முடியரசர் புகழ் வாழி

கொள்கைநெறி பிறழாத தன்மானத் தங்கம்
கொடுமைகளைக் கொதித்தெதிர்க்கும் பகுத்தறிவுச் சிங்கம் !
எள்ளளவும் புகழுக்கு மயங்காத கோமான்
ஏழ்மைநிலை யுற்றபோதும் மண்டியிடாச் சீமான் !
வெள்ளமெனப் பெருக்கெடுக்கும் பைந்தமிழின் சுவைஞன்
வீறுகவி யரசரென்ற பெரும்புரட்சிக் கவிஞன் !
கள்ளனைய சுவைகூட்டும் மரபுகவிச் சுரங்கம்
கற்கண்டு கவிக்கேட்டால் மயங்கிநிற்கும் அரங்கம் !!

சொல்லொன்று செயல்வேறாய் மாற்றமேது மின்றிச்
சொன்னவண்ணம் இறுதிவரைச் செயல்பட்ட தீரன் !
பொல்லாங்கு கண்டுவிட்டால் எரிமலையாய் வெடித்துப்
பொசுக்கிவிடத் தான்துணிந்த பெரியாரின் நேயன் !
பல்கலையின் வித்தகனாய் இனமானம் காத்த
பாவேந்தர் பரம்பரையின் பாசமிகு சீடன் !
வில்லாகப் புறப்பட்டுக் கனல்கவிகள் பாய்ச்சி
வீரமுழக் கஞ்செய்த காரைநகர் வாசன் !!

கத்தியின்றிப் போராடக் கையிற்கோ லேந்திக்
கவிதைகளால் சமத்துவத்தைப் போதித்த ஞானி !
எத்திக்கும் தமிழ்முழங்கப் பெரும்பாடு பட்ட
ஈடிலாப் பாக்கடலின் ஒப்பற்ற தோணி !
தத்தளித்த குமுகாய அவலத்தைத் திருத்திச்
சாதிமத வேறுபாட்டை நிமிர்த்திவிட்ட ஏணி !
முத்தமிழே மூச்சாகப் பேச்சாக வாழ்ந்த
முடியரசன் புகழென்றும் செந்தமிழ்போல் வாழி !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Oct-19, 11:52 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 11

மேலே