நெஞ்சத்து ஒருமறதி நேரின் பலதுயர்கள் அஞ்ச வரும் - மறதி, தருமதீபிகை 481

நேரிசை வெண்பா

நெஞ்சத்(து) ஒருமறதி நேரின் பலதுயர்கள்
அஞ்ச வருமென்(று) அறிமினோ - தஞ்சமென
நின்ற நினைவொழியின் நேர்ந்த நலமெல்லாம்
ஒன்ற ஒழியும் உடன். 481

- மறதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை: உள்ளத்தில் ஒரு மறதி நேரின் பல துயர்கள் நேருகின்றன; உறுதியான நல்ல நினைவு ஒழியின் எல்லா நலங்களும் உடனே ஒழிந்து போகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், மறவியால் விளையும் பிழைகளை உணர்த்துகின்றது.

ஒருவனுடைய உயர் நிலைகள் அவனது இயல் நலங்களால் இசைந்து வருகின்றன. புறத்தே தோன்றுகின்ற தோற்றங்களுக்கு உரிமையான காரணங்கள் அகத்தே ஊற்றமாய் உறைந்துள்ளமையால் மனிதனது ஏற்றம் இறக்கங்களுக்கு நெஞ்சம் நிலைக்களமாயுள்ளது.

நெஞ்சம் நன்கு திருந்திய பொழுது அந்த மனித வாழ்வு பெருந்தன்மைகள் நிறைந்து எங்கும் சிறந்து திகழ்கின்றன. ஊற்று நீர் போல் இனிய நினைவுகள் ஊறிவரும் அளவு அரிய மகிமைகள் ஏறி மிளிர்கின்றன. நினைவு மாறி இழிந்தால் எல்லா நிலைமைகளும் வேறாய் இழிந்து ஒழிந்து போகின்றன. நினைப்பு:ஒருவனை வளம் பெறச் செய்கின்றது; மறப்பு வறப்பாக்கி விடுகின்றது.

மறப்பினை மறதி என்றது. நினைப்பிற்கு மாறானது மறதியென வந்தது. சிறிய ஒரு மறதியால் வாழ்க்கையில் பெரிய பிழைகள் பல சேர்ந்து விடுமாதலால் அது கொடிய வழு, நெடிய பழி, கடிய துயர் என முடிவாகி நின்றது.

வழுக்கும் மறவியும் அயர்ப்பும் இவறலும்
மறப்பென் கிளவி மறலும் ஆகும். - பிங்கலந்தை

இழுக்கும் சோர்வும் புன்மையும் இகழ்ச்சியும்
வழுக்கும் கீழும் மறவியும் பொல்லாங்கும்
பொச்சாப்(பு) என்பதும் புகலுமப் பெயர்க்கே.

குற்றத்தின் பெயர்கள் இங்ஙனம் குறிக்கப்பட்டுள்ளன. மறப்பு மதிகேடாய் மூண்டு வாழ்வைச் சிதைத்துத் தாழ்வைச் செய்கின்றது. அதனால் அது குற்றம் என நேர்ந்தது.

உரிய காலத்தில் உரிய கருமத்தைக் கருதிச் செய்யாமல் மறந்திருப்பது மறதியாகின்றது ; ஆகவே கரும வரவு கழிந்து போகின்றது; சிறுமை யிழிவுகள் செறிந்து கொள்ளுகின்றன.

தன் கருமத்தில் கண்ணும் கருத்துமாயுள்ளவன் முன்னுக்கு வருகின்றான்; அங்ஙனம் முன் எண்ணிச் செய்யாது மறந்து நின்றவன் பின்பு இன்னலுழந்து இழிந்து வருந்துகின்றான்.

பல துயர்கள் அஞ்ச வரும் என்றது நெஞ்சில் மறவியுற்றவனது நிலை தெரிய வந்தது. சிறிய மறப்பு பெரிய காரியக் கேடுகளாய் நெடிய துயரங்களை விளைத்து விடுகின்றது.

வாழ்வின் சூழல்களைக் கவனமாய்க் கருதி முன்னும் பின்னும் விழிப்போடு எண்ணிச் செய்கின்றவன் யாண்டும் ஆண்மையாளனாய் மேன்மை பெறுகின்றான்; அங்ஙனம் செய்யாமல் அயர்ந்து நின்றவன் காரியக் கேடனாயிழிந்து பரிதாப நிலையை அடைகின்றான்.

முன்னுறக் காவா(து) இழுக்கியான் தன்பிழை
பின்னூ(று) இரங்கி விடும். 535 பொச்சாவாமை

முன்னறிந்து காவாமல் மறந்திருந்தவன் பின்பு தன் பிழையை நினைந்து வருந்தி அயர்வான் என்னும் இது இங்கே அறிந்து கொள்ள வுரியது. இரங்கி விடும் என்றது இடையூறுகள் எதிர்ந்த பொழுது "ஐயோ! அப்பொழுதே செய்யாது போனோமே!’ என்று பிற்பொழுது வெப்போடு வெய்துயிர்த்து நோதலை விழி எதிரே காட்டியது. மறதி மரண வேதனை யாகின்றது.

’மறந்து விட்டவன் இறந்து பட்டவன்’ என்னும் பழமொழியால் மறப்பு மீட்ட முடியாத கேட்டையுடையது என்பது தெளிவாம். வழுக்கியது இழுக்காய் இழிந்தே போகின்றது.

நினைப்பு விழிப்பாய் மேன்மை தருகின்றது.
மறப்பு இறப்பாய்க் கீழ்மை புரிகின்றது.

நினைவின் ஆற்றல் பெருகியுள்ளவர் உலக நிலையிலும் கலையறிவிலும் தலைமையாளராய் நிலவி நிற்கின்றனர்; அந்த ஆற்றல் குன்றினவர் யாண்டும் மங்கியுள்ளனர்.

நினைந்து நோக்கும் தன்மை இன்மையினாலேதான் ஆடு, மாடுகள் இழிந்த பிராணிகளாய்க் கழிந்து போயுள்ளன.

எதையும் விரைந்து மறந்து விடுகின்றவர் உயர்ந்த நிலைகளை அடைந்து கொள்ள முடியாது. ஞாபக சத்தி அறிவின் திருவாய் மருவியுள்ளது. அதனை உரிமையாக உடையவர் அதிசய மேதைகளாய்த் துதிகொண்டு திகழ்கின்றனர்.

Memory, the warder of the brain. - Macbeth

’நினைவு, அறிவின் பாதுகாவலன்' என இது குறித்துளது.

“Dear son of memory, great heir of fame.” - Milton

'நினைவின் அருமை மகன்; கீர்த்தியின் தனி உரிமையாளன்' என மில்டன் என்னும் ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியரைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கிறார்.

மனநிலையை மாண்புறுத்தி, மதியை வளர்த்து மனிதனை உயர்த்தி வருதலால், நினைவு இனிய பாக்கியமாய் இசைந்திருக்கிறது. அதனை இழந்துள்ள அளவு மனிதன் இழிந்து நிற்கின்றான்.

மறதி பெரும்பாலும் மடி, குடிகளால் நேர்கின்றது; செல்வக் களிப்பாலும், சிறுமைச் செழிப்பாலும் சேர்ந்து விடுகின்றது.

அகங்காரம், செருக்கு, களிப்பு, மமதைகளையுடையவர் நிலைமைகளை மறந்து நெடுங்களியராய் நீண்டு நிற்றலால் மறதி மமதையின் மனைவி என வந்தது. மதக் களிப்பை உருவகம் செய்து வந்திருக்கும் பகுதி கலையுலகில் சுவை மிகவுடையது; உணர்வு நலங்களைத் தெளிவாக ஊட்டியருளுகின்றது. அயலே வருகின்றது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

நெடிய செல்வ முடைமைகொண்டு நெஞ்சி டைக்க ளிப்பதே
வடிவ மாகும் யானு(ம்)அம் மயக்கை யேவ ளர்ப்பதாம்
கடிய தேவி மறதியும் கலந்த போதில் யாவரே
படியில் வானில் வெற்றியம் பதாகை காட்ட வல்லரே? 1

அஞ்சு சென்னி யுண்மையால் அரற்கி யானும் ஒப்பென
நெஞ்சில் உன்னி மெய்மதத்த நீர்மை யைக்கொ டல்லவோ
கஞ்ச மன்ன கண்ணன்நா பியுட்பி றந்த கடவுள்தான்
நஞ்ச முண்ட கண்டனாலோர் நான்மு கத்த னானதே. 2

ஆசு றாத செல்வமோ(டு) அடுத்த வசசி ராயுதன்
வாச நாற லங்கலைத்துர் வாசன் நல்க வாங்கிமுன்
வீசு றாயெ றிந்ததேறும் வேழ மாம தம்கொலோ
ஏசு றாத தன்மதம்கொல் எம்ம தம்கொல் என்பதே. 3 .

நிகரில் அற்பர் சிந்தையூடு நின்று தூயர் நெறியையும்
இகழு விப்பன்: என்னொடே இறந்து போமிவ் வுலகெனப்
புகலு விப்பன்; எவரொடும் புகுந்து போர்செய் விப்பனிவ்
அகலி டத்தை மேருவோடோர் அணுவும் ஆக்கு விப்பனே. 4

வந்த டர்த்தொர் சேதிராசன் மாலை அன்று வைததும்,
அந்த வத்து வைச்சுயோதன் ஆதி யோரி கழ்ந்ததும்,
நந்தி யைப்ப ழித்திலங்கை நாய கன்ந வின்றதும்,
முந்து சத்த முனிவ’ர்’தம்மை நகுடன் அன்று தைந்ததும்: 5

அன்று வேலை எற்றிமாலை அடுச மர்க்க ழைத்துநேர்
கன்று பேரி ரந்துகாள கண்டன் வெற்ப லைத்துமேல்
சென்று வாலி தன்னொடும் செருத்தி றம்பு ரிந்துசீர்
துன்று காயம் அன்றுமாய்தல் துந்து மிக்கு வந்ததும்; 6

பின்னும் இன்ன தன்மைசெய்த பேர னந்த கோடியான்
மன்னும் இந்த மண்ணகத்தும் வான கத்தும் அவையெலாம்
என்னை யன்றி யாவரே இயற்றி னோர்இ தன்றியென்
பன்னி என்னு மறதிமேன்மை எவரு ணர்ந்து பகர்வரே! 7

அறிவு கற்ற கல்விவாய்மை அன்பு முன்பு அடுத்தநல்
உறவு நட்பு ஒழுக்க’ம்’மேன்மை ஒருவர் செய்த உதவிசீர்
பிறவும் இன்ன செய்கைமற்ற(து) எவையும் நெஞ்சு பேர்வென
மறதி யுற்ற போதுயாவர் மனிதர் தேவர் மதியுளார்: 8

பிரக லாதன் மாயனோடு பின்பு போர்பு ரிந்ததும்
சரத வாழ்வு சுக்கிரீவர் தாமி யைந்து இராமர்பால்
வரவு தாம தித்ததும் துரோணர் நட்பும் வாய்மையும்
துருவ தேயன் மாற்றிவந்த போதி கழ்ந்து சொன்னதும்; 9

மகிழ்ந்த ணைந்து நாளைநின்கண் வருதும் என்ற வாய்மையைச்
சகுந்த லைக்கு மகிணனார் தவிர்ந்த யர்த்த தன்மையும்
புகுந்த(து) எத்தி றத்திலென்னோர் பூவை யாலு ளம்திகைத்(து)
இகந்த புத்தி யோரையின்னம் எண்ணில் எண்ணி லோர்களால். 10

மதுவி னுள்ளும் அவினியாதி யான பன்ம ருந்தினும்
கதுவு புல்லர் வாழ்வினும் கலந்து வைகி உலகெலாம்
பொதுவி னின்வ சத்தினில் பொருத்தும் எம்மை யாவரே
எதிர் புகுந்து வெல்லவல்லர்? என்றிவ் வாறி யம்பினான். 11 - மெய்ஞ்ஞான விளக்கம்

மோகன் என்னும் அரசனிடம் தனது ஆற்றலைக் குறித்துக் காட்டி மமதன் இவ்வாறு பேசியிருக்கிறான். தன் வலிமையையும், தன்னுடைய மனைவியாகிய மறதியின் நிலையையும் அவன் வியந்து கூறியதாகப் புனைந்து வந்துள்ள இந்தக் கவிகளில் பொதிந்துள்ள பொருள் நிலைகள் நினைந்து சிந்திக்கத் தக்கன.

மமதையாலும், மறதியினாலும் இழிந்து அழிந்தவர்களைத் தெளிவாக உணர்ந்து கொள்ள இவ்வுருவகம் எளிதாய் அமைந்துள்ளமையால் எவர்க்கும் உரிமையோடு உவகை புரிந்து வருகின்றது.

கடமைகளை மறந்துவிடின் கடையனாக நேருமாதலால் அந்த மடமையை மருவ விடாமல் மதியோடு வாழ வேண்டும்.

’நினைந்தவன் நிதி பெற்றான்; மறந்தவன் மதி கெட்டான்’ என்பது பழமொழி.

நினைப்பு மறப்புகளால் மாந்தர் அடையும் நிலைகளை இதனால் இனிது ஓர்ந்து கொள்ளலாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Oct-19, 5:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 89

மேலே