மருத்துவ வெண்பா - எருமைப் பால் - பாடல் 7

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக் களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர் களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

எருமைப் பால் - நேரிசை வெண்பா :

வாதத் திமிரை வரவழைக்கும் புத்தியினற்
போதத் தெளிவைநனி போக்குங்காண் – கோதற்றே
அங்கத் துறுமருந்தை யன்றே முறித்துவிடும்
பங்கத் துறுமேதிப் பால்.

குணம்:

எருமைப் பால் திமிர் வாயுவை வரவழைக்கும். தெளிந்த புத்திக் கூர்மையை மிகவும் நீக்கும். உடல் நோய்க்குக் கொடுத்த நல்ல மருந்தின் குணத்தை அன்றே முறித்து கெடுதல் உண்டு பண்ணும்.

உபயோகிக்கும் முறை:

எருமைப் பாலைக் காய்ச்சிக் காப்பி, தேயிலைப் பானங்களில் சேர்த்து உட்கொள்ள நல்ல உணவாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Oct-19, 9:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே