உள்ளம் உயர உயர்மனிதன் ஆகின்றான் - உறுதி, தருமதீபிகை 491

நேரிசை வெண்பா

உள்ளம் உயர உயர்மனிதன் ஆகின்றான்
பள்ளம் படியின் பழிபடிந்(து) - எள்ளலே
எவ்வழியும் சூழ இழிகின்றான் இந்நிலையின்
செவ்வி தெளிக தெரிந்து. 491

- உறுதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை: தன் உள்ளம் உயரின் மனிதன் உயர்ந்தவனாய்ச் சிறந்து விளங்குகிறான்; அது பள்ளமாய் இழிந்துபடின் அவன் எள்ளலாய் இழிந்து எவ்வழியும் செவ்வி சிதைந்து சிறுமையடைகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது, உள்ளத்தை உயர்த்துக என்கின்றது.

உயர்வு தாழ்வு, மேன்மை கீழ்மை, பெருமை, சிறுமை என்பன மனிதனுடைய செயல் இயல்களை மருவி வருகின்றன. புறத்தில் தோன்றுகின்ற பொலிவுகளுக்கும் மெலிவுகளுக்கும் மூல காரணங்கள்.அகத்தில் உள்ளன. உள்ளத்திலிருந்து விளைந்து வருகிற விளைவுகளின் படியே வெளியுலகில் மனிதன் விளங்கி நிற்கின்றான்.

மரத்தின் நீர்மை வித்தில் மறைந்திருத்தல் போல் மனிதன் சீர்மை மனத்தில் உறைந்திருக்கிறது. இனிய நினைவுகளை யுடையவன் தரும சீலனாய்த் தழைத்து நிலவுகின்றான்; கொடிய எண்ணங்களை உடையவன் படு பாதகனாய் நெடிதோங்கி நிற்கின்றான்.

சின்னவன், பெரியவன் என வெளியே இகழ்ந்து புகழ்ந்து பேசப்படுவன எல்லாம் உள்ளே கிளைத்த எண்ணங்களின் சிறுமை பெருமைகளின் வழி வந்தனவேயாம். அருவமான நினைவின்படியே மனிதன் உருவமாய் ஒளி செய்து உலாவுகின்றான். புனித நினைவுகளுடையதாய் மனம் இனிது அமையுமாயின் அந்த மனிதனிடம் தெய்வத் தேசுகள் எவ்வழியும் பெருகி எழுகின்றன. மனத்தின்படியே மனிதன் என்றமையால் அதன் அற்புத ஆற்றலை அறிந்து கொள்ளலாம்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மனமே புருடன் மற்றில்லை;
..மனத்தின் செயலே செயலாகும்:
கனசி வனத்தால் சீவனுமாம்:
..கவர்நிச் சயத்தால் புந்தியுமாம்;
சினவும் அபிமா னத்தாலே
..தீய அகங்கா ரமும்ஆகும்;
தனது விகற்ப சாலத்தால்
..தானே சகமாம் தனிமனமே, - ஞானவாசிட்டம்

மனத்தின் அதிசய நிலைகளை இஃது உணர்த்தியுள்ளது. பொருளமைதிகளைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும்.

புத்தி, சித்தம், அகங்காரம், சீவன் என மேவியுள்ள மனமே மனிதவுலகைப் படைத்தும் காத்தும் அழித்தும் வருகின்றது.

இத்தகைய மனத்தை ஒருவன் உத்தம நிலையில் பழக்கி நன்கு உயர்த்திக் கொண்டால் அவன் உயர்ந்த சீவன் முத்தனாய் ஒளி மிகப் பெறுகிறான்.

உள்ளம் உயர உயர மனிதன் ஆகின்றான் என்றது உண்மையான உயர்ச்சி நிலையை உய்த்துணர வந்தது.

கல்வி செல்வம் அதிகாரம் முதலியவற்றால் மனிதனுக்கு உளவாகின்ற உயர்வுகள் எல்லாம் அவன் உள்ளம் நல்லதாயில்லையாயின் பொள்ளல் குடத்து நீர்போல் எள்ளலாய் இழிந்தே போகும்; அது நல்லதாயின் யாவும் நலமாய்த் தேவினியல்போடு அவன் மேவி மிளிர்கின்றான்.

உள்ளம் உயர்தலாவது மேன்மையான எண்ணங்களால் பான்மை சுரந்து வருதல், பரந்த நோக்கம், சிறந்த ஊக்கம், விரிந்த அன்பு, திருந்திய பண்பு என்னுமிவை கனிந்து வருவதே உயர்ந்த உள்ளமாம்.

நல்ல நீர்மைகளால் இவ்வாறு உள்ளம் உயர்ந்த போது அந்த மனிதன் உத்தம புருடனாய் ஒளி பெற்று நிற்கின்றான்.

அதிசய சித்திகளும் பரம முத்திகளும் உள்ளத்தின் தன்மையாலே உளவாகின்றன. ஆதலால் ஞானிகளும் யோகிகளும் சித்த சாந்தியையே யாண்டும் முதன்மையாய்க் கருதி வருகின்றனர்.

’பாழான என்மனம் குவியஒரு தந்திரம்
பண்ணுவது உனக்கு அருமையோ?’

என இறைவனை நோக்கித் தாயுமானவர் இங்ஙனம் உருகியிருக்கிறார், மனம் குவிந்து வசமாயின் மனிதன் அதிசய மகான் ஆகின்றான். மன அமைதி இவ்வாறு மகிமையை விளைத்து வருதலால் அதனை உரிமையாக்கிக் கொள்ளப் பெரியோர்கள் அரிய தவம் புரிகின்றனர்.

ஒரு நிலையில் நில்லாமல் பல வழிகளிலும் தாவி ஒடுதலால் மனத்தை அடக்குவது செயற்கரிய செயலாய் எவரும் வியப்புற நின்றது. ஆன்ம யோகத்துக்கு இடையூறாய் மீறி மாறுபடும் பொழுது மேலோர் அதனைச் சீறி அடக்குகின்றனர்.

எண்சீர் விருத்தம்
(காய் 3 மா அரையடிக்கு)

மனமெனுமோர் பேய்க்குரங்கு மடப்பயலே நீதான்
..மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்!
இனமுறயென் சொல்வழியே இருத்தியெனின் சுகமாய்
..இருந்திடுநீ, என்சொல்வழி ஏற்றிலையா னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டான்: உலகம்
..சிரிக்கவுனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவிலெனை அறியாயோ யாரெனஇங் கிருந்தாய்
..ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே. - அருட்பா

இராமலிங்க சுவாமிகள் மனத்தோடு போராடியிருக்கும் நிலையை இது நேரே காட்டியிருக்கிறது பேய்க்குரங்கு என்று திட்டியது அதன்மேல் உள்ள எரிச்சலை விளக்கியது.

'எனது மனம் ஆகிய குரங்கு கொடிய மோகக் காட்டில் எப்பொழுதும் ஓடித் திரிகிறது; ஆசை என்னும் நெடிய மரக்கிளைகளில் கடிது தாவுகின்றது; பருவ மங்கையருடைய கொங்கைகள் ஆகிய மலைகளில் ஏறிக் கூத்தாடுகின்றது: கையில் ஓடு ஏந்திப் பிச்சை எடுக்கிற ஓ பரமசிவமே! உன் தொழிலுக்கு இந்தக் குரங்கு நல்ல உபயோகமாயிருக்கும்: இதனைப் பிடித்துக் கொண்டு போ' என ஆதிசங்கராசிரியர், சிவானந்தலகரி என்னும் வட மொழி நூலில் இவ்வாறு பாடியிருக்கிறார். மே ஹ்ருதய கபிம் அத்யந்த சபலம்' என் மனக்குரங்கு மிகவும் சபலமுடையது” என அந்த மகானே கூறியிருத்தலால் எத்தகைய யோகிகளையும் அலைத்து நிலைகுலைத்து நிற்கும் அதன் நிலை தெரியலாகும்.

பரமாத்தும சித்தியை மருவுகின்றவர் தம் சித்தத்தை எப்படிக் கருதி அடக்கி வருகின்றனர் என்னும் உறுதி நிலைகளை இவ்வுரைகளால் உணர்ந்து கொள்ளலாம்.

”உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்!”

முருகப் பெருமானை நோக்கி வள்ளலார் இவ்வாறு கேட்டிருக்கிறார். தம் உள்ளத்தை அடக்கினவர் எல்லாவற்றையும் அடக்கியாள வல்ல பெருமையை உரிமையாகப் பெற்றுக் கொள்ளுகின்றனர்.

நேரிசை வெண்பா

உள்ளத்தை வென்றான் உலகத்தை வென்றுகொண்டான்
கள்ளத் ததன்வழியே காலிழிந்தான் - பள்ளத்தே
பாயுநீர் போலப் பழிமயலுள் பாய்ந்தழுந்தி
மாயுமே யாவும் மருண்டு.

எல்லாரையும் தன் வழிப்படுத்தி யாண்டும் தலை விரித்து ஓடுகின்ற மனத்தை அடக்குவது அதிசயமாதலால் அந்த அற்புத வெற்றியாளன் அகிலத்தையும் வென்றவன் ஆகின்றான், அங்ஙனமின்றி அதன் வழியே போகின்றவன் உயர்நலங்களை இழந்து அவன் இழித்தவனாய் அழிந்து படுகின்றான்.

தூய்மையான நல்ல நினைவுகளையே பழகிவரின் அந்த உள்ளம் அரிய பேரின்ப நிலைகளை அருளுகின்றது; அதனையுடையவன் பெரிய மனிதனாய் இருமையும் பெருமையுறுகின்றான். உயிர்க்கு உறுதி நலன் உணர்ந்து உய்தி காண்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Oct-19, 7:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 307

சிறந்த கட்டுரைகள்

மேலே