உடலும் உயிரும் உயர்நிலையில் ஓங்கி மிடலுற்று நிற்கும் மிடைந்து - தொழில், தருமதீபிகை 466

நேரிசை வெண்பா

கையால் புரிகின்ற கைத்தொழிலும் காணறிவின்
மெய்யால் விளைகின்ற மெய்த்தொழிலும் - செய்ய
உடலும் உயிரும் உயர்நிலையில் ஓங்கி
மிடலுற்று நிற்கும் மிடைந்து. 466

- தொழில், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கைகளால் செய்கின்ற கைத்தொழில்களும், அறிவால் ஆற்றுகின்ற மெய்த் தொழில்களும் உடல், உயிர் என்னும் இருவகை நிலைகளுக்கும் முறையே உறுதி நலன்களை அருளி வருகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் தொழிலின் வகைகளை உணர்த்துகின்றது.

மக்கள் பலவகை நிலையினர். அளவிடலரிய எண்ணங்களையுடையவர். முகங்கள் எவ்வாறு வேறுபட்டிருக்கின்றனவோ அவ்வாறே அகங்களும் மாறுபட்டுள்ளன. தங்கள் சுபாவங்களின்படியே தொழில்களும் மொழிகளும் மாந்தரிடமிருந்து வெளி வருகின்றன. இருந்த இடம், தெரிந்த முறை, சார்ந்த நிலை, நேர்ந்த நிமித்தம், பழகிய பழக்கம் என்னும் இவ்வழிகளிலேயே எவரிடமும் செயல்கள் எழுகின்றன; அவை தொழில்கள் எனத் துலங்கி நிற்கின்றன.

உடல் உழைப்பு, உள்ளத்தின் உழைப்பு, உணர்வு உழைப்பு என உழைப்புகள் பல படிகளாய்ப் படிந்துள்ளன. எல்லா உழைப்புகளும் உலகிற்கு விழிப்பையும், செழிப்பையும் விளைத்து வருகின்றன. தம் நிலைமைக்குத் தக்கவாறே கருமங்கள் காரியங்கள் ஆகின்றன. இயல்பின் அளவே எவரும் முயல நேர்கின்றனர்.

இளமையிலேயே கல்வி நலனை இழந்து நின்றவர் பின்பு நல்ல அறிவுத் தொழிலைச் செய்ய இயலாதவராகின்றார்; ஆகவே தேக உழைப்பில் அவர் மேவி விளங்குகின்றார்.

எந்தத் தொழிலாயினும் மனிதன் உள்ளம் ஊன்றி உண்மையாக உழைத்தால் அவனைத் தரும தேவதை உவந்து நோக்க, அரிய பல பாக்கியங்களை அவன் எளிதே அடைந்து கொள்ளுகின்றான்.

உழவு, நெசவு முதலிய தொழில்கள் உணவு உடைகளை முறையே உதவியருளுகின்றன. உண்ண உணவும், உடுக்க உடையும் மனித வாழ்வில் முன்னதாக வேண்டிய அவசியத் தேவைகளாய் மூண்டு நிற்கின்றன.

உலக வாழ்க்கைக்கு மிகவும் உரிமையான இப்பொருள்களைத் தொழில்கள் விளைத்தருளுதலால் அவை சீவ ஆதாரங்களாய்ச் சிறந்து திகழ்கின்றன. தேகப் பாதுகாப்பை நன்கு செய்து வருதலால் கைத்தொழில் முதன்மையாகக் கருத வந்தது.

உண்டு வாழ மட்டும் மனிதன் ஈண்டு வரவில்லை; அரிய பல நிலைகளையடைய வந்துள்ளான். உண்டி, உடையளவில் உல்லாசமாய்க் களித்து நின்று விடுவானாயின் அந்த மனிதன் வாழ்வு மிருக வாழ்வாய்ப் பரிதாப நிலையை அடைகின்றது.

நேரிசை வெண்பா

காட்டு விலங்குகளும் காமக் களிப்போடு
பேட்டுகளைக் கூடிப் பெருகிநின்(று) - ஈட்டமுடன்
குட்டிகளைக் கண்டு குலாவுகின்ற அவ்வளவே
மட்டிகளும் வாழ்கின்றார் வந்து.

உணர்ச்சியுடன் உயிர்க்குறுதி நாடாமல் உடலை மாத்திரம் ஓம்பி மடமையாய் உழல்வது மாட்டு வாழ்வு என இது காட்டியுள்ளது. உரிய தகுதி குன்றிய பொழுது அரிய பிறவியும் அவலமாகின்றது. மதி நலமுடையதே கதிநலம் காணுகின்றது. அல்லாதது .இழிநிலையில் ஆழ்ந்து பழி மிகுந்து படுகின்றது

மாடு தட்டை தின்னுகின்றது; பெட்டைகளைக் கூடுகின்றது; குட்டிகளைப் போடுகின்றது. இந்த அளவிலேயே உண்டு களித்துப் பெண்களைத் தோய்ந்து பிள்ளைகளைப் பெற்று மேலே ஒரு நலமும் பெறாமல் வறிதேயுள்ளவர் இருகால் மிருகங்களே என மேலோர் வெகு காலங்களாக எண்ணியுள்ளனர். உணவு உண்ணுவதோடு அமையாமல் உணர்விலும் உயர்ந்த போதுதான் பிறவி பெருமகிமை பெறுகின்றது.

கையால் செய்கின்ற கைத்தொழிலால் உடலைப் பேணுக.
அறிவால் செய்கின்ற மெய்த்தொழிலால் உயிரை ஓம்புக,

என்றது இருவகையான தொழில்களும் மனித சமுதாயத்திற்கு உறுதி பயந்து வரும் உண்மை தெரிய வந்தது.

கைத்தொழில் தேக போகங்களை உதவுகின்றது. அறிவுத்தொழில் ஆன்ம இன்பங்களை அருளுகின்றது.

மதியூகங்களால் விளைந்து வருதலால் அறிவுத்தொழில் உணர்வின் சுவையாய் உயிர்க்கு இனிய உறுதிநலங்களைப் பயந்து வருகின்றது. கைத்தொழில் கண்ணுக்குத் தெரியும்படியான பருப் பொருள்களை விளைத்தருளுகின்றன. அறிவின் மெய்த்தொழில் மானசீகமான அரிய நுண் பொருள்களை இன்புறும்படி இனிது தந்தருளுகின்றன.

கவி, சங்கீதம், காவியம், கலை, ஞானம் முதலியன யாவும் மேலான அறிவின் தொழிலாய் விளைந்து வந்திருத்தலால் அவை யாவருக்கும் உணர்வும், உவகையும், ஒளியும் உதவி யாண்டும் ஆன்ம போகங்களாய் மேன்மை எய்தியுள்ளன.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

அன்புறு பத்தி வித்தி
..ஆர்வநீர் பாய்ச்சும் தொண்டர்க்(கு)
இன்புறு வான ஈசன்
..இன்னருள் விளையு மாபோல்
வன்புறு கருங்கால் மள்ளர்
..வைகலும் செவ்வி நோக்கி
நன்புலம் முயன்று காக்க
..விளைந்தன நறுந்தண் சாலி. - பரஞ்சோதி முனிவர்

இதில் வந்துள்ள உவமானத்தையும், பொருளையும் ஊன்றி நோக்க வேண்டும். அறிவுத் தொழிலையும் கைத்தொழிலையும் ஒருமுகமாய் நோக்கி உரிமை நிலைகளை ஓர்ந்து உவந்து கொள்கின்றோம்.

இறைவனை நினைந்துருகி அன்பு செய்யும் பண்புடையாளருக்கு அவனருள் பெருகி வருதல் போல் வயலைப் பண்படுத்தி நன்கு பாதுகாத்து வந்த உழவர்க்கு விளைவு மிகுதியாய் வந்தது என இருவகை வரவு நிலைகளைத் தெளிவுறுத்தியுள்ளார்.

சாலி - நெல். உழவுத் தொழிலை உரிமையோடு செய்து உணவுப் பொருள்களை மிகுதியாக விளைத்து உலக வாழ்க்கையை இனிது நடத்துக, அவ்வளவோடு நில்லாமல் பரம்பொருளிடம் அன்பு செலுத்தி உயர்ந்த கதிநிலையை அடைத்து கொள்க எனச் சீவிய நிலைகளை விளக்கிப் புனிதமான இனிய உணர்வு நலனை அதி விநயமாக இது உணர்த்தியுள்ளது.

உலக வாழ்வும் உயிர் வாழ்வும் ஒளி பெற உழைத்து எவ்வழியும் செவ்வையாய் உயர் நிலை பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Oct-19, 7:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 116

சிறந்த கட்டுரைகள்

மேலே