ஆசை அறினோ வளர்ந்தபெரு நீசப் பிறப்பும் நிலையறும் - நசை, தருமதீபிகை 448

நேரிசை வெண்பா

ஆசை அறினோ அதனால் வளர்ந்தபெரு
நீசப் பிறப்பும் நிலையறுமே - மூசிநின்ற
வித்தழியின் மேலாம் விளைவும் ஒருசேர
ஒத்தழியும் அன்றோ உணர். 448

- நசை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வித்து அழிந்தால் விளைவு ஒழிந்து போதல் போல், ஆசை அற்றதேல் அதனால் விளைந்து வருகின்ற கொடிய பிறவிகள் யாவும் அடியோடு அற்றுப்போகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், ஆசை அறின் பிறவி அறும் என்கின்றது.

பிறவி எவ்வகையிலும் துன்பம் மிகவுடையது. பிறந்த ஒருவன் இறக்கும் வரையும் இழிந்த பல அல்லல்களில் உழல்கிறான்; இறந்த பின்னரும் வாசனை வயத்தனாய் மீண்டும் பிறந்து வர நேர்கின்றான். இவ்வாறு ஓயாது அல்லலிலேயே அலைந்து வருதலால் பிறவி துயரக் கடல் எனப்பட்டது. எல்லை காண முடியாத இந்தத் துன்பத் தொல்லையிலிருந்து நீங்குவதே சீவன் அடையவுரிய பேரின்ப நிலையாகக் கருதப்படுகிறது.

நீசப் பிறப்பு என்றது ஈசனைப் பிரிந்து பாசக்கடலில் வீழ்ந்து சீவன் பரிதபித்துக் கிடக்கும் நிலைமை தெரிய வந்தது. பிறவி யாண்டும் துன்பமாகவே நீண்டு வருதலால் படியேறிய உயிர்கள் மீண்டும் ஈண்டு வந்து பிறப்பதை அஞ்சுகின்றன; பிறவாமையையே வேண்டிப் பெருந்தவங்கள் செய்ய நேர்கின்றன.

துன்பத் தொடர்பையும், இன்ப நிலையையும் தெளிவாக அறியும்போது ஒளி மிகுந்த அந்த மெய்யுணர்வு ஞானம் என வெளியே விளங்கி நிற்கின்றது. ஞான நாட்டம் தெளிந்து வரவே ஊன நாட்டங்கள் ஒழிந்து போகின்றன.

உண்மையான பரம்பொருளை உறுதியாக உணர்ந்து கொள்ளுதலால் ஞானிகள் பெரிய மகான்களாய் அரிய மகிமைகளை அடைகின்றனர். பரமான்வோடு உறவுரிமை கொண்டு உள்ளம் உருகி உரையாடுகின்றனர். தமக்கு வேண்டியதைப் பிள்ளைகள் பிதாவிடம் கேட்பதுபோல் இறைவனிடம் உரிமையோடு அவர் வேண்டுகின்றனர். அங்ஙனம் வேண்டும் பொழுது பொருள் பொதிந்த மொழிகள் வெளி வருகின்றன. அயலே வருவது காண்க.

அருள்பழுத் தளிந்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை
மாடக் கோபுரத் தாடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன் றுணர்த்துவான் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியுந் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை யானவர்
தந்தைய ராகியுந் தாய ராகியும்

வந்தி ராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை
யானவை

தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை
அனைத்தே காலமும் சென்றது யான்இதன்
மேல்இனி
இளைக்குமா றிலனே நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலுந்

தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக என்னையும்
இடர்ப்பிறப் பிறப்பெனும் இரண்டின்
கடற்ப டாவகை காத்தல்நின் கடனே. 7 திருக்கழுமல மும்மணிக்கோவை, பட்டினத்தடிகள், பதினொன்றாம் திருமுறை

பரம்பொருளை நோக்கிப் பட்டினத்தடிகள் இவ்வாறு வேண்டியிருக்கிறார், கவியின் பொருளைக் கூர்ந்து நோக்கிக் கருத்துக்களை ஓர்ந்து கொள்ள வேண்டும்.

’நெடுங்காலமாகப் பிறவித் துயரில் வீழ்ந்து வருந்துகின்றேன்; அந்தத் துன்பக்கடலை விட்டு என்னைக் கரையேற்றி அருள வேண்டும்’ என அடிகள் முறையீடு செய்திருக்கும் முறையால் பிறப்பின் பெரிய அல்லல்களும், சீவனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுரிமைகளும் நன்கு உணரலாகும்.

என்றும் ஆனந்த மயமான பரமனோடு மருவியிருக்கவுரிய ஆன்மா பிரிவினையால் பெருந்துயரங்களை அடைய நேர்ந்தது. ஆசை வசப்பட்டுப் பிறவிகளில் வீழ்ந்தமையால் ஈசனை இழந்து நீசமடைந்து நிலைகுலைந்து நின்றது. பிறவிக்கு மூல காரணம் ஆசையாதலால் அது ஒழியின் சீவன் ஈசனாய்ப் பேரின்ப நிலையைப் பெறுகின்றான்.

’வித்து அழியின் விளைவும் அழியும்’ பிறவி நீங்க வேண்டுமாயின் ஆசை அடியோடு ஒழிய வேண்டும் என்பதைத் தெளிவாக உணர்த்த இவ்வுவமை வந்தது. வித்து அழியாத வரையும் விளைவு ஒழியாது; அவா இருக்கும் வரையும் பிறப்பும் இருக்கும்.

அவாஎன்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. 361 அவா வறுத்தல்

பிறப்பிற்கு வித்து அவாவே: அதனை ஒழித்தபோதுதான் உயிர்க்கு உய்தியுண்டாம் என இஃது உணர்த்தியுள்ளது.

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்:
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்:
பற்றின் வருவது முன்னது: பின்னது
அற்றோர் உறுவது. 2 மணிமேகலை

பிறப்பு பெருந்துன்பங்கள் நிறைந்தது; பிறவாமை பேரின்பம் உடையது; முன்னது பற்றால் உறுவது; பின்னது பற்றின்மையால் பெறுவது என அறவண அடிகள் என்னும் பெரியார் இவ்வாறு உலகம் அறிய உணர்த்தியிருக்கிறார்,

"அற்றது பற்று எனில், உற்றது. வீடு.” என நம்மாழ்வார் இங்ஙனம் உறுதி கூறியருளினார்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

வருத்தமற்(று) அச்சம் சோகம்
..மதமின்றி நன்னுாற் பின்போய்
ஒருத்தரால் ஏவ லின்றி
..உலாவுக நசிக்க வேண்டா;
அருத்தங்கள் அநர்த்தம் ஆகும்;
..அளவில்போ கங்கள் நோயாம்;
பெருத்தஆ பத்தாம் செல்வம்,
..பேரின்பம் நிராசை தானே! – ஞான வாசிட்டம்

உலக ஆசைகளும் தேக போகங்களும் தொலையாத துயரங்களாம் எனக் குறித்து, நிராசையே பேரின்பம் என்று இது உணர்த்தியுள்ளது. உண்மை தெளிந்து ஒழுகுவது உய்தியாகிறது.

உள்ளத்தில் நசையுற்ற போது ஊனங்கள் பெருகுகின்றன; அது அற்றவுடன் ஞான சீலனாய் உயர்ந்து மனிதன் வானமும் வணங்கப் பெறுகின்றான். நிராசை ஈசனது நீர்மையாயிருத்தலால் ஆசை இல்லையாயின் அவன் கடவுள் ஆகின்றான்.

மாடத் துளான்அலன்: மண்டபத் தான்அலன்:
கூடத் துளான்அலன்: கோயிலுள் ளான்அலன்:
வேடத் துளான்அலன்: வேட்கைவிட் டார்நெஞ்சின்
மூடத் துளேநின்று முத்தி தந்தானே. 2

ஆசை அறுமின்கள்; ஆசை அறுமின்கள்;
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்:
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே. 3 – 40 அவா அறுத்தல், எட்டாம் தந்திரம், திருமந்திரம், பத்தாம் திருமுறை.

ஆசையை விட்டவர் அடையும் அரிய பேரானந்த நிலையைக் திருமூலர் இவ்வண்ணம் தெளிவாக உரைத்துள்ளார்.

தெளிந்த உணர்வின் பயன் இழிந்த நிலைகளைக் கடந்து உயர்ந்து போதலேயாம்; ஆசை எவ்வழியும் நீசப்படுத்துமாதலால் அதனை ஒழித்தவர் ஈசனை மருவி இன்புறுகின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-19, 8:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 72

மேலே