கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 8

உலக கட்டிடகாரர்களின் மிக முக்கியமான மாநாடு அது. எல்லா நாட்டிலிருந்தும் சம்மந்தப்பட்டவர்கள் வந்திருந்தனர். அட்லஸ் அங்குதான் முதன் முதலாய் சுஜியை பார்த்தான். இவ்வளவு நாளில் அவளுடன் ஈமெயில் மற்றும் தொலைபேசி வழி வேலை சம்மந்தமான பல விசயங்களை அவர்கள் உரையாடி இருக்கின்றனர்.

மேஜையில் உணவருந்திக் கொண்டிருந்தவனை பார்த்து அவனிடம் வந்தாள் எமி.எமியை, அட்லஸ் ஏற்கனவே பார்த்து இருக்கிறான். பெரிய முதலாளியின் அந்தரங்க செயலாளினி. வேலை நிமித்தம் அவருடன் அதிகமாக பயணிப்பவள்.

எமி: ஹாய் அட்லஸ்... பேச வேண்டியவங்களாம் பேசியாச்சா? அறுத்து எடுதுர்ப்பானுங்களே..

சிரித்துக் கொண்டே அவனிடம் பேச்சு கொடுத்தவள் மேஜை மீதிருந்த மினரல் போத்தலலிருந்து கையில் பற்றி, அதன் நீரை அருந்தினாள். அருந்தி முடித்து மீண்டும் போத்தலை மேஜை மீது வைத்து, அட்லஸிடம் பேச தொடங்கினாள் எமி.

எமி: அட்லஸ், இந்த போர்ம்ல கொஞ்சம் சைன் வெக்கணும்.

அக்கீர்: என்னது இது?

ஷீலா: புது ப்ரொஜெக்ட். சுஜி சொல்லலையா?

அக்கீர் சாப்பிட்டுக் கொண்டே இல்லை என தலையாட்டினான்.

அக்கீர்: நீ சாப்பிடலையா?

எமி: இதுக்கு மேலதான். சரி, அது இருக்கட்டும். நீ இந்த பேப்பர்ஸ் வெச்சிக்கோ. அப்பறம் சுஜி உன்கிட்ட விளக்கமா சொல்லுவா. ஆமா, இந்த சுஜி எங்கப் போன? நீ பார்த்தியா?

அக்கீர்: அவுங்க எப்படி இருப்பாங்கனு கூட எனக்கு தெரியாது எமி. நான் அவுங்கள பார்த்ததே இல்லே.

எமி: ஆமாவா? பார்த்திராதே... விழுந்துருவே...

சொல்லி கிண்டலடித்து சிரித்தவளை பார்த்து இல்லை என்று தலையசைத்து சிரித்தான். அதற்குள் அவனுக்கு அழைப்பு வந்தது. திரும்பி போனை எடுத்து காதில் வைத்தான்.

அப்போதுதான், சுஜி அங்கு வந்தாள்.

சுஜி: ஹேய், எமி குட்டி. என்ன இங்க சுத்திகிட்டு இருக்கே? எம்டி, இந்த காண்ப்பிரான்ஸ்கு வர மாட்டேனு என்கிட்ட சொன்னாரே...

எமி: அதான் பிளான். ஆனா, திடிர்னு வர வேண்டியதா ஆச்சி.

பேசியவாறே கட்டியணைத்துக் கொண்டனர் எமியும் சுஜியும். எமி அட்லஸின் பக்கம் திரும்பி இருவரையும் அறிமுக படுத்தலாம் என்று நினைத்தாள். அதற்குள் எம்டியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வரவே,

எமி: பேப், இதுதான் அட்லஸ். பேசிக்கோ ஓகே வா. நான் முதல்ல கிளம்பறேன்.

சொல்லி கிளப்பியவளுக்கு டாடா சொல்லி,சுஜி அட்லஸின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அவளின் தலை முடியை வலது பக்கம் முழுவதுமாய் எடுத்து விட்டிருந்தாள். கூந்தல் அவளின் முகத்தை மறைத்திருந்தது.

அட்லஸ் போன் பேசி முடித்து திரும்பும் போது அவனின் அருகில் சுஜி அமர்ந்திருந்தாள். இனம் புரியாத உணர்வு அவனுக்கு. என்னவென்று அவனுக்கு புரியவில்லை. பேசாமலேயே அவனின் கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.

திடிரென்று தூரத்தில் இருந்து பார்த்த நபர் ஒருவர் சுஜியை நெருங்கி வந்து அவளை கட்டியணைத்தார். அப்போதும் அவள் முகத்தை அட்லசால் பார்க்க இயலவில்லை. அதே நபர் அட்லஸை பார்த்து ஹாய் சொல்லி கிளம்பினார். ஒருவேளை அவர்களை பார்த்துக் கொண்டே இருந்ததால் என்னவோ அசடு வழிகிறான் என்றெண்ணி ஹாய் சொல்லி சென்றான் அந்த புதியவன்.

அப்போதுதான் சுஜி, அட்லஸின் பக்கம் சிரித்த முகமாய் திரும்பினாள்.

சுஜி: ஹாய், அட்லஸ்...

அட்லஸ்: ஹாய்...

இருவரும் கை குலுக்கினார். அப்போதே அவன் மூளையில் தோன்றியது.

அக்கீர் :
அழகிய செதுக்கிய சிலை நீ..
தீப ஒளி நீ..
கை கூப்பி வேண்டும் தருவாயிலும்
மனதில் ஓடி மறையும் ஆற்றல் நீ..
ஒரு பொட்டு குங்குமம் நீ..
உள்ளங்கை தீர்த்தம் நீ..
துளசி வாசம் நீ..
பிரகாரம் சுற்றும் ஆத்ம திருப்தி நீ
சத்தமிட்டே எங்கும் பறந்து திரியும்
அழகிய கோவில்புறா நீ..
எங்கும் நீ
எதிலும் நீ

ஏனோ தெரியவில்லை, அவள் தான் சுஜி என்று அவனுக்கு தெரியும். இருந்தும் என்ன நினைத்தானோ தெரியவில்லை. வேண்டுமென்றே அவளிடம் கேட்கத் தோன்றியது.

அக்கீர்: உங்கள நான் எப்படி கூப்பிட? சுஜி இல்லே எச்.ஆர்.எம்?

சுஜி: தீரா... கயல் தீரா. சுஜி நிழல். எனக்கு நிஜம் பிடிக்கும்.

மேடையில் பேசிக் கொண்டிருந்த பேச்சாளரையே பார்த்தவாறே சொன்னாள்.

அப்படி சொன்னவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ஷெரிப் அக்கீர் அட்லஸ்.

நிகழ்காலம்.

வீடு வந்த பிறகும், இருவரின் அந்த முத்த பரிமாற்றத்தையே நினைத்து கட்டிலில் சாய்ந்தான் அக்கீர். அவனது போனை எடுத்தான். அவளின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக தட்டி பார்த்தான். சுஜி அவனை நினைத்து அடிக்கடி குறும்புத்தனமாக நிறைய வீடியோக்கள் செய்து அனுப்புவாள். அதை ஒவ்வொன்றாய் பார்த்தான். அவனையும்
மறந்து போனில் இருந்த அவளது படத்திற்கு முத்தம் தந்தான். முத்தத்தின் அளவு குறையாதவாறு சொன்னான்,

தூரத்திலிருந்தோம்
ஒருவரையொருவர் அறியாமல்
யாரோவாய் இருந்தோம்
யார் எப்போது எங்கே எப்படி
சேரவேண்டுமென
காலங்கள் தான்
முடிவெடுக்கிறது
என்பதை நிருபீக்க
உன்னை நோக்கி படிப்படியாக
யாரோவாக நகர்ந்து வந்தேன்

பார்த்த உடனே பிடித்துப் போவது
அதிசயமில்லையே..
அது இயல்பு போல
பிடித்தாக வேண்டுமென்ற இயல்பு,
பார்த்தாயிற்று
பேசியாயிற்று
பழகியாயிற்று
பிடித்தாயிற்று
எல்லாம் சொல்லி வைத்தாற் போல
முடிந்தாயிற்று.

ஒவ்வொரு ரகசியமும் அவிழ்ந்து
பரிமாறிக் கொண்டன.
உள்ளமும் மனமும் பரஸ்பரம்
இடம்மாறிக் கொண்டன.

காதல் என்பதே
நம்மை நேசித்தவரை
காலம் பூராவும்
அழ வைப்பது தானே ,
எவ்வளவு சிரிக்க வைத்ததோ
இந்த காதல்
அவ்வளவு அழ வைக்குமென்று
தெரிந்தும்
விழுவது இயல்பு தானே..
என் கண்மணி....

ஐ லவ் யூ டி லூசு....

அவளை நினைத்து பினாத்திக் கொண்டே தூங்கியும் போனான்.

சுஜி வீட்டின் முன் வாசலை அடைந்தாள். கோட்டை வாசல் போன்ற பெரிய கதவுகள் அவை. காவலாளி அவளை பார்த்ததும் பதற்றத்தோடு,

காவலாளி: என்னமா... நடந்து வரீங்க? காடி எங்க?

சுஜி: காடியா? பிடிக்கல அண்ணே .. அதான் வித்துட்டேன்.

நக்கலடித்தாள் சுஜி.

காவலாளி: என்னமா நீங்க? காமெடி பண்றீங்க? சொல்லுங்கம்மா காடி ஏதும் ரிப்பேரா?

சுஜி: ஆமாம் அண்ணன். அதான் ஆபிஸ்லையே வெச்சிட்டு வந்துட்டேன்.

காவலாளி: தம்பிக்கு போன் போட்டிருந்த வந்துருப்பாருல..

சுஜி: பரவால்ல அண்ணே. ஆமா, வீடு ஏன் இருட்டா இருக்கு? எல்லாம் எங்கே?

காவலாளி: எல்லாம் வெளிய போய்டாங்கம்மா.

சுஜி: தேவிமா?

காவலாளி:அவுங்களுந்தான்..

சுஜி:அவுங்களுக்கு இந்த வீட்டை விட்டா வேறெதுவும் தெரியாது. அப்பறம் எங்க போனாங்க?

யோசித்துக் கொண்டே வீட்டின் கதவை சாவிக் கொண்டு திறந்து, உள்ளே சென்றாள்.

கும்இருட்டு வீடு. உள்ளே நுழைந்தவள் தன் கைகளை சுவற்றில் வைத்து துழாவினாள் லைட்டை ஆன் செய்ய. அதற்குள், அலங்கார வெடி சத்தத்துடன் லைட் ஆன் ஆனது. அவளது நண்பர்கள் அவளின் முன் மேஜையில் கேக் ஒன்றை வைத்தவாறு அலறினர்.

நண்பர்கள்: சோரி... இப்படிக்கு நிமலன் !

சுஜி என்ன நடக்கிறது என்பதை யோசித்து முடிக்கும் முன் அவள் கழுத்தில் அணிவித்துக் கொண்டிருந்தான் வைர மாலை ஒன்றை நிமலன்.

நீத்தா: சுஜி, இப்படி சண்டை போடும் போதெல்லாம் நிமலன் உனக்கு ஏதாவது இப்படி பண்றத பார்த்த எனக்கும் இனி ரகு கூட அடிக்கடி சண்டை போடணும் போல இருக்கு..

சுஜி: தவறு தெரியாம செய்றது. தப்பு தெரிஞ்சு செய்றது. இதெல்லாம் தெரிஞ்சி செஞ்சானால வந்தது. இப்படிலாம் பண்ணி, ஐ மீன் கேக், செயின் இதெல்லாம் செஞ்ச தப்ப.... தப்பே நியாயமாக்கிடாது!

தொடரும்....

எழுதியவர் : தீப்சந்தினி (19-Sep-19, 12:12 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 167

மேலே