மனிதர் கண்ணெடுத்துப் பாராமல் காக்கும் ஈசன் - வறுமையின் பெருமை, தருமதீபிகை 460

நேரிசை வெண்பா

மண்ணெடுத்து நின்ற மனிதரெலாம் தன்னையொரு
கண்ணெடுத்துப் பாராமல் காத்தருளி - எண்ணெடுத்த
எல்லார் நிலையும் எதிர்காட்டி ஈசனென
இல்லாமை செய்யும் இனிது. 460

- வறுமையின் பெருமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பூமியில் உள்ள மனிதர் எவரும் தன்னைக் காணாதபடி காத்து நின்று, எல்லாருடைய நிலைகளையும் தான் தெளிவாகக் காணுமாறு காட்டி யாவும் அறிய வல்ல ஈசன் என மனிதனை வறுமையாக்கி அருளும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், வறுமையால் நேரும் அதிசய நிலையைக் கூறுகின்றது.

பூவுலகத்தை மண் என்றது. ஐந்து ஆகங்களினும் முந்தி நிற்பதாதலால் அதன் முதன்மை தெரிய வந்தது.

அவரது மன நிலைகளையும் இன முறைகளையும் எண்ணி அறிய மண்ணுலகில் வாழுகின்ற மனிதர் என்றது. உலக வாழ்வில் சீவர்களுடைய சுபாவங்கள் யாதொரு நிலையும் இல்லாதனவாய் நிலைகுலைந்துள்ளன.

ஒருவனிடம் பொருள் நிறைந்துள்ள பொழுது பலரும் அவனிடம் உறவுரிமை கொண்டாடி உவந்து சூழுகின்றனர்; இல்லாத போது எல்லாரும் இகழ்ந்து விலகி விடுகின்றனர்.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. 752 பொருள் செயல்வகை

செல்வரை எல்லாரும் மதித்துப் போற்றுவர்; வறியரை யாவரும் இகழ்ந்து விடுவர் என உலக நிலையைக் குறித்து இது உணர்த்தியுள்ளது. இல்லாரை என்றதற்கு ஏற்ப உள்ளாரை என்று சொல்லியிருக்க வேண்டும்; அங்ஙனம் சொல்லாமல் அவரது செழிப்பும், களிப்பும், செலவும் தெரிய செல்வரை என்றது. ’செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத புல்லறிவாளர்’ என நல்லறிவாளர் இகழினும் செல்வர் தம்மை வியந்து தருக்கி வெம்மை புரிந்து விளிந்து போகின்றார். அங்ஙனம் அழிந்து போதற்குக் காரணம் தெளிந்த மதியின்மையேயாம். அந்த மதிகேடு எல்லாரும் செய்யும் சிறப்பால் அவர்க்கு விளைந்து வருகின்றது. பலரும் மதிகெட்டுக் துதிக்கவே பொருளர் மருளாய் இருளடைந்து இழிந்து படுகின்றார்,

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

செல்வர்க்கே சிறப்புச் செய்யும்
..திருந்துநீர் மாந்தர் போல
அல்குற்கும் முலைக்கும் ஈந்தார்
..அணிகலம் ஆய எல்லாம்
நல்கூர்ந்தார்க்(கு) இல்லை சுற்றம்
..என்றுநுண் நுசுப்பு நைய
ஒல்கிப்போய் மாடம் சேர்ந்தார்
..ஒருதடம் குடங்கைக் கண்ணார் 2535 இலக்கணையார் இலம்பகம், சீவக சிந்தாமணி

மார்பில் பணைத்து விம்மிய முலைகளுக்கு முத்து மாலைகளையும் வயிர வடங்களையும் சூட்டினர்; அரைக்கு மேகலையைப் பூட்டினர், இடைக்கு யாதும் அணியவில்லை; ஏன்? அது ஒல்கி, ஒசிந்து மெலிந்து போயுள்ளமையால் ஒன்றும் செய்யாமல் ஒழிந்து போயினர். கொழுத்த செல்வர்களுக்கே எல்லாச் சிறப்புகளையும் செய்து, இளைத்த ஏழைகளுக்கு யாதும் செய்யாத .பொல்லாத உலக நிலைமையை அவ்வண்ண மகளிர் செயல் இவ்வண்ணம் விளக்கியது எனக் கவி விளக்கியிருக்கும் அழகை நுனித்து நோக்க வேண்டும். மையல் நிறைந்த வெய்ய மாந்தர் என வைய நிலையைச் சாதுரியமாய் வைதபடியிது.

இல்லாரை எல்லாரும் எள்ளுவார் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே
அல்குறகு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர்
இடைஇடையே உள்ளுருகக் கண்டாள். - திருக்கைலாய ஞானவுலா

மேலே குறித்த கவியும் இதுவும் திருக்குறளைக் கருத்தில் வைத்துக் கொண்டு உருப்பெற்று வந்துள்ளமை உணரலாகும். இவ்வுலா சேரமான் பெருமாள் நாயனார் பாடியது. பொருள் இல்லாதவரை மருளுலகம் ஒரு பொருளாக மதியாது என்பதை மேலோர் பரிந்து மொழித்துள்ளனர்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

தொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப்
பழுமரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப
விழுமிய ரேனும் வெறுக்கை உலந்தால்
பழுமரம் வீழ்ந்த பறவையின் போல்ப. 67 வளையாபதி

ஈனமான இழிமகனாயினும் பொருளுடையானைப் பலரும் சூழுவர்; ஞான நலமுடைய மேன்மையாளன் எனினும் .பொருள் இல்லையானால் யாரும் அவனை அணுகார் என ஓர் உவமை காட்டி இது உணர்த்தியுள்ளது.

நேரிசை வெண்பா

உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே; -வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில். 284 இன்மை, நாலடியார்

பணம் இருந்தால் பிணம் தின்னும் காக்கைகள் போல் சுற்றுவர்; அது இல்லையானால் ஒரு வார்த்தையும் சொல்லாமல் எல்லாரும் ஒதுங்கிப் போவர் என இது உரைத்திருக்கிறது.

எப்புடு சம்பத கலிகி நது
அப்புடு பந்துவுலு வத்துரு; அதிஎட்லந்நந்
தெப்பலுக செறுவு நிண்டிந
கப்பலு பதிவேலு சேருகதரா. - சுமதி

'குளத்தில் நீர் நிறைந்தபோது தவளைகள் பல்லாயிரம் சேர்தல் போல் செல்வம் வந்தபோது பந்துக்கள் பலர் வருவர்; நீர் வற்றின் அவை மறையும்; பொருள் குறையின் உறவினர் ஒழிவர்' என தெலுங்கு மொழியிலும் கவிஞர் இங்ஙனம் பாடியிருக்கிறார்..

வறுமையாளனை எவரும் நெருங்காமையால் அவன் ஒருமையாய் ஒதுங்கி நிற்கின்றான் ’கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை’ என்பது வாழ்வின் அனுபவங்களாய் நாளும் விளங்கி வருகின்றது.

’மனிதர் கண்ணெடுத்துப் பாராமல் காத்தருளி’ என்றது வறுமை புரியும் கருமநிலை தெரிய வந்தது. ஏழையைப் பார்த்தால் தன்னிடம் ஏதேனும் கேட்டு விடுவானோ என்று பயந்து மனிதர் ஒதுங்கிப் போவதால் இவன் ஏகனாய்த் தனித்து நிற்கின்றான். அந்நிலையில் ஒரு இனிப்பு விளைகின்றது. அவ்விளைவை இது நுனித்துணரச் செய்தது.

’இல்லாமை ஈசன் எனச் செய்யும் இனிது’ வறுமை மனிதனைக் கடவுள் ஆக்கி அருள்கின்றது என இது காட்டியுள்ளது. யாதொரு பொருளும் இல்லாதவன் எல்லாமுடைய ஈசனாய் இசைந்து திகழ்வது அதிசய வினோதமாய் விளங்கி நின்றது.

கடவுள் நிலை என்ன? அவனை யாரும் பார்க்க முடியாது; எல்லாரையும் அவன் ஒருங்கே பார்த்துக் கொள்கின்றான். இந்த இருமை நிலைகளும் வெறுமையாளனிடமும் மருவியுள்ளன. என்னே? ஏழையை யாரும் பார்க்க மாட்டார்; எல்லாருடைய நிலைமைகளையும் நேரே சென்று தனித்தனியே அவன் நன்கு தெரிந்து கொள்ளுகின்றான். தன்னைப் பிறர் கண்ணெடுத்துக் காணாமலும், தான் யாவரையும் எதிர் நோக்கிக் கண்டும் வருதலால் ஈசன் என வறியவன் பேச நின்றான்.

இவனுக்கும் நாதியில்லை; அவனுக்கும் நாதியில்லை. அவன் அநாதியாய் நிற்றல்போல் இவனும் அநாதியாய் நிற்கின்றான்.

ஏழை பங்காளன் என இறைவனுக்கு ஒரு பெயர் அமைந்திருத்தலால் வறியவரோடு அவனுக்குள்ள உறவும் உரிமையும் உணர்ந்து கொள்ளலாம்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே. 3 - ஆறாம் தந்திரம் - 4.துறவு, திருமூலர் திருமந்திரம், பத்தாம் திருமுறை)

இறைவனைக் குறித்துத் திருமூலர் இப்படிக் காட்டியிருக்கிறார்.

வறுமை நேர்ந்தால் உன்னை உலகம் கைவிடும்; ஆயினும் பரமன் கை கொடுத்தருளுவார்; ஆதலால் உன் உள்ளத்தைப் புனிதம் ஆக்கி உயர்கதியைச் செய்து கொள்ளுக.

பொருள் இல்லாமை உலக நோக்கில் ஓரளவு வறுமையாயினும் அதனால் அவ்வளவு சிறுமை நேர்ந்து விடாது. அறிவும் சீலமும் இல்லாமையே கொடிய வறுமையாம். உள்ளம் தூயவன் வறுமையை மறுமை நிலையமாக மாற்றிப் பெருமை மிகப் பெறுகின்றான் நெஞ்சம் தீயவன் நெடிய செல்வம் உடையனாயினும் கொடிய பழிகளை அடைந்து குடியோடு அழிகின்றான். .

வறுமை மறுமை நோக்கத்தை அருளி வருதலால் தெளிந்த பெரியோர் அதனை உரிமையாக உவந்து கொள்ளுகின்றனர்.

1033
கட்டளைக் கலித்துறை

தாரித் திரந்தவி ராவடி யார்தடு மாற்றமென்னும்
மூரித் திரைப்பௌவ நீக்குகண் டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுட ரைங்கணை வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்ணுடை யாயெம்மை யாளும் பசுபதியே. 3 - 4.110 (பொது) பசுபதி, நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

இறைவனைக் கருதி வருகின்ற அடியார்களுக்குக் தரித்திரம் மூலதனமாயுள்ளது என அப்பர் இப்படிக் குறித்திருக்கிறார்.

பொருள் உலக ஆடம்பரங்களுக்கு உரியது; பொறி வெறிகளைத் தருவதாதலால் பரமனை நாடுகின்றவர் அதனை நாடாது விடுகின்றனர்; வறுமையையே பெருமையாக மருவிக் கொண்டு மறுமையை உரிமையுடன் கருதி வருகின்றனர்.

நேரிசை வெண்பா

இல்லாமை நேரின் இனிய தெனமகிழ்க;
பொல்லாதென்(று) எண்ணிப் புலம்பற்க - நல்ல
மனமுடையன் ஆகி மறுமை நினைவில்
கனமுடையன் ஆக கனிந்து.

இதனை மனதில் நினைந்து கொள்க.

நல்ல மனதோடு முயன்று வாழுக; வறுமை புகின் அல்லலுறாதே; எல்லாத் தேவைகளையும் சுருக்கிக் கொண்டு உள்ளம் அமைதியாய் உவந்து ஒழுகுக வறுமையில் செம்மை என்பது அரிய பண்பாடாய்ப் பெருமை பெற்றுள்ளது

நேரிசை வெண்பா

அரிய துறவுக்(கு) அருந்துணை ஆகி
உரிய உறுதி உதவி - பெரிய
மகிமை மருவி மகானென நிற்கும்
தகைமை வறுமை தரும்.

எவ்வகையினும் பிறரை எதிர்பாராமல் வாழ்வாயாயின் நீயே பெரிய சீமான், பேராண்மையாளன்; மேலான இன்ப நிலையினன்; அந்தச் சீர்மை, நீர்மைகளைப் பேணி மேன்மையுறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Sep-19, 10:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 176

மேலே