வறுமை எல்லையிலா இன்பநலம் இனிதருள வல்லது - வறுமையின் பெருமை, தருமதீபிகை 458

நேரிசை வெண்பா

தொல்லை வறுமை துயரம் எனச்சொல்லி
ஒல்லை வெருவி ஒருவுவார் - எல்லையிலா
இன்பநலம் எல்லாம் இனிதருள வல்லதனைத்
துன்பமெனல் துன்பம் துணி. 458

- வறுமையின் பெருமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வறுமை மிகவும் துயரமுடையது என்று கூறி யாவரும் அதனை வெருவி நீங்குகின்றனர்; எல்லை இல்லாத இன்ப நலம் அருள வல்லதைத் துன்பம் என்று சொல்லுதல் தகாது என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், இன்மையை நன்மையாகக் கருதுக என்கின்றது.

பொருளால் யாவும் பெறலாம்; எல்லாச் சுகபோகங்களையும் அனுபவிக்கலாம் என்று மருள் கொண்டுள்ளமையால் பொருள் இல்லாத நிலையைக் கண்டபோது யாவரும் வெருண்டு வெருவுகின்றனர். மருண்ட காட்சிகள் மனித சாதியை மயக்கி வருகின்றன. தெருண்ட மாட்சிகள் திவ்விய இனிமை காணுகின்றன.

மிகுந்த பொருளுடைய பலர் அல்லலும் பழியும் அடைந்து வருந்துகின்றனர்; யாதும் இல்லாதவராயிருந்தும் சிலர் நல்ல சுகமும் புகழும் உடையராய் அமைதியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த உண்மைகளை ஊன்றி நோக்கின் சுகம் பொருளில் இல்லை; மனப் பண்பில் உள்ளது என்பதை எவரும் நன்கு தெளிந்து கொள்ளலாம்.

வைய மையலால் சுக சாதனமாகக் கருதப்படினும் மெய்யுணர்வுடையவர் வெய்ய துயரமாகவே பொருளைக் கருதியுள்ளனர். உள்ள உண்மையை உலகம் தெளிய உரைத்து விடுகின்றனர்.

’செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்’ – திருவாசகம் - என மாணிக்க வாசகர் இங்ஙனம் செல்வத்தை அல்லலாகவே சொல்லியுள்ளமை உள்ளியுணரவுரியது.

’முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும்' - திருக்கோவையார், 332 என்று பொருளை முன்னம் புகழ்ந்து சொன்ன பெரியவர் பின்னர் இன்னவாறு இகழ்ந்து கூறியதனால் அதன் இருவகை நிலைகளும் தெரிய வந்தன.

உலக வாழ்வில் ஓரளவு உதவி புரியினும் உயிர் உயர்கதி அடையாதபடி மருள் புரிந்து வருதலால் ’பொருள் கொடிய இருள்’ என்று தெருளுடையார் எவரும் இகழ நேர்ந்தனர்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

இயக்குறு திங்கள் இருட்பிழம்(பு) ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே. 2 - முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை, பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம்

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

துப்புறு பொருளினைத் தேடத் துன்பமாம்;
கைப்பொருள் உண்டெனின் கருத்து மோகமாம்;
அப்பொருள் அழிந்திடும் போதும் அல்லலாம்;
எப்பொழு தோபொருள் இன்பம் ஆவதே. - குறுந்தொகை

அறுசீரடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பொருவறு பந்த மெல்லாம்
..புணர்த்திடுந் தெய்வ சிந்தை
ஒருவமே லிட்டு நிற்கும்
..உறக்கமும் இறக்கச் செய்யுங்
கருவினுட் புகுத்தும் இன்ன
..கரிசுகண் டதனால் அன்றோ
இருநிலத் திடைவெ றுக்கை
..என்மனார் புலமை சான்றோர். 110

அறுசீரடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

இம்மை தனின்மற் றிரும்பொருளை
..யீட்டல் காத்த லிழத்தலென
வெம்மை புரிமூ வகைத்துயரும்
..விளையா நிற்கும் பாவத்தால்
அம்மை நிரையத் துயருமுறும்
..அந்தோ சீசீ இப்பொருளைச்
செம்மை யுடையோர் வேண்டுமெனச்
..சிந்தித் திடுவ ரோமறந்தும். 642 குசேலோபாக்கியானம்

இன்னிசை வெண்பா

தீயாலோ நீராலோ தேர்வேந்தர் தம்மாலோ
மாயாத தெவ்வர் வலியாலோ யாதாலோ
இப்பொருள்போய் மாய்கின்ற(து) என்று பொருள்வைத்தார்க்(கு)
எப்பொழுதும் நீங்கா(து) இடர். - பெருந்தேவனார் பாரதம்

நேரிசை வெண்பா

ஈட்டலுந் துன்பமற்(று) ஈட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்(கு)
உறைபதி மற்றைப் பொருள். 280 ஈயாமை, நாலடியார்

இன்பநலம் என்று ஞாலம் கருதி வருகின்ற செல்வம் இங்ஙனம் துன்ப நிலையமாய்த் தொடர்ந்திருக்கின்றது. என்ன நோக்கத்தோடு இன்னவாறு அதனை முன்னோர் எண்ணியுள்ளனர்?

அனுபவமான உண்மைகள் இருத்தலால் யாதும் மறுக்க முடியாமல் எவரும் மெய் என்று இசைந்து கொள்ளுகின்றனர்.

களிப்பும் காதலும் வளர்த்து போக வெறிகளை விரித்துச் இவர்களைப் பாவ வழிகளில் திருப்பி வருதலால் செல்வத்தை அல்லல் என்று மேலோர் சொல்லியருளினார்.

நல்லதாகத் தோன்றிய செல்வம் இவ்வாறு அல்லல் ஆயது போல் தீயதாக நேர்ந்த வறுமை தூய நலமாய் வாய்ந்தருளுகின்றது. யாதும் இல்லாமையில் எல்லா நலமும் விளைகின்றது.

’இன்ப நலம் எல்லாம் இனிது அருளவல்லது’ என வறுமையை இங்ஙனம் சொல்லியது அதன் உரிமையை ஓர்ந்து கொள்ள வந்தது. பொருளின்மை இயல்பான துறவு நிலையை அருளுகின்றது. அதனால் பரமனை நினைந்து பிறவி தீர்ந்து பேரின்பம் பெற அமைகின்றது.

வறுமை நேர்ந்தால் உள்ளத்தைப் புனிதமாகப் பண்படுத்தி மறுமையை மருவி மாண்பயன் அடைக என்பது கருத்து.

சுகந்தமான பொருள்கள் நெருப்பில் தோய்ந்தால் நல்ல வாசனையை அயல் எங்கும் வீசுகின்றது. நல்லவர்கள் வறுமையில் காய்ந்தால் உலகம் எல்லாம் உவந்து கொள்ளும்படி உயர்ந்து ஒளி வீசி யாண்டும் சிறந்து விளங்குகின்றனர். செல்வ வாழ்வினும் வறுமை வாழ்வு அரிய பல உணர்வு நலங்களை அருளி வருகிறது.

பட்டம் தட்டத்தட்ட வயிரம் ஒளி விடுதல்போல் வறுமைத் துன்பம் ஒட்ட ஒட்ட மனிதனிடமிருந்து பெருமை ஒளிகள் வெளி வருகின்றன. பொருள் இன்மையில் தெருள் உண்மைகள் விளைவது பெரிய அதிசயமாகின்றது.

செனிகா என்னும் இத்தாலிய தேசத்துத் தத்துவஞானி வறுமையை மிகவும் பெருமையாய்க் கருதியிருக்கிறார் அவரது கருத்தை அறிஞர் பலரும் புகழ்ந்துள்ளனர்.

The good things which belong to prosperity are to be wished, but the good things that belong to adversity are to be admired. - Seneca

செல்வத்தைச் சேர்ந்த நல்ல பொருள்கள் விரும்பவுரியன; ஆனால் வறுமையை மருவிய அரிய பொருள்கள் வியக்கத்தக்கன' என இவ்வாறு அப் பெரியவர் கூறியிருக்கிறார்,

செல்வம் அரசரைத் தருகின்றது; வறுமை அரிய பெரிய மகான்களை அருளி வருகின்றது. சித்தர் ஞானிகள் முதலிய உத்தமர்கள் உதித்து வருதலால் வறுமை ஒர் அற்புத நிலையமாய் நிலவியுள்ளது.

Miracles appear most in adversity. - Васon

’வறுமையிலிருந்துதான் பெரும்பாலும் அரிய அற்புதங்கள் தோன்றுகின்றன’ என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது.

உலக இயற்கையை எதிர்த்து வருதலால் வறுமை விளைவுகள் அரிய மகிமைகளை அடைகின்றன. அருமை வரவுகள் பெருமை யுறுகின்றன. அதிசய அமைதிகள் மதி தெளிய வுரியன.

நேரிசை வெண்பா

உன்னை யுடைய உயரரசர் ஓடிவந்தே
என்னை யுடையார் எதிர்விழுந்து - பன்னித்
தொழுது வணங்கும் தொடர்பால் திருவே
பழுதுநீ பேசல் பழி.

திருவை நோக்கி வறுமை கூறிய படியிது. எல்லாச் செல்வங்களையுமுடைய பெரிய முடி மன்னர்களும் யாதொன்றுமில்லாத தவசிகள் காலில் விழுந்து தொழுது வணங்குகின்றனர். உன்னைச் சேர்ந்து நின்றவரது நிலைமையும், என்னைச் சார்ந்தவரது தலைமையும் இங்ஙனம் நேரே கண்டிருந்தும் உன்னை விட நான் தாழ்ந்தவனென்று என்னை இகழ்ந்து பேசுகின்றாய், உண்மையை உணர்ந்து கொள்ளாத மதியீனத்தால் அவ்வாறு பேச நேர்ந்தாய்; இனி அப்படி இகழ்ந்து பேசாதே! எனச் செல்வத்தைப் பார்த்து வறுமை இப்படிப் புத்தி போதித்துள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-19, 9:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 163

சிறந்த கட்டுரைகள்

மேலே