கணக்குப் பார்த்தீர்களா

அந்த பிஞ்சு உயிரை
காப்பாற்ற தவறியவர்களே
போய் கணக்கு பார்த்தீர்களா
எத்தனை விழுந்தது அதில்
எத்தனை உயிருடன்
எத்தனை சடலமாக மீட்கப்பட்டது
என்று..

நான் கேட்கவில்லை
பிள்ளைகளை இழந்த
பெற்றோர்களின்
கண்ணீர்த் துளிகள்
கேட்கிறது...

அந்த கண்ணீர்த் துளிகள்
வெட்கப்படுகிறது
வேதனைப்படுகிறது
உங்களின் இயலாமையை
பார்த்து...

குழிக்குள் விழுந்த
பிஞ்சு உயிரை மீட்டு
மீண்டும் குழிக்குள்
புதைக்காவா உங்களின்
தொழில்நுட்பம்
நான் கேட்கவில்லை
அந்த கண்ணீர்த் துளிகள்
கேட்கிறது...

உலகை படிக்குமுன்பே
கரும்பலகையை கையில்
எடுக்குமுன்பே
நிரந்தரமாக உறங்கவைத்தீர்களே
இது தான் உங்களின்
பாதுகாப்பு கொள்கையா..?
சொல்லுங்கள் அந்த கண்ணீர்த் துளிகளுக்கு பதிலை..

இப்போதாவது
ஆழ்துளை கிணறு எனும்
புதைக்குழிக்கு
முற்றுப் புள்ளி வைப்பீர்களா
அல்ல சற்று தள்ளி வைப்பீர்களா
நான் கேட்கவில்லை
அந்த கண்ணீர்த் துளிகள்
கேட்கிறது...

விழிப்புணர்வு
கொடுங்கள் பொற்றோர்களே
பிள்ளைகளுக்கு
பிள்ளைகளுக்காக உழைக்கிறீர்கள்
அந்த பிள்ளைகளே இல்லையெனும்
பொது யாருக்காக உங்கள்
உழைப்பு...

கூட்டுக் குடும்பத்தை
ஆதரியுங்கள்
பிள்ளைகளின் பாதுக்காப்பை கூட்டுங்கள்
குழந்தை தங்கங்களை
தவிக்கவிட்டு
ஆபரணத் தங்கங்களை
தேடாதீர்கள்
இதை அந்த கண்ணீர்த் துளிகள்
கேட்கவில்லை
நான் கேட்கிறேன்...

முற்றுப்புள்ளி வைப்போம்
புதுவிதி செய்வோம்
யார் கண்ணில் பட்டாலும்
தனியாக இருக்கும்
குழந்தையை விசாரிப்போம்
பொறுப்பெடுப்பொம்
தான் உண்டு தன் வேலையுண்டு
என இருக்காமல்
இதைப்போன்ற சம்பவம்
நடக்காமல் கவனிப்போம்...

சமுதாயம் என்பது ஒரு தேன்கூடு
அதை சரியாக கட்டுவதும்
பேணிக் காப்பதும்
நம் ஒவ்வொருவரின்
பொறுப்பு...

விழித்துக்கொள்வோம்
கற்றுக்கொள்வோம்
அவசரக் காலங்களை
கையாள்வது எப்படியென்று...

....
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (29-Oct-19, 9:36 am)
பார்வை : 269

மேலே