புரிந்திட வேண்டுகிறேன்

வாழைமரங்கள் வைத்து
வாயிலில் முகப்பமைத்து
முக்கனிகள் இணைந்திட
முளைப்பாரித் தொங்கிட
பூகோளம் வடிவத்தில்
பூக்கோலம் அலங்கரிக்க
மின்னலாய்ப் பளிச்சிட
மின்விளக்கு ஒளிர்ந்திட
இல்லமதுவும் மிளிர்ந்திட
இதயங்கள் குளிர்ந்திட
விதிமுறைகள் மீறாது
விழாக்கள் கொண்டாடி
மகிழ்ந்திடும் மனங்கள்
மண்ணில் குறைந்தது !

கண்ணில் தெரிகிறது
கணநேரம் காட்சிகளாய்
வரலாற்றில் படித்ததும்
வாழ்க்கையில் பார்த்ததும்
உள்ளத்தில் பதிவுகளாக
உருமாறா வடிவங்களாக !

வருத்தமும் இதயத்தில்
வடுக்களாய் மாறுகிறது
தேய்மானம் கூடுகிறது
தேய்ந்திடும் இனப்பற்றால்
குறைகிறது மொழிப்பற்று
நிறைகிறது மாற்றுமொழி
புரிந்திட வேண்டுகிறேன்
புறப்பகட்டு செய்வோரை !

பழனி குமார்
07.10.2019

எழுதியவர் : பழனி குமார் (7-Oct-19, 8:30 pm)
பார்வை : 732

மேலே