மடியர் அடியோடு அழிகின்றார் என்னே அது - சோம்பல், தருமதீபிகை 479

நேரிசை வெண்பா

மாரி எனவழங்கும் வள்ளல் உறவெய்தி
நேரில் இருந்தாலும் நீள்வறுமை – தீரும்;
வழியின்றி அந்தோ மடியர் அடியோ(டு)
அழிகின்றார் என்னே அது. 479

- சோம்பல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மேகம் போல் வழங்குகின்ற உயர்ந்த உபகாரிகள் உரிமையோடு உதவி புரிந்தாலும் மடியர் மிடி தீர்ந்து வாழார்; குடி தாழ்ந்து அடியோடு அழிந்தே போவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சோம்பல் ஒரு கொடிய நோய். அதற்கு இடங் கொடுக்கலாகாது; கொடுத்தால் குடியைக் கெடுத்தே விடும். மடியோடு சிறிது நேரம் பழகினும் உணர்வு குடி போய் உள்ளம் பழுதாக நேர்கின்றது. உயிர்நிலை பாழாகின்றது.

மடிகொண்ட மனம் மடமை மண்டி இழிநிலைகளில் அழுந்தி விடுதலால் சோம்பேறி ஒன்றுக்கும் உதவாமல் ஊனமாய் ஒழிந்து போகின்றான். யாதொரு முயற்சியுமின்றி உள்ளம் கூம்பி ஒடுங்கியிருக்கும் நிலையைச் சோம்பல் என்று சொல்கின்றோம்.

தூங்கல் அசைதல் அலைசுதல் சோம்பே;
சடம்மடி தள்ளா வாரமும் தகுமே. – பிங்கலந்தை

சோம்பலுக்கு இவ்வாறு பேர்கள் வந்துள்ளன. உயிருணர்ச்சி குன்றி முடமாய் முடங்கி யிருத்தல் கருதி சடம் என்று குறித்தது. ஊக்கி முயல்வது உயிர்நிலையாயுள்ளது; அஃது இல்லாதயர்வது உயிரற்ற சவநிலை ஆகின்றது.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

சிற்றெறும்(பு) ஆதியாச் சீவ கோடிகள்
முற்றுமெய் யுழைத்துயிர் முறையிற் காக்குமால்
சற்றுமெய் யசைவிலாச் சழக்கர் ஆருயிர்
அற்றவோர் சவங்கொன்மற் றசர மேகொலோ. 1

விடக்குறுஞ் சடம்பல வேலை செய்தற்கா
நடக்கவும் ஓடவும் நனியு றுப்புகள்
மடக்கவு நீட்டவும் வாய்ந்த தாற்சும்மா
கிடக்குமெய்ச் சோம்புளோர் கேடு ளார்களே. 2 சோம்பல், நீதிநூல், மாயூரம் வேதநாயகம் பிள்ளை

சோம்பலுடையவர் பல வகையிலும் இழிந்து பாழ்படுதலால் அந்தப் பரிதாப நிலைகளை நினைந்து மேலோர் பரிந்து இரங்குகின்றனர். ’மடி விழைய மிடி விளையும்’ என்னும் பழமொழியால் வறுமையும், துயரமும், வசையும் பெருகிச் சிறுமையடைந்து மடியர் மறுகி அலைவர் என்பது அறியலாகும்.

‘மடியர் அடியோடு அழிகின்றார்’ என்றது அவரது குடிகேடு தெரிய வந்தது.

மடி புகுந்த போதே அறிவொளி இழந்து மனிதன் இருளடைந்து போய் எவ்வகையிலும் உய்வின்றி அவன் இழிந்து கழிந்து அழிந்து ஒழிகின்றான்.

செத்த சவத்தை எழுப்ப இயலாது; அதுபோல் மடியில் மடிந்தவரைப் படியில் எழுப்பி வாழ வைக்க முடியாது.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. 606 மடியின்மை

உலகம் முழுவதும் ஆளுகின்ற அரசருடைய திரு அமைந்தாலும், உறவு நேர்ந்தாலும் மடியுடையார் அவற்றால் யாதொரு பயனும் அடையார் என்றும் அவர் மிடியாய் இழிந்தே போவர் என்றும் வள்ளுவர் இங்ஙனம் உணர்த்தியுள்ளார். படி – பூமி,. சீவ கோடிகள் படிந்திருப்பது என்னும் ஏதுவான் வந்தது. படி முழுதும் கிடைத்தாலும் மடியுடைய இழுதையர் மாண்பயன் எய்தார் என்றதனால் அவரது ஊனமான ஈன நிலையை உணர்ந்து கொள்ளலாம். உள்ளம் மடிய உயர்வு மடிந்தது.

கண் ஒளி இழந்து குருடனாயிருப்பவன் எதிரே கதிரவன் ஒளி வீசி நின்றாலும் அதனாலவன் யாதொரு பயனும் பெறான்; அதுபோல் எண் ஒளி இழந்து மடியனாயுள்ளவனுக்கு எவர் உதவி செய்தாலும் அவன் உயர்நிலையை அடையான்.

உள்ளம் ஊன்றி உழைப்பவன் ஒளி மிகுந்து உயர்ந்து வருகின்றான்; அங்ஙனம் உழையாமல் மடிந்திருப்பவன் எள்ளலடைந்து இழிந்து கெடுகின்றான். தன்னை மருவினவனை மானம், மரியாதைகளை அழித்து மனிதத் தன்மையை ஒழித்து ஈனன் ஆக்கி விடுதலால், மடி எவ்வளவு இளிவுடையது! எத்துணை அழிவினது! என்பது எளிது தெளியலாகும்.

பொல்லா மடியின் புலைவாய் புகினிலைகள்
எல்லாம் மடியும் இடிந்து.

சோம்பலில் ஒருவன் சுவை கண்டானானால் அவன் பின்பு யாண்டும் நவைகளே கண்டு நாசம்.அடைகின்றான். அந்த நீசத்தை நேராமல் நெஞ்சம் தேறி நெறியே முயன்றால் அரிய பேறுகள் அவனிடம் உரிமையோடு பெருகி வருகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Oct-19, 9:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

மேலே