வெறும்பொருளை விட்டால் பரமே உறும்பொருள் - வறுமையின் பெருமை, தருமதீபிகை 457

நேரிசை வெண்பா

வெறும்பொருளை விட்ட பொழுது பரமே
உறும்பொருள் ஆகி உறவாம் - வெறும்பொருளைப்
பற்றி யிருக்கும் வரையும் பரம்பொருள்
ஒற்றி யிருக்கும் உனை. 457

- வறுமையின் பெருமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வெறுமையான செல்வப் பொருளை விட்டபொழுதுதான் அருமையான பரம்பொருள் உரிமையாய் வரும்; அதனைத் தொட்டு நிற்கும் வரையும் இறைவன் அருகில் அணுக மாட்டான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், உண்மையான பொருள் நிலையை உணர்த்துகின்றது.

கடவுளுக்குப் பரம்பொருள் என்று ஒரு பெயர். எல்லாவற்றினும் மேலானது என்னும் ஏதுவான் வந்தது. என்றும் நிலையான அந்த இன்பப் பொருளையே ஆன்மாக்கள் எவ்வழியும் யாண்டும் அடையவுரியன. அதனை அடையாத வரையும் துன்பம் நீங்காது.

பேரின்ப நிலையமாய்ப் பெருகியுள்ள அப்பரம் பொருளை அடைய வேண்டுமாயின் பாரில் பற்றியுள்ள வெறும் பொருளை அறவே விட்டுவிட வேண்டும். கீழான இதனைத் தொட்டிருக்கும் வரையும் மேலான அதனை எட்டிப் பார்க்கவும் முடியாது.

உலகப் பொருளை ஒருவியபோது உண்மைப் பொருளை உரிமையுடன் தானாகவே ஆன்மா மருவிக் கொள்கின்றது. மெய்யான பரம்பொருளை மேவ முடியாதபடி பொய்யான புலைப்பொருள் பிணித்து நிற்றலால் மேலோர் அதனை வெறுத்துவிட நேர்கின்றார்,

வெறும்பொருள் என்றது. ஆன்ம வுரிமையை அடைய ஒட்டாதபடி ஒட்டி உண்மையில் வறியனாக்கித் தன்னையுடையானைக் கடைப்படுத்தி நிற்கும் கொடுமை தெரிய வந்தது.

'பொய்ப்பொருளைப் பற்றிப் புலையாடினார் இழிந்தார்;
மெய்ப்பொருளைப் பற்றினார் மேலெழுந்தார்.

என்றமையால் வெறும் .பொருளின் கீழ்மையும், பரம்பொருளின் மேன்மையும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

அல்லல்களை விளைத்து அவம் செய்து விடுதலால் செல்வம் தொல்லை என்று உள்ளம் தெளித்தவர் ஒதுக்கி விடுகின்றனர்.

கலி விருத்தம்

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங்
கள்வரென் றிவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளி லுறுபொருளை யொட்டா தொழிந்தவ
ரெள்ளும் பெருந்துயர்நோ யெவ்வ மிகப்பவோ. 35

ஈண்ட லரிதாய்க் கெடுத லெளிதாகி
நாண்ட லரிதாய் நடுக்கம் பலதரூஉ
மாண்பி லியற்கை மருவி லரும்பொருளை
வேண்டா தொழிந்தார் விறலோ விழுமிதே. 38 வளையாபதி

பொருளை வேண்டாது விட்டவர் இங்ஙனம் புகழ் அடைந்துள்ளனர். மெய்ப்பொருளைத் தெளிந்தவர் பொய்ப்பொருளை இகழ்ந்து விடுகின்றனர். எவ்வழியும் அழிவுடையதைத் தாமாகவே ஒழிய விட்டு விழுமியராய் உவகை அடைகின்றனர்.

The loss of wealth is loss of dirt,
As sages in all times assert:
The happy man’s without a shirt. - Heywood

பொருள் அழிவது அழுக்கு ஒழிவது ஆம் என ஞானிகள் என்றும் உறுதி செய்துள்ளனர்; ஒரு சட்டையும் இல்லாமலே மனிதன் பேரின்பத்தை அனுபவிக்கின்றான்’ என்று ஹீவுட் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார், துறவு நிலையை எந்த நாடும் மகிமையாய் மதித்துள்ளமையை இதனால் உணர்ந்து கொள்ளலாம். ஆன்ம நலனை அருள்வது யாண்டும் மேன்மை ஆகின்றது.

உள்ளே பரம்பொருளை நிச்சயமாகப் பற்றி நிற்பவர் வெளியே உலகப் பொருள்களைத் துச்சமாக எண்ணி விடுகின்றனர். அங்ஙனம் விட்டவர் மேலான பாக்கியசாலிகளாய் விளங்கி அரிய பேரின்ப நலன்களை அனுபவித்து மகிழ்கின்றனர்.

நேரிசை ஆசிரியப்பா

பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்
ஒருபக லெழுவ ரெய்தி யற்றே
வையமுந் தவழுந் தூக்கிற் றவத்துக்
கையலி யனைத்து மாற்றா தாகலிற்
5. கைவிட்டனரே காதல ரதனால்
விட்டோரை விடாஅ டிருவே
விடாஅ தோரிவள் விடப்பட் டோரே. 358 புறநாநூறு, வான்மீகியார்

உலகம் முழுவதும் தவத்திற்குக் கடுகு அளவும் நிகர் ஆகாது; அதனை வேண்டாம் என்று வெறுத்து விட்டவரைத் திருமகள் விரும்பிக் கொள்ளுகின்றாள்; விடாதவரை அவள் வெறுத்து விடுகின்றாள்' என வான்மீகியார் என்னும் பெரியார் இவ்வாறு பாடியிருக்கிறார், ஐயவி - சிறு கடுகு, வறுமை தரும் தெய்வ கதியை அறிய வேண்டும். மோட்ச லட்சுமியை இங்கே திரு என்றது.

2983
நற்றவம் பரவை ஞால
நாமுட னிறுப்பின் வைய
மற்றமி றவத்திற் கென்று
மையவி யனைத்து மாற்றா
திற்றென வுணர்ந்து நிற்பிற்
றிருமக ளென்று நீங்காள்
பற்றொடே நிற்பி னென்றுந்
திருமகள் பற்றல் செல்லாள். 385 - 26 துறவு வலியுறுத்தல், முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

மேலே குறித்த பாட்டின் கருத்தைத் திருத்தமாக இது விளக்கி வந்துள்ளது. உலகப் பொருளைப் பற்றி நிற்பவரை முத்தித் திரு பற்றாது விடுகின்றாள்; அதனை ஒருவி விட்டவரை அவள் உரிமையுடன் மருவிக் கொள்ளுகின்றாள்.

’வெறும்பொருளை விடின் பரம்பொருள் உறும்பொருள் ஆகும்’ என்னும் உண்மையை இவை உறுதியாக உணர்த்தியுள்ளன.

695 நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட்(டு) அம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியேனே. – முதல் ஆயிரம், குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி, 5, 9

உலகப் பொருள்களை வேண்டாமல் பரம்பொருளை வேண்டி நிற்பவர் இவ்வாறு பேரின்ப நிலையை அடைந்து மகிழ்தலால் அவர் பெரிய பாக்கியசாலிகள் ஆகின்றனர்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை;
யாண்டும் அஃதொப்ப(து) இல். 363 அவாவறுத்தல்

ஈண்டு இதன் பொருளை ஓர்ந்துணர்ந்து கொள்ள வேண்டும். அழியும் பொருளை விழையாதவன் அழியாத திருவை உரிமையாகப் பெறுகின்றமையால் அவன் விழுமிய செல்வமாய் விளங்கி மகிழ்கின்றான். அவன் எதிரே பெரிய முடிமன்னரும் சிறியராய் அடிபணிந்து நிற்கின்றார்.

இந்திரன் வெள்ளை யானையின் மேல் அமர்ந்து அரிய பல ஆடம்பரங்களுடன் பவனி வந்தான். அங்ஙனம் வருங்கால் இடையே துருவாச முனிவர் கண்டார். தேவராசன் என்ற மரியாதையால் தமது கையில் இருந்த தாமரைப் பூவை அவனிடம் உரிமையோடு கொடுத்தார். அவன் அதனை மதியாமல் வாங்கி மதயானை மீது வைத்தான். அது கீழே வீழ்த்தி மிதித்து விட்டது. முனிவர் கொதித்து. அவனைக் கடுத்துச் சபித்தார். அப்பொழுது அவர் துள்ளிக் குதித்து எள்ளி இகழ்ந்து இந்திரனை நோக்கிப் பேசியிருப்பது யாரும் உள்ளி உணர வுரியது.

தரவு கொச்சகக் கலிப்பா

452 புள்ளியதோ லாடை புனைந்தரவப் பூணணிந்த
வெள்ளிய செங்கண் விடையா னடிக்கமலம்
உள்ளிய மெய்யன் புடையா ரருவருத்துத்
தள்ளிய செல்வத் தருக்கினா யென்செய்தாய். 12

454 வண்டுளருந் தண்டுழாய் மாயோ னிறுமாப்பும்
புண்டரிகப் போதுறையும் புத்தே ளிறுமாப்பும்
அண்டர்தொழ வாழுன் னிறுமாப்பு மாலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால். 14

455 சேட்டானை வானவநின் சென்னி செழியரிலோர்
வாட்டானை வீரன் வளையாற் சிதறுகநின்
கோட்டான நாற்கோட்டு வெண்ணிறத்த குஞ்சரமுங்
காட்டானை யாகவென விட்டான் கடுஞ்சாபம். 15 வெள்ளை யானைச் சாபம் தீர்த்த படலம், மதுரைக் காண்டம், திருவிளையாடற் புராணம்

இந்தப் பாட்டுகளை ஊன்றி நோக்கி உறுதியுண்மைகளை ஓர்ந்து கொள்ள வேண்டும். எல்லாச் செல்வங்களையும் உடைய இந்திரனைப் பார்த்து யாதொரு பொருளும் இல்லாத மாதவர் இங்ஙனம் மோதி முனிந்துள்ளார். ’என் போன்றவர்கள் அருவருத்துக் காலால் எற்றிக் தள்ளிய புல்லிய செல்வத்தைக் கைக்கொண்டு பெருஞ் செருக்கு மண்டி நிற்கின்ற ஓ. இந்திரா! நீ இழிந்து தொலைவாய்” என்று மொழிந்திருப்பது எவ்வளவு அதிசயங்களைத் தெளிந்து கொள்ளச் செய்கின்றது. வெறும் பொருளைப் பற்றி நின்றவன் பரம்பொருளை ஒட்டியுள்ளவன் எதிரே பட்டிருக்கும் பாட்டை இங்கே பார்த்து மகிழ்கின்றோம். என்றும் அழியாத பேரின்பப் பொருளைப் பெற்ற போதுதான் மனிதன் பிறவிப் பேறுடையனாய்ப் பெருமகிமை அடைகின்றான்.

வெறும்பொருளை இகழ்ந்து விட்டுப் பரம்பொருளை விழைந்து கொண்டு பெரியோர் மகிழ்ந்து வருகின்றனராகையால் உலகப் பொருள் இல்லாமையால் உனக்கு யாதொரு குறையும் இல்லை; உள்ளம் நிறைவுடன் உறுதியாய் நின்று உயர்கதி காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Sep-19, 12:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

மேலே