பெண்முதலாம் ஆசை பெருக்கிப் பெருகுகின்றாய் - நசை, தருமதீபிகை 446

நேரிசை வெண்பா

பெண்முதலாம் ஆசை பெருக்கிப் பெருகுகின்றாய்;
உண்முதலை நாடா(து) ஒழிகின்றாய்; - கண்முழுதும்
பஞ்சடைந்து மெய்வாய் பனித்தைமேல் உந்திப்பின்
நெஞ்சடைத்தால் என்னாம் நினை. 446

- நசை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பெண் ஆசை முதலாகப் பலவகை ஆசைகளிலும் பெருகி உள்முதலை உணராமல் ஒழிகின்றாய்! கண் பஞ்சடைந்து வாய், மெய் நடுங்கி நெஞ்சடைத்துச் சாக நேர்வதை நினைந்து பார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மண் ஆசை, பொன் ஆசைகளினும் பெண் ஆசையில் மனிதர் பிழை மிகப் புரிதலால் அது முன்னுற வந்தது. உரிய மனைவி மேல் பிரியம் கொண்டிருத்தல் தரும முறையாம். அந்நிலை மீறி அயல் மாதரை விழையின் அது ‘இச்சை ஆசை’ என்று கொச்சை மொழிகளால் குறிக்கப்படுகின்றது.

இச்சைத் தன்மையி னிற்பிறர் இல்லினை
நச்சி நாளும் நவையுற நாணிலன்.

இராவணன் சீதையை இச்சித்த இழிவைக் குறித்து அனுமான் இவ்வாறு அவன் எதிரே இடித்துக் கூறியிருக்கிறான். பேராசை பேர்ந்ததோ? என அண்ணன் ஆசையால் நாசமடைந்ததை நினைந்து விபீடணன் கண்ணீர் சொரித்திருக்கிறான்.

நெறி கேடான நசை அறிவைக் கெடுத்துப் பழிகேடுகள் செய்து இழிவை நீட்டி ஈனன் ஆக்கி விடுகின்றது.

கோட்டியுள் கொம்பர் குவிமுலை நோக்குவோன்
ஓட்டை மனவன் உரமிலி. 12 பரிபாடல்

கூட்டத்திலே பருவ மங்கையரின் கொங்கைகளை நச்சி நோக்கும் கொச்சைகளை நல்வழுதியார் இங்ஙனம் இகழ்ந்து சொல்லியிருக்கிறார். இழி நசையாளனை ஓட்டை மனத்தான் என்று காட்டியிருக்கும் காட்சி உயர் சுவையுடையது. பெண்ணாசை புகின் மத்து எறி உடைதயிர் போல் மனிதன் நெஞ்சம் பித்து ஏறி உடைவதால் அந்த மனிதன் ஓட்டை மனவன் என நின்றான். இந்த ஓட்டையில்லாத உள்ளங்களை நோட்டம் போட்டு நோக்கினால் உலகில் எவ்வளவு தேறும்? ஓட்டை மனிதன் இவன்; கோட்டை குலையாத குல வீரன் இவனென இங்கே நயமாகக் காட்டியுள்ளமை கருதி உணரவுரியது. இச்சையாளன் இழிவுறுகின்றான்; அஃது இல்லாதவன் உச்ச நிலையில் உயர் மகிமை அடைகின்றான்.

இச்சைமிகின் அந்த மனிதன் கொச்சை ஆகின்றான் மணந்த மனைவி அளவில் நில்லாமல் மையல் மிகுந்தவன் இழிந்து படுதல் போல் அமைந்த பொருளில் அமைதியுறாமல் அதிகம் அவாவுகின்றவன் அவதியுற நேர்கின்றான்.

பொருளாசை மனிதனை மருளன் ஆக்கி விடுகின்றது. வரவு வளர ஆசை வளர்கின்றது. பெரிய செல்வம் நிறைந்தவுடனே தன்னை ஒரு புதிய அதிசய தெய்வமாக எண்ணிக் கொள்கின்றான். தனக்கு நிகராகச் செல்வநிலையில் எவரேனும் தலை எடுத்தபோது அவன் குலை துடிக்கின்றான். எவரையும் மிஞ்ச விடாதபடி நெஞ்சம் துடித்தலால் அல்லும் பகலும் அல்லலே அடைந்து எல்லையில்லாத இன்னல்களில் உழல்கின்றான்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

மன்னிய செல்வர் ஆகி வாழினும் வளம்மிக் கீண்டித்
தன்னின்மேம் பட்டார்க் கண்டு தழைத்தவர் போறல் வேட்டுப்
பின்னரும் ஈட்டி ஈட்டிப் பேதுறல் அன்றிப் பெற்ற
நன்னிதி கொண்டு நீதி நடத்துதல் ஏவர் வல்லார்? 329 தணிகைப் புராணம்

செல்வர் எவ்வழியும் யாண்டும் ஈட்டமே கருதிப் பித்துப் பிடித்துத் திரிவர் என்று இது காட்டியுள்ளது. ஒரு செல்வனிடம் எழுபத்தேழு இலட்சம் பொன்கள் சேர்ந்திருந்தன. அப்பொழுது அவனுக்கு வயது ஐம்பது. தன் கையில் பெரும் பொருள் நிறைந்திருந்தும் அவன் நெஞ்சில் கொடுங்கவலைகளே குடிகொண்டு நின்றன. தன் செல்வ நிலையைக் கோடி ஆக்கினால் தானொரு கோடீசுவரன் என்று யாவரும் புகழ வாழலாமென்னும் ஆசை அவன் உள்ளத்தில் நெடிது நின்றது. அதனால் இரவும் பகலும் வரவிலேயே கண்ணாய் மறுகியுழந்தான். ஒரு சிறு காசு செலவாக நேர்ந்தாலும் பெரிய இடி விழுந்தது போல் அவன் உயிர் துடித்தயர்ந்தான். மிகப் பிசுனமாய் முயன்று தொகுத்தான்;

ஐந்து ஆண்டுகளில் எண்பத்தெட்டு இலட்சங்கள் ஆயின. அதற்கு மேல் ஏறவில்லை. மேலும் எவ்வளவோ முயன்று பார்த்தான்; கருதியபடி யாதும் கைகூடாது போயது. பன்னிரண்டு இலட்சம் குறை என்று எண்ணி எண்ணிடலரிய இன்னலடைந்தான். அந்த ஏக்கத்திலேயே இறந்தான்.

நேரிசை வெண்பா

ஈட்டி யிருந்த இரும்பொருளை எண்ணியெண்ணி
நீட்டி நிலையாய் நிறைசெய்து - கூட்டியொரு
கோடியாய்க் கண்டு கொளவிழைந்தான் ஐயகோl
கோடியே கண்டான் குலைந்து.

அந்த ஆசைப் பேயன் வாழ்வு இவ்வாறு முடிந்தது. இறந்து போன சவத்தின் மீது போர்த்துகின்ற புதிய ஆடையை இரண்டாவது கோடி என்றது. வாழ்வில் கோடி காண விழைந்தான்; அது கைகூடவில்லை; ஆயினும் செத்தபின் கண்டான் என ஒரு சித்தர் நகைச்சுவையோடு சொல்லிப் போனார்,

பொன்னையும், பெண்ணையும், மண்ணையும் வரம்பு மீறி விழையுங்கால் அது பேராசையாய் மாறி மனிதரை இழிநிலையில் ஆழ்த்தி பழி வழிகளில் தாழ்த்தி அழிதுயர்களில் வீழ்த்தி விடுகின்றது.

இளிவும், இன்னலும், அழிவும் இச்சையில் விளைதலால் அதனையுடையவர் அச்சமும் திகிலும் அவலமும் அடைகின்றனர்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

விழைவெ னப்படு கின்றது மென்மெல
அழல விர்ந்த கனகத்(து) அரும்பி,மெல்
மழலை மாதர் மருங்கில் படர்ந்து,பைங்
குழவி மீது கொழுந்துவிட்(டு) ஓங்குமால். 1

உழுது பல்வளம் உய்த்த மழவிடை
கிழவு பட்டிடின் போற்றல் கெழீஇயதே
விழுமெய் யாங்கு முதிர்ந்திடின் வேட்டதன்
மழலை மாதரும் மைந்தரும் போற்றிலார். 2

இம்பர் வாழ்வுழி ஈறில தாகிய
உம்பர் வாழ்வதற்(கு) ஒன்றும் இயற்றிலன்
ஐம்பொ றிக்கிரை தேடி அலமந்து
வெம்பு கின்ற எரிவிருந்(து) ஆவனால். 3 பாகவதம் 8

மனிதர் ஆசை வயத்தராய்த் தேக போகங்களையே நச்சி நின்று ஆன்ம உரிமையை இழந்து அவமே அழிந்து படுவது இழிந்த பழியாம் என இது இரங்கியுள்ளது.

உள்ளே ஆன்ம நாயகனாயுள்ள பரம்பொருளை ’உள் முதல்’ என்றது. நித்தியமான இனிய முதலைக் கருதாமல் அநித்தியமான சிறிய முதலையே அவாவி அழிவது பெரிய இழவாகின்றது.

’கண்பஞ்சடைந்து மெய்வாய் பனித்து ஐமேல் உந்தி’ என்றது மரண நிலையின் துயரக் காட்சிகளை நினைவுறுத்தியது, பனித்தல் – நடுங்குதல், ஐ - சிலேட்டுமம்,

கண் ஒளி மழுங்கி, மெய் நடுங்கி, வாய் அடங்கி நோயுழந்து மேல் மூச்சு வாங்கி முடிந்து படுமுன் முடிவான பயனை அடைந்து கொள்கின்றவன் பிறந்த பேறு பெற்றவன் ஆகின்றான்.

கரணங்கள் யாவும் கலங்கி அலமருகின்ற அந்த மரண வேதனை மிகவும் கொடியதாதலால் அது நேருமுன்னரே நிலையான உறுதி நலனைத் தலையாக மருவினவன் யாதொரு வெருவுதலும் இன்றி யாண்டும் அகமகிழ்ந்து அமைதி பெறுகின்றான்.

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட்(டு) ஐம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வான். (பாடல் 1) – 130 திருவையாறு, முதல் திருமுறை, திருஞான சம்பந்தர் தேவாரம்

மரண காலத்தில் வந்து பரமன் அருள்புரிவான் என்று திருஞான சம்பந்தர் இவ்வாறு கருதியிருக்கிறார். எவ்வளவு உறவு, எவ்வளவு உரிமை, எவ்வளவு உறுதி இவ்வுரைகளில் மருவியுள்ளன!

கட்டளைக் கலித்துறை

சூலம் பிடித்தெம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன்;கடல் மீதெழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே. கந்தர் அலங்காரம்

அருணகிரிநாதர் இப்படித் துணிவு கொண்டு கூறியுள்ளார். ஆசையை நீச நிலைகளில் செலுத்தி நாசம் அடையாமல் ஈசனிடம் செலுத்தி என்றும்.அழியாத விழுமிய இன்பம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-19, 8:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 140

மேலே