ஏமாற்றக் கவிதை - 2

ஏமாற்றக் கவிதை - 2

புயல் வந்து போனதுபோல்
நான் பாதிக்கப் பட்டு கிடக்கிறேன்..
நீ மட்டுமே வந்து போனாய்
எனில் எத்தனை வலி கொடுத்திருப்பாய்?

பூமியதிர்ச்சி வந்தது போல்
நான் பிளவு பட்டு கிடக்கிறேன்..
உன் தடமே என் வீட்டில்
எனில் எத்தனை பயங்கரம் நீயானாய்?

பேய் அடித்த மானிடனாய்
நான் உளறிய படியே இருக்கிறேன்..
இதயம் இறங்கிய உந்தன் சொல்லை
எப்படியடி நீ சுமந்து வந்தாய்?

குண்டு போடப்பட்ட குட்டிநாடாய்
நான் சிதைந்து போய் இருக்கிறேன்..
கொஞ்சிப் பேசிய உன் வாயால்
நஞ்சை எப்படி கக்கிச் சென்றாய்?

இடி இறங்கிய குடிசைவீடாய்
நான் எரிந்த படியே இருக்கிறேன்..
மதி நிறைந்தவள் நீ தானே
எங்கே தீஞ்சொல்லையும் சொல்லக் கற்றாய்?

சுனாமி எழுப்பும் பேரலையாய்
என்னை மூழ்கிச் செல்கிறது உன்பிரிவு..
சிரித்துப் பேசிட்ட பூஞ்சோலை எனைநீ
அழுகும் படியேன் வரம் தந்தாய்?

உலக இன்னல்கள் அத்தனையும்
எனைச் சுவீகாரம் செய்ததாய் தோணுகிறது..
அத்தனை துன்பம் தரும் சொல்லை
உன் மெல்லிதயம் எப்படி வைத்திருந்தது?

"மறந்திடு" என்று மீண்டும்வந்து
தீ கொட்டிப் போகாதே என்அன்பே..
மரத்துப் போகவில்லை என் இதயம்
துடிக்கும்வரை காத்திருப்பேன் மனம்மாறி வந்துவிடு..

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (16-Oct-19, 6:03 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 285

மேலே