கூடு பிரிந்தபொழுது பின்வருவ தென்னோ தெரிந்து தெளிக திறம் - உறுதி, தருமதீபிகை 499

நேரிசை வெண்பா

வீடுநிலம் மாடுமனை வேண்டுமென வேணவா
வோடு வருந்தி உழல்கின்றாய் - கூடு
பிரிந்தபொழு(து) உன்னோடு பின்வருவ தென்னோ
தெரிந்து தெளிக திறம். 499

- உறுதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனைவி, வீடு, மாடு, நிலம் முதலாகப் பலவகையான இன்ப நலங்களைப் பெரிதும் விரும்பிப் பேராசையோடு அலைகின்றாய்; உயிர் பிரிந்து போகும் பொழுது உன்னோடு உடன் வருவது என்னே? அதனை உணர்ந்து தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உடல், உயிர் இரண்டும் ஒருமையாய் மருவி உருவமாய் வெளியே உலாவி வருகின்றன. இளமை, மூப்பு முதலிய நிலைகளை அடைந்து உடல் விரைந்து அழிகின்றது. உயிர் என்றும் யாண்டும் நித்தியமாய் நிலைத்து நிற்கிறது.

அழிந்தொழிந்து போகின்ற உடலை விழைந்து பேணுவதும், அழியாத உயிர்க்கு உரிய ஆனந்த நிலையை மறந்து விடுவதும் மாய மயக்கமாய் விளைந்திருக்கின்றன.

உடலை வளர்த்து மினுக்கி உல்லாசமாய் வாழும் பொருட்டு மனிதன் பல வசதிகளைக் தேடிப் படாத பாடுகள் படுகிறான். தான் நாடிய பொருள்கள் கைகூடியவுடனே மேலும் மேலும் ஆசை பெருகி எழுகிறது. அளவு மீறி எழுந்த பொழுது அது பேராசை ஆகிறது; ஆகவே ஆன்ம நிலையை மறந்து அவல நிலைகளில் விரைந்து எல்லையில்லாத அல்லல்களில் எவரையும் அது இழிந்துபடச் செய்கின்றது.

தேக யாத்திரைக்கு வேண்டிய போகங்களை விளைத்துக் கொண்டு ஆன்ம நலனைக் கருதி ஒழுகுபவன் மேன்மையான நிலைகளை மேவி மகிழ்கிறான். அவ்வாறு கருதியுணராதவன் வெவ்விய துயரங்களில் அழுந்தி எவ்வழியும் இழிவாய்க் கழிந்து உழலுகிறான். உண்மையான உறுதிநலனை மறந்து புன்மைநிலைகளி்ல் புலையாடி ஓடுதலால் புல்லிய ஆசை மனிதனை நிலை குலைத்து நீசப்படுத்தி விடுகிறது. அவல ஆவல்கள் கவலைகளாய்க் கனிந்து வருகின்றன.

’வேணவா’ என்றது வேட்கை, அவா என்னும் இரு மொழிகளும் மருவி ஒரு பெயராய் வந்தது. பெயரமைதி இயலுரிமையை இனிது விளக்கியுளது.

ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று உள்ளம் விழைந்து நிற்பது வேட்கை; அதனை மேலும் மேலும் அடைய வேண்டும் என்னும் ஆவலோடு நீண்டு நிற்கும் ஆசை அவா எனப்படும்.

செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்
ஐயென் இறுதி அவாமுன் வரினே
மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர்:
டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும். - தொல்காப்பியம்

இந்த இயல்விதியை ஈண்டு உணர்ந்து கொள்ள வேண்டும்

தான் சுகமாய் வாழ வேண்டும் என்றே யாண்டும் மனிதன் ஆவலோடு மூண்டு முயன்று வருகிறான். எது சுகம்? உண்மையான இன்பம் எவ்வழியில் செவ்வையாய் விளைந்து வருகிறது; எதனை உறுதியாக அடைய வேண்டும்? என்னும் இன்னவாறான விசாரணையை யாதும் எண்ணாமலே கண்ணயர்ந்து போகின்றான். கண்ட காட்சிகளிலேயே களிப்பு மீதூர்ந்து காலம் கழித்து ஒழிவது சாலவும் இளிவாம்.

கூடு பிரிந்த பொழுது உன்னோடு பின்வருவது என்னோ? இந்தக் கேள்வியைத் தன்னுள் வினவி ஒவ்வொருவரும் உண்மையை நாளும் ஓர்ந்துணர வேண்டும்.

தன்னுடைய நிலைமையைத் தனியே இனிது ஆராய்கின்றவன் அரிய பல நன்மைகளை எளிதே பெற்றுக் கொள்கிறான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-19, 3:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

மேலே