காதல் கவிதை

காதல் தெய்வீகமானது
தெய்வங்கள் போலவே
மௌனங்கள் உதிர்க்கும் வேளையில்
மலரே நீயும் இதழ்கள் விரிக்கிறாய்

காலங்கள் நடைபோட்ட தூரத்தை
நம் கால்கள் அளந்து பார்க்க வேண்டுமே

காமம் காற்றில் ஊஞ்சலாடும் இந்நேரம்
நம் கன்னங்கள் உரசிக்கொள்ளும் வேகத்தில்
கலைந்த கனவுகளை மீட்டெடுப்போம் நாளுமே

தெளிவான எண்ணத்தில் கல்லெறிந்த கன்னியே
காதல் இன்னும் கனிய வேண்டுமா
கண்ணடிகள் இன்னும் படவும் வேண்டுமா

நீ சிரிப்பை மறைக்க முயற்சிசெய்யும் போதெல்லாம்
நான் சிலிர்த்து நிற்கிறேன் எதிரில்தானே

இலவம்பஞ்சு மனதில் நீயும் எடையை
கூட்டி குறைத்து காட்சிப்பிழை
ஏற்படுத்துதல் நியாயம் ஆகுமோ
சொல்லடி என் தென்றலே

வழியில் எல்லாம் மலர்க்காடுதான்
காம்பாக நான் ஏந்திக்கொள்ளுவேன்
கவிதையாக தாங்கிக்கொள்ளுவேன்
என் புனைவுகளில் புதுஉலகமே நீதானடி

நிறம் மாறினாலும் நிழல் கூடினாலும்
மனம் என்னும் பூக்களோடு
மனம் விட்டுப்பேசும் வேர்கள் நான்தானடி
என் உயிர் உள்ளபோதே
என்னை சேர்ந்திடு என்கண்மணி
காதலாய் தொடருவோம் நாமே!

எழுதியவர் : மேகலை (16-Oct-19, 9:12 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 116

மேலே