நீங்கா நினைவலைகள் சின்னத் தாத்தா வேலாயுதம் அவர்கள்

நீங்கா நினைவலைகள் .....(சின்னத் தாத்தா வேலாயுதம் அவர்கள்)

அன்று மாலை வீட்டுத் தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தேன்.... இல்லை இல்லை வலுவாக இழுத்துக் கொய்துக் கொண்டிருந்தேன் .... சில பூக்கள் காம்பின்றி இதழ்கள் மட்டும் என் கரங்களில்....
“மலரும் மங்கையும் ஒரு சாதி” நீ பூப்பறிக்குறத பார்த்தா அசுரகன குணமா இருக்கே..... குரல் வந்த திசையில் நான் கோபமாய் நோக்க..... அழகிய பெரிய கனிந்தக் கண்கள்.... வெண்பனி கேசம்.... நல்லக் கூரிய நாசி..... அகன்ற தோள்கள்... அளவிற்கு பெரிதாய் அரைக்கை வெண்மேல் சட்டை வேட்டி.... ஆம்! ஆண் சரஸ்வதியாய் ஒரு முதியவர் அகம் நிறைந்த புன்னகையுடன் நின்றிருந்தார் வாயிலில்.....

சமையலறையில் நின்றிருந்த என் அம்மா.... வேகம் வேகமாய் வெளியே வந்து.... வணக்கம் சொல்லி வாங்க மாமா வாங்க.... இப்பதா எங்க வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா...?.... மிகுந்த மகிழ்வோடு வரவேற்று உள்ளே அவரை அமர வைத்தார்..... நான் மிகுந்த ஆவலுடன் அவரை அப்படியே பார்த்துக் கொண்டு நின்றேன்.... இவர் உனக்கு சின்னத் தாத்தா....வைத்திலிங்கம் தாத்தாவிற்கு தம்பி.... இப்படித்தான் முதல் முதலில் வேலாயுதம் தாத்தாவின் அறிமுகம் கிடைத்தது....
ஒன்பது வயதில் நான் இழந்த தாத்தாவின் அன்பு அனுபவ அறிவு ஆலோசனை அத்தனையும் ஈடு செய்ய ஆண்டவனே அனுப்பி வைத்த தேவதூதன் தான் அவர்....

அன்றுமுதல் தினம் தினம் மாலைப் பொழுதுகள் எனக்கு மட்டுமல்ல என் இரு சகோதரர்களுக்கும் மிக ஆனந்தமாய் கழிந்தது.... ஆறுமணி ஆனவுடன் வாயிலைப் பார்த்த வண்ணம் வேலாயுதம் தாத்தாவின் வருகைக்காய் காத்திருப்போம்... மனக் கணக்குகள், மண்வாசம் மாறா பழமொழிகள், ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், அரிஸ்டாட்டில் ஆர்க்கமெட்டீஸ் , பித்தாகோரஸ் டார்வின் என அனைவர் வாழ்க்கை வரலாறுகள்,உலக வரலாறு , தட்டிக் கேட்டவுடன் உலக நாடுகளில் உள்ள தலைநகரங்கள் துறைமுகங்களை தலைகீழாய் சொல்லும் திறன், ஆற்றங்கரை நாகரீகங்கள் , மருத்துவம் மந்திரம், தற்காப்புக்கலை, திரையிசை பாடல்கள் என அவருடன் பேசாத துறைகளே கிடையாது.....

அன்றைய ஐந்தாம் வகுப்பு..... ஆனால் உலகளாவிய அறிவு.... அத்தனையும் இரண்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த அண்ணன் வைத்திலிங்கம் அவர்களிடம் கற்றறிந்ததாய் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்வார் ......

இராமாயணம் மகாபாரதக் கதைகளை மிகுந்த உணர்வுடன் எங்குளுக்கு எடுத்துரைத்தவர் அவரே.....
கம்பரசத்தை எங்களுக்கு திகட்டத் திகட்ட ஊட்டியவர்....
”வாய்த்த வைரபுரி மாகாளி அம்மா கேள்
காய்த்த தினைப்புனத்தில் காலை வைத்து
மாய்த்த காளிங்கராயன் குதிரையை
மாளக் கொண்டுபோ...”இதுதான் கம்பர் காளிதேவி வரம்பெற்று முதல் முதலாய் பாடிய பாடலென அவர் கூறிய கதை இன்றும் என் நினைவில் நீங்காமல் உள்ளது....
“ஒரு கணையால் அந்த உயர் பஞ்ச பாண்டவாளை
கருவறுத்திட சமர்த்தனான
கர்ணன் நான் இருக்கும்போது ....” என்று மகாபாரதத்தில் கர்ணன் நண்பன் துரியோதனனிடம் சூளுரைத்தக் காட்சியை விளக்கும்போது ..... அவரே கர்ணனாக மாறி நாடி நரம்பெல்லாம் துடிக்க உணர்ச்சி கொப்பளிக்க... தன்னையும் அறியாமல் தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று தன் நீண்ட கைகளை ஆட்டிப் பேசியதை நினைக்கும் போது..... இன்றளவும் அதே உணர்வு என்னிலும் ஏற்படும்.....சில நேரங்களில் உணர்ச்சிப் பெருக்க பேசும்போது வேட்டியை பலமுறை அவிழ்த்து மீண்டும் கட்டுவதை பார்க்கும்போது என் பெரிய தந்தை ஆலடி அருணா ஒரு நிமிடம் கண்முன் வந்துப்போவார்......
எங்கள் வீட்டில் அனைவரின் குணாதிசயங்களை கூர்ந்து கவனித்து இரசித்து அதற்கேற்ப மகாபாரதக் காதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவர் வழக்கம்.... என் அண்ணன் கலைவாணனை அர்ஜுனனுடன் எப்போதும் ஒப்பிடுவார்.... தம்பி இசைவாணன் அவர் கண்களுக்கு குறும்பு செய்யும் கண்ணனாகவே தெரியும்.... என்னை பீம சேனன் என்பார்.... அதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு..... ஒருநாள் மாலை நாங்கள் படித்த பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் அப்பாவைப் பார்க்க வந்திருந்தார் .... என் சகோதரர்கள் இருவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்தினர்.... நான் இருந்த இடத்தைவிட்டு அசையவும் இல்லை.... வணக்கமும் சொல்லாமல் அசட்டையாய் அமரந்திருந்தேன்..... அவர் சென்றவுடன் தாத்தா என்னிடம் மெல்லக் கேட்டார்....எம்மா நீயும் அந்தப் பள்ளிக்கூடத்தில தானே படிச்ச.... எதுக்கு நீ எந்திருக்கவே இல்ல... இதுக்கு ஏதோ காரணம் இருக்கோ என்றார்.... ஆமா தாத்தா....ஒரு பள்ளி தலைமையாசிரியரா இருக்கிறவர் தன் பள்ளி மாணவர்கள் நல்லா படிச்சு நல்ல நிலமைக்கு வரதான் ஆசைப்படனும்.... ஆனா இவர் என் அண்ணன் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அவனுக்கு மளிகைக்கடை வைத்து கொடுக்கும்படி அப்பாவிடம் ஆலோசனை சொன்னார் .... அண்ணன் வகுப்பில் எப்போதும் முதல் மாணவன்....அவன் மருத்துவர் ஆகவேண்டும் என்பது எங்கள் அனைவரின் கனவும்.....அதனால் அவர் அப்படிக்கூறியது எனக்கு மிகவும் மனவேதனையை தந்தது.... அன்றுமுதல் அவர்மேல் மரியாதையே போய்விட்டது.... அதற்குப் பிறகு அவர் எப்போது வந்தாலும் அவருக்கு மரியாதை கொடுத்ததே இல்லை என்று தாத்தாவிடம் விளக்கினேன்.... அவர் சிரித்துக் கொண்டே பீமசேனி என்று என்னை அழைத்தார்......
கவிதாயினியாய் என் பரிணாம வளர்ச்சிக்கக் காரணம் என் தாத்தா வைத்திலிங்கம் அவர்களிடம் பெற்ற மரபணு மட்டுமல்ல சின்னத் தாத்தா வேலாயுதம் அவர்கள் மூலம் செவிவழி நுகர்ந்த கம்பராமாயணம் மற்றும் மகாபாரதம் செய்யுள் வடிவ கதைகளும் தான்...
கண்ணனின் கீதா உபதேசத்தின் சாராம்சத்தை எனக்கு போதித்த ஆசானும் அவரே.... என் கவிதைகளின் ஒவ்வொரு அசை சீர் தொடைகளில் உயிரணுவாய் மிளிர்பவரும் அவரே.....

ஆயிரம் அரிஸ்டாட்டிலுக்குச் சமமான அன்புத் தாத்தா..... நீங்கள் மறைந்த செய்தி உண்மையில் என் இதயத்தை உலுக்கியது.... அதனால் கடைசியாய் உங்கள் முகம்காண மனம் துடித்தாலும்.....புன்னகை தவழும் அந்த முகம் சலனமற்று இருப்பதைக் காண தைரியம் இன்றி நான் வரவேயில்லை .... ஆனால் ஆயுள் உள்ளவரை உங்கள் அன்பையும் அறிவுரைகளையும் மறவாது காப்பேன்....

எழுதியவர் : வை.அமுதா (16-Sep-19, 9:40 am)
பார்வை : 206

மேலே