சோம்பல் சிறிதே குடிபுகின் சீதேவி அன்றே சினந்தகல்வாள் - சோம்பல், தருமதீபிகை 477

நேரிசை வெண்பா

தீதான சோம்பல் சிறிதே குடிபுகின்
சீதேவி அன்றே சினந்தகல்வாள் - மூதேவி
வந்து மகிழ்ந்து வதிவாள் பழிமிடி
முந்து வளரும் முனைந்து. 477

- சோம்பல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தீமையான சோம்பல் சிறிது புகுந்தாலும் சீதேவி உடனே சினந்து விலகிப் போவாள்; மூதேவி விரைந்து புகுந்து கொள்வாள்; அந்தக் குடி பழியும், மிடியும் படிந்து அழிந்து போகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

’தீது ஆன சோம்பல்’ என்றது அதனால் விளைகின்ற ஏதங்களையும் இன்னல்களையும் கருதியுணர வந்தது. நல்லது தீயது என்பன மனிதனுடைய சுக துக்கங்களுக்கு முறையே மூல காரணங்களாயுள்ளன. சுகத்தையே யாவரும் எப்பொழுதும் உவந்து விரும்புகின்றனர்; துக்கத்தை எல்லாரும் எவ்வழியும் இகழ்ந்து வெறுக்கின்றனர். துன்பங்கள் நேராதபடி அஞ்சுகின்ற அலமரல்களே சீவர்களுடைய நெஞ்சங்களில் எங்கும் நிலைத்திருக்கின்றன.

பெரிய அரச திருவில் இருப்பவரையும், அரிய பதவியில் உள்ளவரையும் இந்த அச்சம் துச்சமாக ஆட்டி வைக்கின்றது. பயமின்மை எவனுடைய உள்ளத்தில் இருக்கின்றதோ அவன் ஒரு பெரிய அதிசய மகானாய்த் துதி செய்யப் பெறுகின்றான். அபயம் என்பது ஒரு தெய்வத் திருவாய் உய்வைக் தருகின்றது. எந்த உயிருக்கும் யாதும் அச்சத்தைச் செய்யாமல் யாண்டும் இதமே கருதி வருகின்ற புனித மனிதனே இனிய அபயனாய் எளிது திகழ்கின்றான்.

நல்ல உணர்வு நலமுடையவன் தன் உயிர்க்கு எவ்வழியும் உறுதி நலன்களை ஓர்ந்து அறுதியாய் உரிமை செய்து கொள்ளுகின்றான். இம்மை வாழ்விலும், மறுமை வாழ்விலும் உண்மையாக நன்மை காண்பவன் செம்மையாளனாய்ச் சிறந்து மிளிர்கின்றான்.

உறுதி நலனைக் கருதி முயலுகின்ற முயற்சி எவ்வகையிலும் உயர்ச்சியாய் உவகை தருகின்றது. அங்ஙனம் கருதாமல் சோம்பியிருப்பதில் பரிதாபங்கள் பாய்ந்து வருகின்றன.

’சோம்பல் குடிபுகின் சீதேவி அகல்வாள்; மூதேவி வதிவாள்’ ஒரு குடியில் மடி புகுந்தால் அங்கே இலட்சுமி விலகிப் போய் விடுவாள்; மூதேவி வந்து புகுந்து கொள்வாள் என்றது நேர்கின்ற நிலைமைகளை நினைந்து கொள்ள வந்தது.

செல்வமும் சீர்மையும் இழந்து, வறுமையும் அல்லலும் உழந்து சோம்பேறி இழிந்து படுகின்றான்; அந்த அழி நிலையை இது விழி தெரிய விளக்கியது. மடி புகுந்த குடி இன்ப ஒளி மறைந்து துன்ப இருள் நிறைந்து எவ்வழியும்.அல்லலாய் இழிந்து படுகின்றது

சோம்பலால் உள்ளம் கூம்பி இழிகின்றது; முயற்சி ஒழிந்து உயர் நலங்கள் யாவும் ஒழிந்து போகின்றன; துயர் நிலைகள் எல்லாம் தொடர்ந்து அடர்ந்து கொள்ளுகின்றன.

’பழி மிடி வளரும்’ என்றது மடியினால் விளையும் குடிகேடுகளை உணர்த்தி நின்றது. தொழில் செய்யாமல் சோம்பியிருப்பவன் இழி நிலையாளனாய்க் கழிந்து படுதலால் பலரும் அவனை இகழ்ந்து பழித்து எள்ளி வெறுக்கின்றார்,

இடிபுரிந்(து) எள்ளும்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்(று)இ லவர். 607 மடியின்மை

உள்ளத்தில் மடி கொண்டவரை உலகம் எள்ளி இகழும் என வள்ளுவர் இங்ஙனம் குறித்திருக்கிறார். யாரும் இடித்துப் பழிக்க இழிந்து நிற்பர் என்றதனால் அவரது ஈன நிலை தெளிந்து கொள்ள வந்தது.

ஊக்கமும் உணர்வும் குன்றி ஆக்கம் கெட்டிருத்தலால் மடியரை எவரும் எள்ளி நோக்கித் தள்ளிப் போகின்றார்.

வறுமையும் பழியும் வளர்த்துச் சிறுமை பல செய்து இருமையும் கெடுக்கும் இயல்பினதாதலால் சோம்பல் கொடிய தீமையாய் முடிவாகியுள்ளது. குடிகேடு புரிகின்ற அக்கொடு மடியை அடியோடு ஒழிக்க வேண்டும்.

இருள் நீங்கிய அளவில் ஒளி ஓங்குகின்றது; மடி ஒழிந்த பொழுது மனிதன் தெளிவடைந்து சிறந்து திகழ்கின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Oct-19, 10:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 179

மேலே