நீசமிகு அவா ஒழியின் எல்லா நலமும் எழும் - நசை, தருமதீபிகை 449

நேரிசை வெண்பா

ஆசை அவலப் படுத்தும்; நிராசையே
ஈசனென இன்பம் இனிதருளும் - நீசமிகு
பொல்லா அவாஒன்று போயொழியின் அப்பொழுதே
எல்லா நலமும் எழும். 449

- நசை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஆசை மனிதனை நீசன் ஆக்கி நிலைகுலைத்து நெடுந்துயர் செய்யும்; நிராசை அவனை ஈசன் என உயர்த்தி இன்பம் அருளும்; பொல்லாத நீச ஆசை ஒன்றொழிந்து போனால் எல்லா நலங்களும் எதிரே விரைந்தோடி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அமைதியும் சுகமும் மனித வாழ்வில் விழுமிய நிலையங்களாய் எழில் மிகுந்து திகழ்கின்றன; கவலையும் துயரமும் கொடிய இழிவுகளாய் நெடிது நிலவுகின்றன.

மனிதன் அடைகின்ற மேன்மைகளுக்கு எல்லாம் அவனுடைய இருதய பரிபாகமே காரணமாயுள்ளது. இதயத்தைப் பண்படுத்தி வருகின்றவன் எவ்வழியும் பெரிய பாக்கியவானாய் அரிய மகிமைகளைப் பெறுகின்றான். புனிதமான நல்ல சிந்தனைகளை மருவியுள்ளதே இனிய மனமாய் உருவாகி ஒளிர்கின்றது.

ஆசை, பொறாமை, குரோதம் முதலிய தீமைகள் புகின் அது ஈனமாய் இழிகின்றது. பொல்லாத வாசனைகள் ஒருமுறை படியவிடின் எல்லா நலங்களையும் இழந்து உள்ளம் ஊனம் அடைகின்றது; அந்த மனிதன் யாதொரு மேன்மையும் அடைய முடியாமல் அவமே கழிந்து அழிந்து போகின்றான்.

’ஆசை அவலப்படுத்தும் என்றது’ மனிதனை அது பலவகையிலும் தாழ்த்திப் படுகேடுகளை விளைத்து வரும் கொடுமை தெரிய வந்தது. அவலம் – துயரம்.

நசை படிந்த நெஞ்சம் எப்பொழுதும் சஞ்சலமாகவே தவித்துழலுமாதலால் அது ஒரு இழிந்த துன்ப நிலையமாய்க் கழிந்து படுகின்றது. அவா ஒழியின் அமைதி விளைகின்றது.

அவலக் கவலைகளில் ஆழ்த்தி எவரையும் அவமானப் படுத்தி விடுதலால் கொடிய பகை, நெடிய நீசம் என ஆசையை மேலோர் வெறுத்திருக்கின்றனர்.

வாழ்க்கையில் ஊக்கமும் உறுதியும் ஆக்கம் தருகின்றன. அந்த உள்ளக் கிளர்ச்சி எளளலான வழிகளில் துள்ளித் திரியின் இழி நசையாய்ப் பழிபடுகின்றது.

மேலான ஆன்ம நலனைக் கெடுத்துப் பான்மையை அழித்து படாதபாடுகள் படுத்திப் பரிசு குலைத்து வருதலால் ஆசை தீய பேய், மாய விலங்கு, கொடிய நோய் எனக் கடிய நேர்ந்தது.

'ஆசை என்னும் அதிசய விலங்கு மனிதரை மருவியுளது. அந்த விலங்கைப் பூண்டவர் எங்கும் விரைந்தோடி அலைந்து திரிகின்றனர்; அதனைப் பூணாதவர் அமைதியாய் அமர்ந்திருக்கின்றனர்’ என ஆசையைக் குறித்து வட மொழிக் கவிஞர் சுவையாகப் பாடியிருக்கிறார். விலங்கைக் காலில் பூட்டினால் வெளியே நடக்க முடியாது; ஆசையாகிய விலங்கு இதற்கு நேர்மாறாக இருத்தலால் ’ஆச்சர்ய சிருங்கலா’ என்று அதனை வியந்து கூறினார்.

ஆசை மூண்டபோது மனிதன் பேய் கொண்ட வெறியனாய்ப் பித்து ஏறி அலைகின்றான்; அவன் நிலை பரிதாபமாய்ப் பாழ்படுகின்றது.

ஆன்ம சாந்தியை அடியோடு கெடுத்து விடுதலால் ஆசை நீசமான ஒரு நாசம் என்று மேலோர் நிந்திக்க நேர்ந்தனர்.

கொடிய பிறவிச் சிறையில் சீவர்களை நெடிது பிணித்து வைத்திருத்தலால் ஆசை கடினமான வலிய விலங்கு என வந்தது. பிறவித் துயரம் நீங்க வேண்டுமாயின் முதலில் இந்த விலங்கை ஒடித்தெறிய வேண்டும்.

ஆசைநிக ளத்தினை நிர்த்தூளி படவுதறி
ஆங்கார முளையை எற்றி
அத்துவித மதமாகி மதம்ஆறும் ஆறாக
அங்கையின் விலாழி யாக்கிப்
பாசஇருள் தன்னிழ லெனச்சுளித் தார்த்துமேல்
பார்த்துப் பரந்த மனதைப்
பாரித்த கவளமாய்ப் பூரிக்க வுண்டுமுக
படாமன்ன மாயை நூறித்
தேசுபெற நீவைத்த சின்முத்தி ராங்குசச்
செங்கைக் குளேய டக்கிச்
சின்மயா னந்தசுக வெள்ளம் படிந்துநின்
திருவருட் பூர்த்தி யான
வாசமுறு சற்சார மீதென்னை யொருஞான
மத்தகச மெனவ ளர்த்தாய்? 1 - 5. மௌனகுரு வணக்கம், தாயுமானவர்

இந்த உருவக நிலை உய்த்துணரவுரியது. ஆசையை அழித்து, ஆங்காரத்தை ஒழித்து, பாச பந்தங்களை நீக்கி, எங்கும் சம நோக்காய் உள்ளத்தைப் பண்படுத்தினவரே உன்னதமான பேரின்ப நிலையை அடையவுரியவர் என இது உணர்த்தியுள்ளது. நிகளம் - சங்கிலி, விலங்கு.

ஆசையற்ற போது அந்த மனிதன் கம்பீர நிலையில் உயர்ந்து அரிய முத்தியை அடையவுரிய பெரிய உத்தமனாய் ஒளி வீசி நிற்கின்றான். கதி காண உரியவர் மதி காண வந்தனர்.

ஞான மத்தகசம் எனத் தாயுமானவர் தம்மைக் குறித்திருக்கிறார். இக் குறிப்பு கூர்ந்து சிந்திக்கத்தக்கது. ஆசை அற்றவன் ஞான மதயானையாய் மேன்மை அடைகின்றான்; அதனையுற்றவன் ஈன நாயாய் இழிந்து படுகின்றான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கனிந்தநெய்க் கவளம் கையில்
..வைத்துடன் கழறு வாரை
முனிந்திடு களிறு போல்வார்
..முத்தியை விளக்கு நீரார்;
மனம்கொளத் துறந்தி டாதே
..வால்குழைத்(து) எச்சிற்(கு) ஓடும்
சுணங்கனைப் போலும் நீரார்
..பற்றிடைச் சுழலும் நீரார். – சாந்தி புராணம்

நசையில்லாதவர் யானை போல் மேன்மையாய் முத்தியைப் பெறுகின்றனர்;
நசையுடையவர் எச்சிலை நச்சம் நாய் போல் இழிந்து
பிறவித்துயரில் சுழல்கின்றார்.
முத்தி அடையவுரிய சுத்திநிலை துலங்கி நின்றது.

‘நிராசையே ஈசன் என இன்பம் இனிதருளும்’ ஆசை எல்வகையிலும் துன்பமாதலால் இன்பமடைய உரிய திவ்விய நிலையை இது உணர்த்துகின்றது. ஆசை முற்றும் அற்ற நிலை நிராசை என வந்தது.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து.

ஆசை நீசம் அழியினவ் ஆருயிர்
மாசு நீங்கிய மாமணி என்னவே
தேசு பொங்கித் திருவுடன் ஓங்கியே
ஈச னோடிசைந்(து) இன்புறும் என்றுமே.

நிராசையுடையவர் இங்ஙனம் நின்மலனோடு சேர்ந்து நிறை பேரின்பத்தை நுகர்கின்றனர்.

உள்ளத்தில் இழிந்த ஆசை இருக்கும்வரை மனிதன் உயர்ந்து விளங்க முடியாது; அது ஒழிந்த போதுதான் அவன் திவ்விய மகிமையை அடைந்து திகழ்கின்றான்.

We are never like angels till our passiom dies. - Thomas Dekker

'நமது ஆசைகள் ஒழியும் வரையும் நாம் தெய்வீக நிலையை அடைய முடியாது' என தாமஸ் டெக்கர் என்பவர் இங்ஙனம் கூறியுள்ளார். சீவனது மோசமான நீச நிலை தெரிய வந்தது.

இழிநசை ஏற இழிந்த பிறவி
வழிவழி ஏறி வரும்.

இதனை ஈண்டு விழியூன்றி நோக்கி விளைவு தெளிய வேண்டும்.

ஆசைகள் உணர்வு நலங்களைச் சிதைத்து உள்ளங்களைத் தாழ்த்தி ஊனங்களை விளைத்து ஈனங்களை வளர்த்து வருதலால் அவற்றை ஒழித்த வழியே உய்திகள் கிளைத்து எழுகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-19, 5:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே