மடிகொண்டு இருக்கும் மகன் இல்லம் இடிகொண்ட புல்லாய் இறும் - சோம்பல், தருமதீபிகை 476

நேரிசை வெண்பா

பிறந்த குடிநிலையைப் பேணிப் பெருக்கிச்
சிறந்த படிதலைமை செய்யா(து) - உறைந்து
மடிகொண்(டு) இருக்கும் மடமகன்.இல்லம்
இடிகொண்ட புல்லாய் இறும். 476

- சோம்பல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தான் பிறந்த குடியைப் பேணிப் பெருமை மிகச் செய்து உயர்ந்த நிலையில் வைக்காமல் ஒருவன் மடிமண்டி இருப்பின் இடி விழுந்த மரம்போல் அவன் குடிவாழ்வு அடியோடு அழிந்து போகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தனது பிறப்பினால் ஏதாவது ஒரு சிறப்பினை மனிதன் அடைந்து கொள்ள வேண்டும். அங்ஙனம் அடைந்த போதுதான் பிறந்த பயனை ஓரளவு அவன் பெற்றவன் ஆகின்றான்.

தோன்றின் புகழொடு தோன்றுக’ எனத் தோற்றத்திற்கு ஓர் ஊற்றத்தை வள்ளுவர் இவ்வாறு உரிமையாக உணர்த்தியிருக்கிறார். தோன்றினால் இப்படித் தோன்றுக; இல்லையானால் தோன்றாமல் இருப்பது நல்லதென வள்ளுவர் சொல்லியுள்ளது உள்ளம் ஊன்றி உணரவுரியது.

தோன்றல் ஏந்தல், செம்மல், குரிசில் என லரும் பெயர்கள் அரிய வரிசைகளுடையன. தன்னுடைய செயல் இயல்களால் உயர்நிலையடைந்து எங்கும் எவரும் என்றும் தெரியத் தலைமையோடு தோன்றி நிற்பவன் தோன்றல் என நேர்ந்தான். சிறந்த குலமகனை அவனது தோற்றத்தின் ஏற்றம் கருதித் தோன்றல் என்று சொல்லப் படுகிறது.

சுதனும், தலைவனும் தோன்றல் ஆகும். – பிங்கலந்தை

தலைமையான நிலைமையில் அமைந்த இந்தப் பெயர் இராமனுக்கு மிகவும் உரிமையாய் வந்துள்ளது. இராமாயண காவியத்துள் இந் நாமம் தோன்றியுள்ள இடமெல்லாம் இராமனின் மாண்பினை ஊன்றி யுணரச் செய்துள்ளது.

பூவினுட் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி. - சிந்தாமணி 316 சீவகனை இவ்வண்ணம் காவிய நாயகன் குறித்திருக்கிறார். தந்தை இழந்து போன அரசினை இம் மைந்தன் பிறந்து மீட்டி மகிமைகள் பல நாட்டினான்.

தோன்றிய குடியை வானம் தொடுகிரி எனத்துலக்கி
ஊன்றிய புகழால் வையம் ஒளிமிகச் செய்துநின்றான்.

என்றபடி சிறந்து நின்றானாதலால் பிறந்த குலமும் பெற்ற நாடும் உயர்ந்த தலைமகனாக இவனை உவந்து கொண்டாடின.

’பிறந்த குடி நிலையைப் பேணி’ என்றது ஆண்மகனாய் இவ்வுலகில் பிறந்தவன் முதலில் செய்யவுரிய கடமையை இது தெளிந்து நின்றது. தன்னை ஈன்றருளிய அன்னைக்கும், பிதாவுக்கும், குடிக்கும், நாட்டுக்கும் உதவி செய்ய வேண்டிய கடமைகளை ஆடவன் மருவியிருத்தலால் அவனுடைய பாடும், பயனும், பரிசும், பதவியும் நாடி அறிய உரியன.

செல்வம், கல்வி முதலியவற்றால் தன் குடி இயல்பாகவே சிறந்திருந்தாலும் தான் பிறந்து வந்தபின் அதில் ஓர் உயர்ந்த நிலைமையைப் புதிதாய்ப் பொலிந்து வரச் செய்யின் அவன் ஒரு நல்ல தலைமகனாய் உலகம் புகழ ஒளி பெற்று நிற்கின்றான்.

திவிட்டன் என்பவன் சிறந்த குலமகன்; வாகுவலி வமிசத்தில் பிறந்தவன். பிரசாபதி என்னும் அரசனுடைய அருமைத் திருமகனாய்ப் பிறந்திருந்த இவன் பல கலைகளையும் பயின்று பருவமெய்தி நின்றான். அங்ஙனம் இருக்குங்கால் அயல் நாட்டு மன்னனிடமிருந்து தூதுவர் இருவர் வழக்கம் போல் வந்து இவனுடைய தந்தையிடம் திறை கேட்டனர். அதனை இக்குமரன் கேட்டான். பிறன் ஒருவனுக்கு அடங்கி வரி செலுத்தி வாழ்வது தன் குடிக்குப் பெரிய வசை என்றிவன் மறுகி மறுத்தான். திறை பெறும் பொருட்டு மறுபுலமிருந்து வந்தவர்களை நோக்கி இவன் உரைத்த மொழிகள் உள்ளத்தின் உறுதி நிலைகளை உணர்த்தியுள்ளன.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)

684. உழுதுதங் கடன்கழித்(து) உண்டு வேந்தரை
வழிமொழிந்(து) இன்னணம் வாழும் மாந்தர்போல்
எழுதிய திறையிறுத்(து) இருந்து வாழ்வதே
அழகிது பெரிதுநம் 3அரச வாழ்க்கையே. 112

685. நாளினுந் திறைநுமக்(கு) உவப்பத் தந்துநா(டு)
ஆளுதும் அன்றெனில் 1ஒழிது மேலெம
தோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ்
வாளினும் பயனெனை? மயரி 2மாந்தர்காள். 113

686. விடமுடை எரிக்கொடி விலங்கு நோக்குடை
அடலுடைக் கடுத்தொழில் அரவின் ஆரழற்
படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர்
மடமுடை மனத்தனம் மயரி மன்னனே. 114

688. பாழியான் மெலிந்தவர் திறத்துப் பண்டெலாம்
ஆழியால் வெருட்டிநின்(று) அடர்த்திர் 1போலுமஃ(து)
ஏழைகாள்! இனியொழிந் திட்டுச் செவ்வனே
வாழுமா(று) அறிந்துயிர் காத்து வாழ்மினே. 116 சீயவதைச் சருக்கம், சூளாமணி

திவிட்டனது மன நிலையும் மான உணர்ச்சியும் இதனால் இனிது புலனாம். இங்ஙனம் திறை மறுத்துப் பொருதி வென்று தனி அரசாய்த் தழைத்து நின்றான். தேசம் முழுவதும் இக் குலமகனைப் புகழ்ந்து போற்றியது. தான் பிறந்த குடியைச் சிறந்த தலைமையில் ஒளிபெறச் செய்து வழிவழியெல்லாம் விழுமிய நிலையில் விளங்க விளக்கி உலகம் புகழ உயர்ந்து நின்ற இவன் சரிதம் ஓர் காவியமாய் வெளி வந்துள்ளது.

மடியின்றி ஊக்கி முயல்கின்றவர் எவரோ அவரே தம் குடியை உயர்த்திப் படியில் உயர்ந்து நெடிய புகழுடையராய் நிலவி நிற்கின்றார். எண்ணங்கள் பெருக ஏற்றங்கள் பெருகி எழுகின்றன. கருதி முயல்பவர் அரிய பல பெருமைகளை மருவி மகிழுகின்றனர்.

உயர்ச்சி நிலை உள்ளத்தில் தோன்றின் அயர்ச்சி அடியோடு ஒழிகின்றது; முயற்சிகள் முன்வந்து நிற்கின்றன. மனவுறுதியின்படியே மனிதன் உயர் நிலைகளை அடைந்து கொள்கின்றான்.

பிராஞ்சு தேசத்து வீரனான நெப்போலியன் என்பவன் சாதாரணமான குடியில் பிறந்தவன். தனது மன வலிமையினால் அதிசய மனிதனாய் உயர்ந்து அந்நாட்டுக்கு அரசன் ஆயினான். அவனது இயல்பினை வியந்து உலகம் இன்றும் துதி செய்து வருகிறது.

He always wanted to be first in everything.

'அவன் எப்பொழுதும் எவ்வழியும் முதன்மையாயிருக்கவே அவாவி நின்றான்' என நெப்போலியனைக் குறித்து இவ்வாறு கூறியுள்ளனர்.

'உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்' (குறள் 596) என்ற வள்ளுவர் வாய்மொழியை இயல்பாகவே அவன் உள்ளம் கொண்டு உன்னத நிலையை அடைந்துள்ளமை ஈண்டு உன்னியுணர்ந்து கொள்ள வேண்டும்.

மடியின்றி ஊக்கி உழைக்கும் மக்களால் குடியும், குலமும் நலம் பல பெறுகின்றன; மடியுடைய மாக்களால் அவை இழிவும் அழிவும் அடைகின்றன.

’இடி கொண்ட புல்லாய் இறும்’ என்றது மடி கொண்டிருக்கும் மடமகனுடைய குடி அடியோடு அழியும் படியறிய வந்தது. புல் – மரம்;

மடி பாய்ந்த குடி பழி, வறுமைகள் பாய்ந்து பாழ்படுமாதலால் இடி வீழ்ந்த மரமென அது எதிர் காண நேர்ந்தது.

ஊக்கி உழைத்து ஆக்கங்களை விளைத்துத் தன் குடியை உயர்த்துகின்றவனே நல்ல குலமகன் ஆகின்றான்;.அங்ஙனமின்றிச் சோம்பித் திரிபவன் இழிமகனாய் இழிந்து பழி பல காண்கின்றான்.

மடியில் விழுந்து மடிந்து போகாதே; படியில் எழுந்து முடிமன்னரும் வியந்து காண உயர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Oct-19, 7:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 153

சிறந்த கட்டுரைகள்

மேலே