அறிவுரையாளர்கள்

====================
யாரைக் கண்டாலும்
அறிவுரை கூறும் வியாதிக்காரர்கள்
வியாபித்த உலகம் இது
*
தெருவில் மின்சாரத்
தூண்களைக் கண்டதும்
காலைத் தூக்கும் ஞமலிகள்போல்
யாராவது கிடைத்தால் போதும்
சிலர் தங்கள் அறிவுரைக் கால்களைத்
தூக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
**
யார் யாருடைய அறிவுரைகளையோ
எடுத்துவந்து தன்னுடைய
சொந்த அறிவுரையாய்ச்
சொல்லிக்கொள்ளும் வல்லவர்களின்
தலையைக் கண்டால் போதும்
ஓட்டுக்குள் தலையை இழுத்துக்கொள்ளும்
ஆமையைப்போல் மறைந்து கொள்ள
வேண்டி வந்துவிடுகிறது
**


எவருக்கும் அறிவுரை கூறமுதல்
கூறும் தகுதி உனக்கு இருக்கிறதா
என்று எண்ணிப்பார்.
என்று தொடங்கி
அறிவுரை கூறுவது சுலபம்
அதன்படி நடப்பதுதான் சிரமம் என
அறுக்கத் தொடங்கும் ரம்பங்களின்
அறிவுரையைக் கேட்டால் இருக்கும்
சொற்ப அறிவும் மழுங்கத் தொடங்குகிறது
***

யாருடைய அறிவுரையையும் கேட்டு
நடக்காத நாம் ஏன்
பிறருக்கு அறிவுரை கூறவேண்டும்?
என்ற அறிவுரையை கூறி
அதனை ஏற்று நடக்கச் சொல்லும்
அறிவுரைக்காரர்கள் போதும்
கண்ணீர் புகைகுண்டு பட்டதுபோல்
போராட்டக்காரர்கள் தலைதெறிக்க
ஓடி மறைவார்கள்
*
ஒவ்வொரு காவல் நிலையத்திலும்
ஒரு அறிவுரைக்காரரை
நிறுத்தி வையுங்கள்
குற்றம் குறையும்
*
ஒவ்வொரு பதிவுத் திருமண
அலுவலகத்திலும் ஒரு
அறிவுரைக்காரரை நிறுத்தி விடுங்கள்
ஓடிப்போக நினைக்கும்
இளசுகளே இல்லாமல் போவார்கள்
**
அறிவுரைக் கூறக்கூடாது என்பதையும்
அறிவுரையாய் கூறும்
அறிவு ஜீவிகள் அணுகுண்டையும்
மழுங்கச் செய்யும் அற்புத ஜந்துகள் ..
**
அங்கீகாரமின்றி ஊருக்குள் திரியும்
இவர்களிடம் இருந்து தப்பிக்கொள்ள
என்னிடம் அறிவுரை ஏதுமில்லை
என்றாலும்
வாராத மழைக்காக கைகளில்
எடுத்துச் செல்லும் குடையைப்போன்று
எப்போதும் அவதானம் என்றக்
குடையை அருகே வைத்துக் கொள்வோம்
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Oct-19, 2:24 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 46

மேலே