ந்து மிடுக்குடன் நடந்தால் அதனால் பழியும் இழிவும் விளைந்து அழிவே அடைகின்றது.

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 121 அடக்கமுடைமை

அடங்கி ஒழுகுபவர் தேவராய் உயர்வர்; அடங்காமல் திரிபவர் நரகராய் இழிவர் என இது அறிவுறுத்தியுள்ளது. அடங்காமை நரகத்தில் கொண்டு போய் விடும் என்றதனால் அதன் தீமையைத் தெளிந்து கொள்ளலாம். நரக துன்பத்திற்கு ஏதுவான இந்தக் கொடுமையைச் செல்லப் பிள்ளையாகச் செல்வம் வளர்த்து விடுகின்றது. உள்ளத் திமிர் உயிர்க்குத் துயர் ஆகின்றது.

அகங்கரிப்பு என்றது நான் என்னும் அகங்காரத்தால் முனைந்து எழுகின்ற மனச்செருக்கு. இது பல வழிகளிலும் இழிவுகளை உளவாக்கி மனிதனைப் பாழ்படுத்தி விடும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

அகங்கரிப்பு வரிலெவர்க்கும் அறங்கெடுக்கும்; கற்றகல்வி
அழிக்கும்; உள்ளம்
புகைந்தெழுப்பும்; கனலைமிகப் புழுங்குவிக்கும்; பிறரைநகை
புகுத்தும் ஆர்க்கும்;
தகைந்துசுவர்க் கத்தினையும் தடுக்குமகற் றும்சிறிது
தவம்செய் தாலும்
சுகம்தவிர்க்கும் மீளாத நரகினுய்க்கும் இதுநமர்க்குத்
தூய்மை அன்றே. – மெய்ஞ்ஞான விளக்கம்

அகங்காரத்தால் விளையும் அவலங்களுள் சிலவற்றை இது விவரமாக விளக்கியிருக்கின்றது. மமதையாக எவரையும் இகழ்ந்து பேசுவதும், எதையும் துணிந்து செய்வதும், யாண்டும் இறுமாந்து நிற்பதும் செல்வ வெறியின் இயல்புகளாயுள்ளன.

செல்வச் செருக்கு என்பது ஒரு பொல்லாத புன்மையாம். எத்தகைய மதிமான்களையும் சித்தத்தைத் திரித்து இது பித்தம் மிகச் செய்து பிழைபாடுகளை விளைத்து விடுகின்றது.

1565
அறன்நி ரம்பிய அருளுடை அருந்தவர்க் கேனும்,
பெறல்அ ருந்திருப் பெற்றபின், சிந்தனை பிறிதாம்;. 70 மந்தரை சூழ்ச்சிப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

பொல்லாத கூனியும் செல்வத்தைக் குறித்து இப்படி நல்ல ஒரு நீதியை எல்லாரும் அறியச் சொல்லியிருக்கிறாள். அரிய தவமுடைய பெரியவர்களையும் வெறியாக்கி விடும் என்றதனால் செல்வக் களிப்பின் வீறும், வேகமும் அறியலாகும்.

கழிபெருஞ் செல்வக் கள்ளாட்(டு) அயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ? - மணிமேகலை

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)

அரும்பெறற் செல்வம்வந்(து) அடைந்த காலையில்
திருந்திய நல்லறம் செய்து நாள்தொறும்
விரிந்தநற் புகழினை விளைத்தல் வீறுசால்
புரந்தரற்(கு) ஆயினும் புரிய லாகுமோ? 1

தனித்தனி முச்சுடர் இயற்றித் தங்கிய
அனைத்துல(கு) இருளையும் அகற்று நான்முகன்
நினைப்பரும் செல்வம்வந்(து) எய்தின் நீடிய
மனச்செருக்(கு) எனும்இருள் அகற்ற வல்லனோ? 2

ஏர்பெறும் இருநிதிச் செருக்கை எய்திடின்
தேர்செவி யுடையரும் செவிடர் ஆகுவர்;
ஓர்தரும் உரைவலோர் ஊமர் ஆகுவர்:
கூர்விழி யுடையரும் குருடர் ஆவரே. 3 - காசி காண்டம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

ஒப்பருநற் குணத்தவர்க்குங் கொலைகாமங் கட்களவை
..உபதே சிக்கும்
அப்பனாக நட்பினர்க்குட் பகைவிளைக்குஞ் சத்துருவாய்
..அகிலத் துற்ற
செப்பரிய துயர்க்கெல்லா மாதாவாய்த் தீவினைக்கோர்
..செவிலி யாய
இப்பொருளை நற்பொருளென் றெப்படிநீ யொப்புகின்றாய்
..ஏழை நெஞ்சே. 2 - பொருளாசை ஒழித்தல், நீதிநூல்,
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

நோக்கிருந்தும் அந்தகராக் காதிருந்துஞ் செவிடராக
..நோயில் லாத
வாக்கிருந்து மூகையரா மதியிருந்தும் இல்லாரா
..வளருங் கைகால்
போக்கிருந்தும் முடவராக வுயிரிருந்தும் இல்லாத
..பூட்சி யாரா
ஆக்குமிந்தத் தனமதனை யாக்கமென நினைத்தனைநீ
..அகக்கு ரங்கே. 3 - பொருளாசை ஒழித்தல், நீதிநூல்.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

செல்வம் அடைந்தபோது மனிதர் அடையும் நிலைகளை இவை தெளிவாகக் குறித்திருக்கின்றன. உலக வாழ்வுக்கு அனுகூலம் உடையதாயினும் பொருளடைவு மேலே உயர்நிலையை அடையாதபடி உயிர்களை மருளடையச் செய்கின்றது. அங்ஙனம் செய்து வருதலினாலேதான் உய்தியை நாடிய ஞானிகள் அதனை வெய்யது என வெறுத்து விலகிப் போகின்றார்,

'செல்வம் என்.றும் அபாயமுடையது என எண்ணுக; உண்மையாக அதனால் யாதொரு சுகமும் இல்லை; பொருள் படைத்தவர் தம் உயிர்க்குக் கேடு நேருமோ? என்று தமது பிள்ளைகளிடமும் பயம் அடைகின்றனர். உலகம் எங்கும் இவ்வாறே அவலமும் கவலையும் பரவியுள்ளன' என ஆதி சங்கராச்சாரியார் இங்ஙனம் கூறியிருக்கிறார், அர்த்தம் அநர்த்தம் என்றது உய்த்துணரவுரியது.

இனியது என்று கொஞ்சுகின்ற செல்வம் இவ்வாறு இன்னல் நிலையமாய் மன்னியுள்ளது; இன்னாது என்று அஞ்சுகின்ற வறுமை மனிதனுடைய நெஞ்சில் பல பண்புகளை வளர்த்துத் தெய்வ கதியில் உய்த்து உயிர்களுக்கு உய்தி புரிந்தருள்கின்றது.

நிழலின் கீழ் உள்ள பைங்கூழ் போலச் செல்வத்தில் வாழ்பவன் மேலான விளைவு குன்றி வெளியே வெளுத்து நிற்கின்றான்; வெயிலில் வாடிய பயிர்போல் வறுமையால் வாடிய உயிர் உள்ளே உறுதியாய் வளர்ச்சியடைந்து உயர்ச்சி யுறுகின்றது.

அடக்கம், அமைதி, பணிவு முதலிய இனிய நீர்மைகள் வறுமையில் வளர்த்து வருகின்றன; வரவே மனிதன் புனிதனாய் உயர்ந்து தனி மகிமை அடைந்து பரமன்.அருளைப் பெறுகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Sep-19, 10:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 106

சிறந்த கட்டுரைகள்

மேலே