என்றும் தொழிலே உயிர்க்குத் துணை - தொழில், தருமதீபிகை 461

நேரிசை வெண்பா

வாழ்வின் நிலையை வளம்படுத்தி மற்றவர்முன்
தாழ்வு வராமல் தனைக்காத்துச் - சூழ்வில்
எழிலாய் விளங்கி இனிதுறலால் என்றும்
தொழிலே உயிர்க்குத் துணை. 461

- தொழில், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனிதனுடைய வாழ்க்கையைச் செழிக்கச் செய்து பிறரெதிரே இழிவு நேராமல் காத்து யாண்டும் அழகும் இன்பமும் அருளி வருதலால் நேர்மையான தொழிலே உயிர்க்கு இனிய துணை என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் தொழிலின் மகிமையை உணர்த்துகின்றது.

சீவனம், சீவியம், சீவிதம் என்னும் மொழிகள் மானிட வாழ்வின் நீர்மைகளைத் தொடர்ந்து வந்துள்ளன. அருவமான உயிர் உருவமான உடலை மருவி ஒருமையாய் உலகில் நடமாடுகின்றது. குறித்த காலம் வரையும் கூடியிருந்து முடிவில் பிரிந்து மறைந்து போகும் இயல்பினது. வீழ்வு நேரும் அளவும் உடம்போடு கூடி உயிர் வாழ்ந்து வருவது வாழ்வு என வந்தது. இந்த வாழ்வு தாழ்வு படாமல் சீவகோடிகள் ஆவலோடு செய்து கொள்வது சீவனம் என நேர்ந்தது. புதியாய் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது உங்களுக்கு என்ன சீவனம்? என வினவி வருவதை அனுபவத்தில் அறிந்து வருகிறோம்.

உயிர் வாழ்க்கை உடல் உழைப்பால் நடைபெற்று வருதலால், அது சீவ ஆதாரமாயது. ஆகவே சீவிதம் என அது மேவி நின்றது. சீவ வாழ்வைச் செய்து வருவது உய்தி புரிகின்றது.

தொழில் என்னும் சொல் கை, கால் முதலிய உடல் உறுப்புக்களால் உழைப்பது என்னும் பொருளை உட்கொண்டு வந்தது.

தொழுவர் கம்மியர் தொழில்செய் வோரே. – பிங்கலந்தை

செயல்விதி கருமம் கன்மம் செய்தொழில் வினையும்.அப்பேர் - நிகண்டு

தொழில் நிலையைக் குறித்து இயல்கள் இங்ஙனம் விதித்து வந்துள்ளன. பெயர்கள் இயல்புகள் தழுவி எழுகின்றன.

கையால் செய்தலால் செய்தொழில் என்றார், இரண்டு கைகளையும் கூப்பி வணங்குவதைத் தொழுதல் என வழங்கி வருகின்றோம், 'பத்து விரல்களாலும் பாடுபட்டுப் பசியார உண்டு வாழ்கின்றோம்' என்று பாட்டாளி மக்கள் பேசி வருவதைக் கேட்டு மகிழ்கின்றோம். வாயும், கையும் வாழ்வு புரிகின்றன.

வாழி ஆதன் என்னும் சேர மன்னன் ஒருநாள் கபிலரைக் கண்டான். புலவர் பெருமான் ஆகிய அவரை அரசன் உவந்து உபசரித்து அருகிருத்திப் பேசிக்கொண்டிருந்தான். அந்தக் கவியரசரது கை மிகவும் மிருதுவாய் இருந்ததை நோக்கி மன்னன் வியந்து. ’என்னே இது?’ என்று. புன்னகையோடு வினவினான். செல்வச் சீமானாகிய தன் கையினும் இந்தப் புலவர் கை மென்மையாயுள்ளதே! என்று அரசன் கருதிக் கேட்டதை அவர் கூர்ந்து ஓர்ந்து கொண்டமையால் சாதுரியமாகப் பதில் உரைத்தார். 'அரசர் பெரும! நும் கைகள் வில், வேல், வாள் முசலிய படைக்கலன்கள் பயின்றன; பொன்னையும், மணிகளையும் இரவலர்க்கு அள்ளிக் கொடுத்தன யானையேறி அங்குசம் கொண்டன: குதிரைகளை ஊர்ந்து கடிவாளங்களைக் கடிது ஈர்த்தன. என் கையோ சோறு தோய்ந்ததைத் தவிர வேறு யாதும் செய்து அறியாது; ஆதலால் இப்படி மெல்லிதாயுள்ளது” என விநயமாய்ச் சொல்லினர். உரைகள் உணர்வின் சுவைகள் தோய்ந்துள்ளன.

கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
15. பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்
காரணங் காகிய மார்பிற் பொருநர்க்
கிருநிலத் தன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. 14 புறநானூறு

தொழில் என்பது கையால் செய்வது என்பதை இது காட்டி நின்றது. புலமை நலம் கனிந்த தலைமை அறிவாளிகளின் நீர்மையும், அரசர் அவரை உரிமையோடு உவந்து கொண்டாடிய சீர்மையும், பண்டைக் காலத்தின் நிலைமையும் இங்கே கண்டு மகிழ்கின்றோம். கூரிய அறிவு சீரிய நூல்களையும் ஞான போதனைகளையும் செய்யுமே அன்றி வாழ்க்கைக்கு வேண்டிய தொழில்களைச் செய்யாதாதலால் அந்தப் பேரறிவாளர்களைப் பேணி வருவது அரசரது கடமையாயது. அறிவின் அருமையை அறிந்து பேணாத அரசாங்கம் பெருமையை இழந்து சிறுமையாய் இழிந்து படுகின்றது.

’வாழ்வின் நிலையை வளம் படுத்தி’ ஒருவனுடைய குடிவாழ்க்கை எவ்வகையிலும் இனிமையாய்ச் செழித்து வருவது பொருள்களின் நிறைவினாலேயாம்; அப்பொருள்கள் தொழிலால் வருகின்றன; ஆகவே வாழ்வினை வளம் செய்தருளுகின்றது என உயிராதாரமான அதன் நீர்மை உளங் கொள்ள வந்தது

’தாழ்வு வராமல் தனைக் காத்து’ என்றது தொழிலைக் கைக்கொண்டவன் எவ்வழியும் யாதும் இழிந்து படாமல் யாண்டும் உயர்ந்து வருதலை உணர்த்தி நின்றது.

முயற்சியுடையவன் கருமதேவதையின் கருணையைப் பரிபூரணமாய்ப் பெற்று, எங்கும் உயர்ச்சியுடையனாய் ஒளி சிறந்து திகழ்கின்றான்.

வினையாண்மை உள்ளத்தில் வேரூன்றி இருத்தலால் அவன் நினையாமலே அதிசய வலிமைகளை அடைந்து உலகம் துதி செய்யும்படி உயர்ந்து ஓங்கி நிற்கின்றான்,

இன்னிசை வெண்பா

ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின். 192 தாளாண்மை, நாலடியார்

மிகவும் எள்ளி இகழும்படி எளிய நிலையில் இருந்த ஒரு சிறுவன் தொழிலைத் தொடர்ந்து செய்து வருவானாயின் யாரும் உள்ளி வியக்கும்படி உயர்ந்து விளங்குவான் என்பதை ஓர் உவமம் காட்டி இப்பாட்டு உணர்த்தியுள்ளது.

ஆடு கோடு - துவண்டு அசைகின்ற கொம்பு, அதர் – வழி, காழ் - வயிரம்.

காட்டு வழியில் காற்றில் அசைந்து கொண்டிருந்த ஒரு சிறு கொடி வளர்ந்து பெரிய மரமானால் கரிய மதயானையும் தன் அடியில் கட்டும்படி அது திறமாய் நெடிது நிலைத்து நிற்கின்றது; எளிய சிறுவனாயினும் தாழ்வின்றித் தொழிலில் முயன்றுவரின் வலியனாய் உயர்ந்து பெரிய அரசனும் தன்னை விரும்பி நிற்கும்படி அவன் விளங்கி நிற்பான் ஆகும்.

உள்ளே வயிரம் கொண்டு மரம் தானாகவே வளர்ந்து உயர்கின்றது; பிறருடைய உதவியின்றித் தன் முயற்சியினாலேயே உயர்ந்து வருகின்ற மனிதன் சிறந்த ஆண்மையாளனாய் உலகம் வியந்து நோக்க நிற்கின்றான். வளர்ச்சியும் உயர்ச்சியும் புறத்தில் இல்லை; உன் உள்ளத்திலேயே உறைந்துள்ளன; ஊக்கி முயன்று உயர்ந்த ஆக்கங்கள் யாவும் அடைந்து கொள்ள வேண்டும்.

தொழில் மனிதனுக்கு மதிப்பையும் மகிழ்ச்சியையும்.அளித்து வருதல் கருதி ’எழிலாய் விளங்கி’ என்றது. தொழிலில் மூண்ட பொழுதுதான் ஒருவனுடைய உணர்வு ஒளி மிகப் பெறுகின்றது. உயிர் வாழ்வு கம்பீரமாய்த் தோன்றுகின்றது. ’உத்தியோகம் புருட லட்சணம்’ என்னும் பழமொழியும் இங்கே சிந்திக்கத் தக்கது.

’தொழிலே உயிர்க்குத் துணை’ உயிரின் நிலையம் ஆகிய தேகத்தைப் பாதுகாத்து, மனைவி மக்களைப் பேணி மனிதன் இனிது வாழ்ந்து வருதற்குரிய வளங்கள் யாவும் தொழிலில் விளைந்து வருதலால் அது உயிர்க்குத் துணை என வந்தது. உழைப்பின் வழியே பிழைப்பின் ஒளி என்றதனால் உயிர் வாழ்விற்கும் தொழிலுக்கும் உள்ள உறவுரிமையை உணர்ந்து கொள்ளலாம்.

பிறப்பில் இழிந்தவனாயினும் தொழிலைக் கைக்கொண்டவன் பொருள் வளங்களை அடைந்து கொள்ளுகின்றான்; அதனால், உயர்ந்த குலத்தவரும் அவனிடம் நயந்து வந்து பணிந்து நிற்கின்றனர். மேன்மைகள் யாவும் வினைகளால் மேவுகின்றன.

உம்ற குறைகள் யாவும் நீக்கிக் குலம் முதலிய எல்லா மாட்சிகளையும் தொழில் உளவாக்கி அருளுதலால் அது எழில் எனவும், உயிர்த்துணை எனவும் விழுமிய நிலையில் ஒளி பெற்று நின்றது

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

குலம்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ. 47 வளையாபதி

புன்கண்மை – துன்பம்; முயன்று பொருளைத் தேடிக் கொண்டவரிடம் உயர்ந்த நலங்கள் பல தாமாகவே ஓடி வருகின்றன என இஃது உணர்த்தியுள்ளது. இன்ப வாழ்வு இருக்கும் இடத்தை மேலோர் இங்ஙனம் காட்டியருளினர். கடல் கடந்து மலையேறிப் போயேனும் தொழில் புரிந்து உயர்நலம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Sep-19, 5:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 77

மேலே