கண்மணி

இன்னதென்று வரையறை செய்துவிடமுடியாப்
பிரியம் கொண்டு
சிநேகித்த முதல் பெண்ணை
ஆண்டுகள் கடந்து
ஓர் சுபநிகழ்வில் சந்திக்கிறேன்
வந்திருந்தாள்
சரியாக பதினெட்டு வருடம்

அவள் பற்றிய குறிப்பு ஒன்றே ஒன்றுதான்
மிக அழகாக இருப்பாள்
அது மட்டுமே நினைவில் இருக்கிறது
இவ்வொருக் குறிப்பை வைத்துக்கொண்டு
அவளை எங்ஙனம் அடையாளம் காண்பது?
எப்படியான அழகாக இருப்பாள்?
தெரியாது!
அழகாக இருப்பாள்
அவ்வளவுதான்
அக்காலத்திய முகம் கூட
மனதிலிருந்து அழிந்துவிட்டது

அவளைக்காணும் ஆவலிலும் பரபரப்பிலும்
ஒவ்வொரு முகமாக
அவளைத் தேடிக்கொண்டிருந்தேன்
எந்த முகமும்
அவள் போலில்லை
முகையினை கண்கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்தாலும்
எந்தக் கணத்தில்
பூ விரியத் துவங்குகிறது என்பதை
கணிக்கவே முடியாது

எப்போதும் இமைப்பின் இடைவெளிகளில்
கண்மறைத்து பூத்து விடுவதே
அதன் குணம்
இவளைத் தேடுவதும்
அது போலான
ஒன்றென்று அறிந்து
குமைகையில் யாரோ
அவள் பெயர் சொல்லி அழைக்கிறார்கள்

குரல் வந்த திசையில்
ஒருத்தி மடியிலிருந்து
நழுவி ஓடும்
இரு பிள்ளைகளை
கால்களில் பின்னிட்டு
சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள்
பிள்ளைகளை ஒழுங்காகச் சாப்பிடச் சொல்லி
அதட்டினாள்
பசியாற்றுதல் பொருட்டான கோபங்கள்தான்
பெண்ணுக்கு எத்தனை அழகாக இருக்கிறது!

எனக்குத் தெரிந்த
அவளின் சாயைகள்
ஏதேனும் தென்படுகிறதா
என்று பார்த்தேன்
எதுவுமே இல்லை
அவள் முற்றிலும் புதியவள்
முழு பெண்

அவளருகில் செல்லச்செல்ல
அவள் விட்டுச் சென்ற நாளிலிருந்து
நான் கற்றுக்கொண்ட எல்லாம்
என்னை கைவிட்டுக் கொண்டிருந்தது
அண்மித்து எப்படி
அறிமுகம் செய்வதென்று
அவளை எப்படி
எதிர்கொள்ள வேண்டுமென்று
எடுத்த அத்தனை ஒத்திகைகளும்
என் கண்முன்னே
பாழாகிக் கொண்டிருந்தது

நிறைதயக்கங்களோடு
அவள் பெயர் சொல்லி
அழைத்தேன்
அவள்
இவன்
யாரெனப்
புருவம் சுருக்கவில்லை
நினைவு அடுக்குகளில் தேடவில்லை

நான் அழைத்த
அடுத்த நொடியே
முகம்பார்த்து ''*****'' என்று
கண்மை கலைய புன்னகைத்தாள்

அழுகைக்கும்
புன்னகைக்கும்
இடைப்பட்ட ஒரு
தெய்வ நொடி
அதன்பின் நிறைய பேசினாள்
விடைபெறும் முன் கேட்டேன்
அதெப்படி என்னை அடையாளம் கண்டாய்?
சொன்னாள்
''என் பெயரை நீ மட்டும்தான் இப்படி அதிசயமாகக் கூப்பிடுவாய்''

அழகான பெண்களுக்கெல்லாம்
கண்மணி என்று பெயர் வைத்திருக்கிறேன்
கண்மணி என்று
பெயர்கொண்ட அனைவரையும்
விரும்புகிறேன்

எழுதியவர் : தீப்சந்தினி (20-Sep-19, 9:43 am)
சேர்த்தது : தீப்சந்தினி
Tanglish : kanmani
பார்வை : 75

மேலே