ஓர் தொழிலும் செய்யாமல் உள்ளம் மடிந்திருத்தல் பாரிழவே யாகும் பழி - சோம்பல், தருமதீபிகை 471

நேரிசை வெண்பா

உண்ண உணவும் உடுக்க உடையுமயல்
பண்ண அமர்ந்து படிந்துண்டு - திண்ணமுடன்
ஓர்தொழிலும் செய்யாமல் உள்ளம் மடிந்திருத்தல்
பாரிழவே யாகும் பழி. 471

- சோம்பல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தமக்கு உரிய உணவும் உடையும் பிறர் உழைப்பால் வர அவற்றை உண்டு உடுத்து ஒரு தொழிலும் செய்யாமல் சோம்பியிருப்பவர் இவ்வுலகிற்குப் பெரிய பாரமாவார் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் சோம்பல் தீம்பு என்கின்றது.

எண்ணமும் பேச்சும் செயலும் மானிட உரிமைகளாய் மருவியுள்ளன. சிலர் எண்ணத்தால் வாழுகின்றனர்; சிலர் பேச்சால் வாழுகின்றனர்; பலர் செயலால் வாழுகின்றனர். இவை யாவும் நல்ல முறையில் தொழிற்படும் போது நலம் பல காண்கின்றன.

தம்முடைய சீவிய வாழ்வை நடத்தச் சீவ கோடிகள் எவ்வழியும் உழைத்தே வருகின்றன. அந்த உழைப்பு பல வகைகளாய் விசித்திர நிலைகளில் விரிந்து நிற்கின்றன.

மனிதன் பிறந்துள்ள இந்த உலகத்திற்குக் கரும பூமி என்று பெயர். உழைத்து வாழவே அவன் இங்கே வந்துள்ளான் என்பதை இப் பெயர் நன்கு உணர்த்தியுள்ளது.

தன்னிடம் தோன்றினவன் தனக்கு உரிய கருமத்தைச் செய்யவில்லையானால் அவனை அன்னியனாக வெறுத்து இவ்வுலகம் அவனுக்கு இன்னல் பல விளைத்து இழித்து விடுகின்றது.

தினமும் உண்ணும் இயல்பில் மனிதன் தோன்றியிருப்பது நாளும் அவன் உழைக்க உரியவன் என்பதை உணர்த்தி நிற்கின்றது.

உணவும் உடையும் மனிதனுக்கு உயிரும் உடலும் போல் தொடர்புற்றிருக்கின்றன. அவை உழைப்பால் வருகின்றன. அந்த உழைப்புகளை நேரே செய்யாது போயினும் வேறே எவ்வகையிலாவது அவன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லையானால் அவன் பெரிய கடனாளி ஆகின்றான். உரிய கடமையை இழந்து விட்டு நெடிய கடனாளியாய் இழிந்து படுவது கொடிய மடமையாம்.

தான் பாடுபடாமல் இருந்து கொண்டு பிறர் பாட்டால் வருவதை ஓடி உண்பது பெரிய கேடாதலால் அந்தக் கேட்டாளன் பாட்டாளி மக்களுக்குப் படு ஊழியனாய் முடிகின்றான். முடிவை உணராமல் மூடக் களிப்பு மூடி நிற்கின்றது.

ஓர்தொழிலும் செய்யாமல் உள்ளம் மடிந்திருத்தல்
பாரிழவே ஆகும் பழி.

ஒரு தொழிலும் செய்யாமல் இருப்பவனைப் பல இழிவுகள் பற்றிக்கொள்கின்றன. அந்தப் படுகுழிகளில் இருந்து வெளிவர இயலாமல் அவன் விளிந்தே போகின்றான்.

சோம்பல் உள்ளத்தில் புகுந்தவுடனே உணர்வும் உயிரும் ஒளியிழந்து, பழி வழிகளில் புகுந்து சோம்பேறி பாழ்பட நேர்கின்றான். மடியின் வழியாகவே எல்லாக் கேடுகளும் குடி புகுகின்றன.

Idle man’s brain is Satan’s workshop,

சோம்பேறியின் மூளை தீமையின் நிலைக்களம்' என இது குறித்துள்ளமையால் மடியால் விளையும் குடி கேடுகளைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ளலாம். உரிமைகள் ஒருவின் கொடுமைகள் மருவுகின்றன.

நல்ல தொழில்களில் செல்லாத போது மனிதனுடைய மனம் பொல்லாத வழிகளில் போகவே பழியும் பாவமும் சேர்ந்து அவன் இழிவாய் அழிவுறுகின்றான்.

தானும் இழிந்து பிறர்க்கும் இடையூறாயிருத்தலால் மடியன் வாழ்வு உலகிற்குக் கொடிய கேடாய் மூண்டு நெடிய சுமையாய் நீண்டுள்ளது. மாண்டு மடிந்து போன சவங்களினும் மடியில் மூண்டுள்ளவர் ஈண்டுப் பெரிய அவங்களாய் நெடிது நீண்டுள்ளனர்.

ஊர் வம்புகள் பேசல், ஊமைக் குறும்புகள் காட்டல், கோள் மூட்டல், சூத்திரங்களை நாட்டல், குரோதங்களை நீட்டல் முதலிய கொடிய புலைகள் எல்லாம் மடியர் வாயிலிருந்தே விளைந்து வருகின்றன. மடியன் கொடிய குடிகேடன் ஆகின்றான்.

ஒரு சோம்பேறி இருந்தால்.அந்த ஊர் பாம்பேறிய புற்றைப் போல் பாழடைய நேர்கின்றது. தன்னைப் பிடித்த சோம்பல் பிறரையும் பிடிக்கும்படி செய்து விடுதலால் சோம்பேறி ஒரு கொடிய தொற்றுநோய் போல் சமுதாயத்திற்குத் துயரை விளைத்து வருகிறான் என அயர்லாந்து தேசத்தறிஞர் ஒருவர் அரச சபையில் ஒருமுறை பேசியிருக்கிறார்.

வருவாய்க்குரிய துறைகளை விரித்துப் பொருள் வளங்களைப் பெருக்கி நாட்டை. எல்லா வழிகளிலும் உயர்த்த வேண்டுமென்று ஊக்கியுணர்கின்ற அரசியல் நிபுணர்கள் சோம்பர்களை இழிந்த தீம்பர்களாகவே யாண்டும் எண்ணி இகழ்ந்துள்ளனர்.

வேலை செய்கின்ற தொழிலாளியிடம் ஒரு சோம்பேறி காலையில் வந்து சேரின் அன்று அவன் வேலை தொலைந்தது. வீண் பேச்சுகளைப் பேசித் தொழிலாளியின் கவனத்தைச் சிதைத்து விடுவானாதலால் அவன் உழைப்பு ஒழிந்தது; பிழைப்பும் பிழையாயது. ஒரு மடியனால் பலர் மிடியர் ஆக நேர்கின்றனர்.

கொடியநோய் குட்டம் கொலைபுலையில் தீதே
மடியன் நிலைமை மதி.

பிறந்த நாட்டுக்குப் பெரும் பாரமாயிருத்தலால் மடியன் இருந்து வாழ்வதினும் இறந்து போவது நல்லதாயது.

சிறந்த மனிதனை இழிந்த நடைப்பிணமாக்கி எவரும் வெறுக்கும்படி பலவகையிலும் இழிவு செய்து வருதலால் அந்த ஈனச் சோம்பலை ஒழித்து யாண்டும் ஊக்கமும் உறுதியும் கொண்டு மேல்நோக்கி முயன்று ஆன வரையும் மானமுடன் வாழவேண்டும் என்பது கருத்து. சீர்மையுடைய வாழ்வு சிறப்படைகின்றது.

எண்ணி முயலும் இயலளவே எவ்வுயிரும்
கண்ணியம் காணும் கனிந்து.

சோம்பி நில்லாதே; துணிந்து முயன்று உயர்ந்து செல்லுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Sep-19, 5:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 132

மேலே