முடிவு

பொங்கி நுரைத்து ஓடிக்கொண்டுள்ளது
அந்த ஆறு
புதுப்பாய்ச்சலில் சேறு கலந்து
குழம்புபோல் சிதறி ஓடுகிறது
இரண்டுநாள் முன்பிருந்த மணல்மேடு
இருந்த இடம் காணாமல்
கரையோர ஒடிந்த மரம் கடைசி வேரை மீதம்விட்டு
ஆற்றோடு போனது
கூழாங்கற்களிடையே முட்டையிட்டு ஒளித்து வைத்து
எங்கோ சென்று இன்று வந்த ஆக்காட்டிக்குருவி
குழம்பிப்போய் கதறுகிறது
அக்கரை ஆற்றோரம் அவசரமாய் ஓடுகின்றன
மேய்ச்சலுக்கு வந்த பொலிகாளைகள்..
பாம்பும் பல்லியும் எறும்பும் இன்னபிறவும்
உயிர்பிடித்துக் கரையேற
உயரத்தில் குறிவைக்கின்றது
கொள்ளிவாய் பருந்தொன்று..
இன்னும் சிறிது நேரத்தில் மூச்சை நிறுத்திக்கொள்ளும்
ஆவலில்
அவசரமாய் நுரைத்த நதியில்
குதித்தான் அவன்..

எழுதியவர் : M.Rafiq (19-Sep-19, 4:44 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : mudivu
பார்வை : 79

மேலே