காத்திருக்கும் ரோசா

=====================
ஒரு கெட்ட வார்த்தையை
நல்ல விதமாய் உபயோகப்படுத்தும்
உதடுகளில் நின்று
பனித்துளியாய் உதிர்ந்துவிடுகிறது
ஒரு ஆனந்தம்.
*
ஒரு நல்ல வார்த்தையை
கெட்ட விதமாய் உபயோகிக்கும்
உதடுகளிலிருந்து
பூகம்பமாய் உடைத்துவிடுகிறது
சில இதயம்,
**
சுயநலத்துக்காக கட்டப்பட்ட
சந்தர்ப்பவாத வேலிகளில்
வார்த்தைகள் பச்சோந்தியாய்
நகர்ந்தபடியே செல்கிறது
**
விட்டுக்கொடுத்தல் என்னும்
இலகுத்தன்மையை அணிந்து கொள்கின்ற
வார்த்தை என்கின்ற பெண்
எல்லோராலும் ஈர்க்கப்படுகிறாள்
**
வாளேந்திய வீரனைக் கொல்ல
ஒரு சுடுவார்த்தைப்
போதுமானதாக இருக்கிறது,
*
துப்பாக்கியின் சூடு
ஒருநொடிக்குள் கொல்ல
வார்த்தைகளோ அதை நின்று
நிறுத்தி ஆறுதலாய் செய்கின்றன
**
கோப எரிமலை அனல்பட்டு
உறவுக்கொடிகளின் வேர்கள்
கருகுவதை வேடிக்கைப் பார்க்கும்
வார்த்தைகளின் கண்களில் எப்போதும்
ஒரு கொடூரம் குடிகொண்டபடி
கும்மாளம் போடுகிறது
**
ஒலிவாங்கி தண்டவாளங்களில்
பயணிக்கும் வாக்குறுதி ரயில்கள்
செவி நிலையங்களில்
தரிக்கும் நேரங்களில்
நம்பிக்கைச் சீட்டுவாங்கி
ஏமாற்றப் பெட்டிகளில்
ஏறி அமர்ந்துகொள்ளும்
எங்கள் வாக்குகள்,
வழிதெரியாத பயணிக்கு
குட்டுத்தனத்தைப் பரிசளிக்கின்றன
*
திருவாய் மலர்ந்து பொழியும்
வார்த்தைத் துளிகளினால்
வாழ்க்கைக் கொடியின்
மகிழ்ச்சிப் பூக்கள் மலர்ந்து
மணம்வீச ஆரம்பிக்கிறது
**
வார்த்தைகளால் ஒரு
பூந்தோட்டம் செய்யக் கற்றுகொள்ளும்
அவசியத்தை உணர்ந்துகொள்கின்ற
எல்லோரும் இதயத்தால்
பேசத் தொடங்கிவிடுகிறார்கள்
**
வார்த்தைகளால்
பூகம்பம் வெடிக்க
ஆசை கொள்கின்ற எல்லோரும்
உதடசைத்துப் பேசுகிறார்கள்.
*
வாருங்கள்
எங்கள் மனவாசலுக்கு
வெளியே ஒரு பாதணியாய்க் கிடக்கும்
நல்லெண்ணங்களை அணிந்து கொண்டு
பூகம்பங்களை பூக்களுடன் பேசவைக்கும்
புனித வார்த்தைகளைத் தேடிப் புறப்படுவோம்
**
முள் கொண்ட செடியில்
நமக்காக ஒரு ரோசாவாய்
காத்திருக்கக் கூடும் அவை>
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Oct-19, 3:07 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 96

மேலே