மனைவியும் காலணியும்

===========================
வெளியே சென்ற நீ வரும்வரை
வாசலில் காத்திருக்கும் மனைவி..
உள்ளே சென்ற நீ வரும்வரை
வாசலில் காத்திருக்கும் பாதணி..
இரண்டும் நீயே சரணமென்று
எப்போதும் உன் காலடியில்..
**
ஒன்றை அணைத்தும்
மற்றொன்றை அணிந்தும் நடக்கும்
உன் பாதையில் உன்னை
ஒன்று சொல் குத்தாமலும்
ஒன்று முள் குத்தாமலும் காக்கின்றன
**
காலைக் கடித்து புண் உண்டாக்கா
காலணி ஒரு பாதையாகவும்
கையைக் கடிக்கும் செலவீனங்களை
ஏற்படுத்தா மனைவி
ஒரு சீதையாகவும் அமைந்துவிடுகையில்
வாழ்க்கை ஒரு காதையாகிறது உனக்கு.
**
தன்னலம் பாராமல்
உனக்காக உழைத்துத் தேய்வதில்
மனைவியை மிஞ்சிவிட காலணிக்கும்
காலணியை மிஞ்சிவிட மனைவிக்கும்
எப்போது நிகழ்கிறது ஒரு போட்டி.
*
வாரறுந்து வழியில் தவிக்கவிடும்
காலணியைபோல சில மனைவியரும்
வாழ்வறுத்துக் குழியில் தள்ளிவிடும்
மனைவியைப்போல சில காலணிகளும்
ஒன்றுகொன்று குறைச்சலில்லை
சிலர் வாழ்வில்.
*
தேய்ந்து வாரறுந்து தெருவில் தவிக்கவிடும்
காலணிக்குப் பதிலாக இன்னொன்று வாங்கி
அணிந்துகொள்ளும் உனக்கு
ஓய்ந்து உடலிளைத்து உருவில் பொழிவிழந்தும்
உனக்கென உருகும் நல்ல மனைவியைவிட்டு
இன்னொருத்தி என்பவள் நெருப்பு
*
மனைவியை காலணியைபோல
மனவாசலுக்கு வெளியே கழற்றிவைக்காமலும்
காலணியை மனைவியைபோல
மனைவாசலுக்கு உள்ளே அணிந்துவராமலும்
பார்த்துக் கொள்.
உன் வாழ்வில் கை / கால்
கொடுக்க மறுப்பதில்லை இரண்டும்
**
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Oct-19, 2:04 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 89

மேலே