நெஞ்சில் மடிபுகின் நீசம் புகுந்து குலம் சிதையும் - சோம்பல், தருமதீபிகை 480

நேரிசை வெண்பா

நெஞ்சில் மடிபுகின் நீசம் குடிபுகுந்து
பஞ்சில் எரிபடிந்த பாடாகி - மிஞ்சும்
குடியும் குலமும் குலைந்து சிதையும்
படியறிந்(து) உய்க பரிந்து. 480

- சோம்பல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நெஞ்சில் மடி புகுந்தால் பஞ்சில் எரி புகுந்தது போல் மனிதன் கரிந்து குடியும் குலமும் அழிந்து ஒழிவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஒருவன் உயர்ந்து வாழ்வதும், இழிந்து தாழ்வதும் அவனுடைய உணர்வு நிலைகளால் உளவாகின்றன. நல்ல உணர்ச்சிகள் நலம் பல தருகின்றன; தீய எண்ணங்கள் தீங்குகளை விளைத்து விடுகின்றன. இன்பமும் புகழும் எய்த விரும்புகின்றவன் துன்பமான இழி நினைவுகளை அடியோடு ஒழித்து விட வேண்டும்.

மனிதனுடைய எல்லா நிலைமைகளுக்கும் நெஞ்சமே தஞ்சமாயுள்ளது. கண்ணில் மாசுபடின் அது குருடு பட்டு, ஒன்றும் தெரியாமல் குன்றி விடுகின்றது; அவ்வாறே நெஞ்சில் தீமை புகின் அது நிலை குலைந்து பாழ்படுகின்றது.

நெஞ்சில் மடிபுகின் நீசம் குடி புகும் என்றது சோம்பலால் விளையும் இழி நிலைகளையும் பழி கேடுகளையும் விழிதெரிய விளக்கி நின்றது. அரிய பல மேன்மைகளை விளைத்தருள உரிய உள்ளத்தில் மடி புகுந்தால் அது புல்லிதாயிழிந்து புலையுறவே அந்த மனிதன் எந்த வழியிலும் ஈடேறாமல் இழிந்தே போகின்றான். சிந்தனை குன்றவே நிந்தனைகள் நேர்கின்றன.

குடி மயக்கம் போல் மடி மயக்கமும் அறிவைக் கெடுத்து, ஆள்வினையைத் தொலைத்து, வாழ்வினைப் பாழாக்கி விடுதலால் மடி ஒரு கொடிய தீமை ஆகின்றது.

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

மடிஒன்(று) உளதேல் வல்விரைந்து
..வகுக்கும் தொழிலை நீட்டிக்கும்;
கடியு மறவி துயில்விளைக்கும்:
..கலதி தனைச்சேர்த் திடும்பகைவர்க்(கு)
அடிமை புகுத்தும், குடிகெடுக்கும்:
..அதனை விடுப்பின், ஆண்மையினும்
குடிமை யிடத்தும் வேறுளவாம்
..குற்றம் பலவும் ஒழிக்குமே. - விநாயக புராணம்

சோம்பலால் விளையும் கேடுகளையும், அதனை ஒழித்தபோது உளவாம் நன்மைகளையும் இது உணர்த்தியுள்ளது. கலதி - மூதேவி.

மடி மூதேவியைச் சேர்த்து விடும் என்றதனால் அதன் குடி கேடுகளைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ளலாம். வேலைகளை விரைந்து செய்யாதபடி காலத்தைக் கடத்தும்; மறவியில் தள்ளி மயக்கத்தில் ஆழ்த்தும், உறக்கத்தில் வீழ்த்தும்; சூம்படைந்து கூம்பியிருக்கச் செய்யும்; மூதேவியைக கூட்டும்; பிறர்க்கு அடிமை ஆக்கிப் பிழை மிகக் காட்டும்; குடியைக் கெடுத்துக் குலத்தை அழித்து விடும் என மடியின் இயல்புகள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

இத்தகைய கொடிய மடியைக் கடியாமல் களித்திருப்பது நெடிய மடமையாம். இனியது என்று தழுவின் இன்னாமையில் ஆழ்த்தி இழிபழிகளில் வீழ்த்தி விடுமாதலால் அதனை அஞ்சி ஒழிக்க வேண்டும்.

’பஞ்சில் எரி படிந்த பாடு’ என்றது நெஞ்சில் மடி புகுந்தபோது அந்த மனிதனுக்குச் சேருகின்ற அழிவு நிலையை இது தெளிவுறுத்தியது.

சோம்பலால் எல்லாத் தீமைகளும் விளைகின்றன. முயற்சியில் ஊக்கி மேலெழுகின்ற நல்ல உணர்ச்சிகளை அது ஒழித்து விடுவதால் மனிதன் நவையுள் இழிந்து நாசம் அடைய நேர்கின்றான்.

ஒரு குடியில் தலைவனாயிருக்கின்றவனை மடி மருவிக் கொண்டால் அந்தக் குடியிலுள்ளவர் அனைவரும் நிலைகுலைந்து படு துயரங்களை அடைகின்றனர். தீயதொரு மாய நோயாய் மடி மருவியுளது.

மடியினால் விளையும் குடிகேடுகளை உணர்ந்து அதனைக் கடிது களைந்து நெடிது முயன்று நிலையில் உயர்க என்றதால் ’படி அறிந்து உய்க’ என்றது. கருதி உயராதவன் கதி யழிகின்றான்.

மனம் ஏதாவது ஒன்றைப் பற்றிச் சலித்துக் கொண்டேயிருக்கும். அந்த அந்தக்கரண விருத்திகளைத் தொழில் முயற்சிகளில் செலுத்தின் உயர் பலன்கள் உளவாம்; அங்ஙனம் செலுத்தாது விடின் வறிதே பாழாம். எண்ணங்களை நல்ல வழிகளில் பயன்படுத்தாமல் பாழாக்குவது அரிய மனித வாழ்வை அநியாயமாய் நாசம் செய்து விடும்.

ஒரு தொழிலும் புரியாமல் வறிதே இருப்பது ’மடி’ என வந்தது. அவ்வாறு மடிந்திருப்பவரைச் சோம்பேறிகள் என்று உலகம் இகழ்ந்து கூறுகின்றது. இங்கே ஒர் உண்மையை நாம் நுண்மையாக ஓர்ந்துணர்ந்து கொள்ள வேண்டும்.

வெளியே யாதொரு கருமமும் செய்யாமல் ஆன்ம சிந்தனையோடு அடங்கியிருக்கும் சாதுக்களும் உளர். இந்த நல்ல சாதுக்களை அந்தப் பொல்லாத சோதாக்களோடு சேர்த்து எண்ணி விடலாகாது. அரிய தன்மையை உணர்வது பெரிய நன்மையாம்.

ஞான நிலையில் அடங்கியுள்ள இனிய அமைதிக்கும் ஈனச் சோம்பலுக்கும் எவ்வளவோ வேறுபாடுண்டு. ஒளியும் இருளும் என முறையே அவை தெளிவும் இளிவும் மருவியுள்ளன.

உலக காரியங்களை எல்லாம் ஒழிய விட்டுப் பரமன் ஒருவனையே பற்றி அமைதியாய் இருப்பவர் உலகக் காட்சியில் சோம்பர் போல் தோன்றினும் உணர்வுக் காட்சியில் அவர் அரிய பெரிய அதிசய நிலையினர். எவரும் துதி செய்யுந் திருவினர்.

தரவு கொச்சகக் கலிப்பா

மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிகவுணர்ந்(து)
ஆம்பரி(சு) அறிந்துகொண்(டு) ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலைசிரைத்துன் கடைத்தலை இருந்துவாழும்
சோம்பரை யுகத்திபோலும் சூழ்புனல் அரங்கத்தானே. 38 திருமாலை

எல்லாக் கருமங்களையும் கைவிட்டு இறைவன் திருவருளையே நாடியிருக்கும் துறவிகளைச் சோம்பர் என இதில் சுட்டியிருக்கிறார். இட்டுள்ள பெயரில் சுவை சொட்டியுள்ளது. தெய்வம் உவந்து காணும் என்றதனால் அவரது திவ்விய மகிமை தெரியலாகும்.

ஈனமாய்ச் சோம்பியிருப்பவர் வெளியே சும்மா இருப்பது போல் தோன்றினாலும் அவருடைய உள்ளம் இழிவான பழிவழிகளிலேயே உழலும்; அல்லது பாழாய் மடிந்து கிடக்கும். இருண்டு மருண்டு இழிந்துள்ள அது தெருண்டு தெளிந்து உயர்ந்துள்ள அடக்கக்கோடு எவ்வழியும் யாதும் ஒவ்வாது.

சிந்தையை அடக்கி ஞானமாய் ஒடுங்கியிருப்பது மிகவும் அரிய செயலேயாம். இந்த அமைதியில் ஆன்ம ஒளி மிகுந்து பேரானந்தம் பெருகி எழுகின்றது. உலக நாட்டம் ஒருவிப் பரம்பொருளோடு மருவியுள்ளமையால் உயிர் அதிசய இன்பமாய்த் துதி செய்ய நின்றது. யோகம், தியானம், சமாதி என்னும் பதங்கள் பரமான்வோடு ஆன்மா கலந்து மகிழும் விதங்களைக் காட்டியுள்ளன.

கட்டளைக் கலித்துறை

சும்மா விருக்கச் சுகஞ்சுகம் என்று சுருதியெல்லாம்
அம்மா நிரந்தரஞ் சொல்லவுங் கேட்டும் அறிவின்றியே
பெம்மான் மவுனி மொழியையுந் தப்பிஎன் பேதைமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன்அந் தோஎன் விதிவசமே. 36 - 27. பாயப்புலி

நேரிசை வெண்பா

சும்மா இருக்கச் சுகமுதய மாகுமே
இம்மாயா யோகமினி ஏனடா - தம்மறிவின்
சுட்டாலே யாகுமோ சொல்லவேண் டாங்கன்ம
நிட்டா சிறுபிள்ளாய் நீ. 52 - 28. உடல்பொய்யுறவு

சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்(று)
எம்மால் அறிதற் கெளிதோ பராபரமே. 70 பராபரக் கண்ணி, தாயுமானவர்

சும்மா இருப்பதில் விளைகின்ற சுக போகங்களைத் தாயுமானவர் இவ்வாறு ஆர்வ மீதுார்ந்து கூறியிருக்கிறார். அரிய அனுபவங்கள் தெரிய வந்துள்ளன.

கலி விருத்தம்
(மா 4)

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
சும்மா இருசொல் அறஎன் றலுமே
அம்மா பொருளொன் றுமறிந் திலனே. 12 கந்தரனுபூதி

’சும்மா இரு’ என்று அருணகிரிநாதருக்கு முருகன் .அருள் புரிந்துள்ள அதிசய நிலையை இது அறிவுறுத்தியுள்ளது. மனம், மொழி, மெய்கள் அடங்கி ஒருமை எய்திப் புனித மகான்கள் தனிமையில் அனுபவிக்கும் ஆனந்த நுகர்வுகளை உரைகளால் உணர இயலாது. மோன நிலையில் ஞான போகங்கள் விளைகின்றன.

வெண்டளை பயிலும் கலி விருத்தம்

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 16

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. 17 முதல் தந்திரம் - 4. உபதேசம், திருமந்திரம், பத்தாம் திருமுறை

ஞான யோக நிலையில் தோய்ந்து பேரின்ப போகங்களை நுகர்கின்ற மோன சீலர்களைத் திருமூலர் இவ்வாறு காட்டியிருக்கிறார். சோம்பர் என இங்கே குறித்திருக்கும் பேரையும் சீரையும் கூர்ந்து ஓர்ந்து கொள்கின்றோம்; உள்ளம் தேர்ந்து உவந்து நிற்கின்றோம்.

சீவ போதம் சிவமயமாய்க் கலந்த போது பிறவி தீர்ந்து போய்ப் பேரானந்தம் ஆகின்றது.

வெளிநோக்கான உலகவாழ்வில் உரிய கருமங்களைச் செய்து பொருளும் புகழும் பெறுதலும், பருவம் வந்து பக்குவம் அடைந்த பொழுது பரமான்மாவைத் தோய்ந்து வர மானபதம் அடைதலும் மனித உரிமைகளாய் மருவியுள்ளன.

இம்மை, மறுமை, அம்மை என்னும் மும்மை நிலைகளும் செம்மையான கருமங்களினாலேயே சேர வருகின்றன. தக்க முறைகளில் கருதி முயல்பவர் மிக்க பயன்களை மருவி மகிழ்கின்றனர்.

இரவில் உறங்குவது பகலில் வேலை. செய்பவே, இளைப்பாறுவதும் களைப்பு மாறுவதும் உழைப்பில் ஏறவேயாதலால் அந்த ஆறுதலும், மாறுதலும் இனிய பேறுகளாய் இசை பெற்றுள்ளன. வாழ்வின் அனுகூலங்களைச் சூழ்வோடு பயன்படுத்தாமல் வீணே பாழாக்கலாகாது.

உரிய கருமமே மனித தருமமாய் மருவியுளது. பிறப்பின் உரிமையாய் அமைந்துள்ள கருமங்களை எவன் அறிவோடு கருதிச் செய்கின்றானோ அவன் திருவும் தேசும் பெறுகின்றான்; அங்ஙனம் செய்யாதவன் சிறுமையடைந்து சீரழிகின்றான். உற்ற கடமையை உணராதிருப்பது குற்றம் ஆகின்றது.

எவ்வழியும் ஈன மடியில் இழியாமல் ஞானமுடன் முயன்று மானவர் திரளில் மகிமை பெறுக.

“Life without industry is guilt, and industry without art is brutality.” (Fuskin)

’தொழில் இல்லாத வாழ்வு குற்றமாய்ப் பழி படுகின்றது; அறிவில்லாத உழைப்பு மாட்டுப் பாடாய் இழிவடைகின்றது’ என ரஸ்கின் என்னும் ஆங்கில அறிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார். உள்ளம் ஊன்றி உணர்ச்சியோடு முயற்சிகளைச் செய்து வரின் அந்த மனித வாழ்வு எவ்வழியும் உயர்ச்சியாய் ஒளி வீசி வருகிறது.

கருதி வருகின்ற அளவே மனிதன் உறுதியும் உரமும் பெறுகின்றான். கருதாது நின்று விடின் அவனுடைய நிலை வீணாய் விளிந்து போகின்றது. முயற்சி உயர்ச்சியாய் ஒளி புரிகின்றது; அயர்ச்சி இகழ்ச்சியாய் இளிவு தருகின்றது.

“The hand of the diligent shall bear rule; but the slothful shall be under tribute.” (Bible)

'முயற்சியாளன் கை உலகத்தை ஆளும்; சோம்பேறி கை ஊழியம் புரியும்' என்னும் இது இங்கே அறியவுரியது.

மடி புகுந்த பொழுதே மனிதன் ஒன்றுக்கும் உதவாதவனாய் ஒழிந்து போகின்றான். யாதொரு பயனுமடையாமல் அவமே அவலமுறுதலால் அவனது நிலை துயரமாகின்றது.

“The soul of the sluggard desireth and hath nothing: but the soul of the diligent shall be made sat.”

சோம்பேறி விரும்பினாலும் ஒன்றும் கிடையாது; முயற்சியுடைய சீவன் என்றும் வளமாய்ச் செழித்திருக்கும்” என சாலமன் என்னும் யூத ஞானி இவ்வாறு கூறியிருக்கிறார்.

நேரிசை வெண்பா

நீச மடியர் நிலைகுலைந்து நேர்ந்தகுடி
நாச மடைய நவையுறுவர் - தேசுடைய
சாந்த மதியர் தருமம் தவமருவி
ஏந்தல் உறுவர் எதிர்.

அயர்ந்து இழியாமல் முயன்று உயருக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Oct-19, 10:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 135

சிறந்த கட்டுரைகள்

மேலே