மறவாமல் நின்று மதித்துன்னைப் பேணின் பிறவாத பேரின்பம் எய்தும் - மறதி, தருமதீபிகை 485

நேரிசை வெண்பா

மறவாமல் நின்று மதித்துன்னைப் பேணின்
இறவாமல் என்றும் இனிதாய்ப் - பிறவாத
பேரின்பம் எய்தும்; பெருமை மிகப்பெற்றுச்
சீரின்பம் காண்பாய் சிறந்து. 485

- மறதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உனது உண்மை நிலையை மறந்து விடாமல் உணர்ந்து பேணி உரிமை புரிந்துவரின் என்றும் நிலையான பெருமையும் தலையான பேரின்பமும் நேரே காண்பாய் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நினைப்பது, மதிப்பது, பேணுவது என்னும் இவை மனத்தின் செயல்களாய் மருவியுள்ளன. மனம், வாய், தேகம் ஆகிய இம்மூன்றின் வழியாகச் செயல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. கரணங்கள் சலித்து வருதலால் கருமங்கள் விளைந்து வருகின்றன. பழுதான நினைவுகள் பழி பாவங்களாய் விளைகின்றன; புனிதமான எண்ணங்கள் புகழ் புண்ணியங்களாய் மிளிர்கின்றன. தூய நினைவுகள் அமுத பானங்களாய் இன்பம் தருகின்றன; தீய சிந்தனைகள் நஞ்சுத் துளிகளாய் நாசம் புரிகின்றன. எங்கும் பொல்லாத சூழல்களே பெருகியுள்ள இவ்வுலகில் நல்ல சிந்தனைகளில் பழகி வருபவன் நலம் பல காண்கின்றான்.

மனிதன் எல்லாவற்றையும் அறிய விரும்புகிறான்; தன்னை அறியாது போகின்றான்; வெளி நோக்கில் களி மிகுத்துத் திரியும் வரையும் உள்நோக்கில் ஒளியிழந்து நிற்கின்றான்.

உலக மயக்குகளில் துள்ளி ஒடுகின்ற மனத்தை மெல்ல மெல்ல நிறுத்தித் தன்னுள்ளே எவன் உள்ளி நோக்குகின்றானோ அவன் பேரின்ப வெள்ளத்தை அள்ளி நுகரும் பாக்கியவான் ஆகின்றான். உண்மை தெரிய நன்மை பெருகுகின்றது.

’மதித்து உன்னைப் பேணின்’ என்றது தன்னை இன்னானென்று இனிது தெரிந்து உரிமையோடு பேணி வருதலைக் காணியாகக் காட்டியது. காணவுரியதைக் காணாதவன் வீணனாகின்றான்.

ஆன்ம நிலையை ’உன்னை’ என்றது. அதன் பான்மை மேன்மைகளை உன்னியுணரின் உண்மை தெளிந்து உய்தி காண்கின்றான்.

சீவான்மா, பரமான்வின் திவ்விய ஒளியாதலால் அது எவ்வழியும் அதிசய ஆற்றல்களுடையது; அதன் அற்புத நிலையை உணர்ந்து தெளிந்தவன் நித்திய முத்தன் ஆகின்றான்; உணராமல் ஒழிந்தவன் இழிந்த துயர்களில் விழுக்து ஈனமாய் உழல்கின்றான்.

’தன்னை அறிவதே தத்துவ ஞானம் ஆகும்’ தனது உண்மை நிலையை உணர்ந்த பொழுது புன்மை மயல்கள் பொன்றி ஒழிகின்றன. தான் என்னும் சொல்லுக்கு ஆன்மாவே உரிமைப் பொருளாயுள்ளது. அந்த அருமைப் பொருளை மறந்திருப்பது பெரிய மருளாய் நிற்கின்றது.

நித்தியமான பரிசுத்த சோதி என்று தன்னை உணர்த்து ஆன்ம சிந்தனை செய்துவரின் அது பேரானந்த போகமாய்ப் பொங்கி வருகின்றது. இந்தத் தத்துவ நிலையில் உள்ளவரே உத்தம ஞானிகளாய் உயர்ந்து திகழ்கின்றனர்.

தன்னை மறத்திருப்பதில் இன்னல்களும் இழிவுகளும் நிறைந்திருக்கின்றன. மறப்பு கொடிய கேடாய் மூண்டு நெடிய பிறவிகளுக்கு நிலையாய் முடிகின்றது. அவ்வாறு மறந்து மடிந்து போகாமல் நினைந்து தெளிந்தவர் நிரதிசய இன்பத்தை உரிமை செய்து கொள்ளுகின்றனர்.

கட்டளைக் கலித்துறை

நானென்(று) ஒருமுதல் உண்டென்ற நான்தலை நாணஎன்னுள்
தானென்(று) ஒருமுதல் பூரண மாகத் தலைப்பட்டொப்பில்
ஆனந்தந் தந்தென் அறிவையெல் லாமுண்(டு) அவசநல்கி
மோனந் தனைவிளைத் தால்இனி யாது மொழிகுவதே. 14

மறக்கின்ற தன்மை இறத்தலொப் பாகும் மனமதொன்றில்
பிறக்கின்ற தன்மை பிறத்தலொப் பாகும்இப் பேய்ப்பிறவி
இருக்கின்ற எல்லைக்(கு) அளவில்லை யேஇந்தச் சன்மஅல்லல்
துறக்கின்ற நாளெந்த நாள்பர மேநின் தொழும்பனுக்கே. 47

நீயென நானென வேறில்லை யென்னும் நினைவருளத்
தாயென மோன குருவாகி வந்து தடுத்தடிமைச்
சேயெனக் காத்தனை யேபர மேநின் திருவருளுக்(கு)
கேயென்ன செய்யுங்கைம் மாறுள தோசுத்த ஏழையனே. 58 - 27. பாயப்புலி, தாயுமானவர்

தாயுமானவ சுவாமிகளுடைய ஆன்ம அனுபவங்களை இவ்வுரைகள் உணர்த்தி நிற்கின்றன. தாம் பெற்ற பேரின்ப நுகர்வுகள் ஞான சீலர்கள் வாய் மொழிகளில் வான அமுதங்களாய் வெளி வந்துள்ளன. பெரிய மகான்களுடைய உரைகள் அரிய பயன்களை அருளுகின்றன; அவை உரிமையோடு கருதி யுணர வுரியன. ஆன்ம வுணர்வு ஆனந்த நிலையமாகின்றது.

தூய பரமனுடைய சேய் நீ; மாய வழிகளில் வழுவி வந்துள்ளாய்; உனது பழமையை நினைந்து கிழமையை உணர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Oct-19, 7:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே