தேசுற ஊக்கித் திறல்புரிந்து ஞாலஞ்சீர் பேச முயலுதல் நன்று - உறுதி, தருமதீபிகை 495

நேரிசை வெண்பா

தேசுற ஊக்கித் திறல்புரிந்து ஞாலஞ்சீர்
பேச முயலாது பேதையராய் - மாசு
படிந்து மடிந்துண்டு பாழாய்ப் பலபேர்
முடிந்து கழிகின்றார் மூண்டு. 495

- உறுதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உறுதியுடன் ஊக்கி அரிய காரியங்களை ஆற்றி உலகம் புகழ்ந்து போற்றும்படி உயர்ந்து நில்லாமல் இழிவாய்ச் சோம்பி நின்று பலர் அழிந்து கழிந்து போகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பிறந்த பிறவிக்கு ஏதாவது ஒரு சிறந்த பயனை மனிதன் அடைந்துகொள்ள வேண்டும்; அங்ஙனம் இல்லையாயின் அப்பிறப்பு எள்ளலுடையதாய் இழிந்து படுகின்றது. தேசு - ஒளி, கீர்த்தி, பெருமை, வீரம்.

உள்ளம் ஊக்கி உறுதியாய் முயன்று வருகின்றவரே உயர்ந்த நலங்களை அடைந்து வருகின்றார். ’உயர்ச்சிகள் எல்லாம் முயற்சிகளில் உள்ளன’ என்னும் முதுமொழி அதி மருமமான பொருளை உள்ளே மருவியுளது. உயிர் உணர்ச்சியாய் ஒளி பெற்றிருத்தலால் உறுதியான ஆண்மை வெளியே தொழிலாய் இயங்கி அரிய பல நலன்களை விளைத்தருளுகின்றது. உள்ளிருந்து இயக்கும் அதிசய சக்தி உன்னத கதிகளில் உயர்த்தி விடுகின்றது.

உயர்நலம் கருதி எழுகின்ற ஊக்கம் ஒருவனிடம் இல்லையாயின் அவன் இயல் சிதைந்து இழிந்து மயலுழந்து படுகின்றான்.

நேரிசை வெண்பா

ஊக்கி முயலார் உயிரிருந்தும் இல்லாராய்
ஆக்கம் இழந்தே அலமருவார் - ஊக்கம்
உயிரின் ஒளியாய் உளதால் அதனின்
உயர்வு தெளிக உணர்ந்து.

என்னும் இது ஈண்டு உன்னி உணரவுரியது.

மனிதன் எண்ணி முயலும் அளவே கண்ணியம் பெறுகிறான். நெய் ஏறிய திரி விளக்குப் போல் மெய்யில் உறுதி ஏறிய பொழுது அரிய மகிமையாய் இனிய ஒளி செய்து திகழ்கின்றான்.

‘தேசு உற ஊக்கித் திறல் புரிந்து’ என்றது ஆண்மகனாய்ப் பிறந்தவன் ஆற்ற வேண்டிய கடமையை ஏற்றமாகக் காட்டியருளியது. செல்வம், கல்வி, கொடை, வீரம் முதலிய உயர்நலங்கள் எல்லாம் உறுதியின் அடியாகவே உரம் பெற்று வளர்ந்து வருகின்றன. அவ்வரவால் பேரும் சீரும் பெருகி எழுகின்றன. அத்தகைய சீர்த்தி வளர வாழ்வதே வாழ்வாம். ’காத வழி பேரில்லான் கழுதை’ என்னும் பழமொழியால் புகழ் இல்லாத வாழ்வு எவ்வளவு இழிவுடையது என்பது எளிது தெளிவாம்.

ஒருவனுடைய எல்லா மேன்மைகளுக்கும் அவனது உள்ளத்தின் உறுதியே ஏதுவாயிருத்தலால் உயர்ந்தோர் அதனை வியந்து போற்றுகின்றனர்.

கருதி முயலும் உறுதியால் அரிய பெரிய செல்வங்கள் எல்லாம் எளிதே வந்து சேர்கின்றன. ஆகவே அஃது ஓர் அற்புத சத்தியாய்ப் பொற்பு மிகுந்துள்ளது. இம்மை மறுமைகளின் நன்மைகள் யாவும் அதனால் சித்திக்கின்றன. நெஞ்சுறுதியாளனிடம் எவையும் தஞ்சமாய் வந்தடைகின்றன.

நேரிசை வெண்பா

உறுதி ஒருவன் உழையுறின் யாவும்
பெறுதி எனவே பெருமை - அறுதியாய்
வந்து சுரந்தருளும் வையமொடு வானுமே
முந்து புரியும் முதல்.

இதனை நன்கு சிந்தனை செய்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Oct-19, 7:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே