அவமிலா இன்பம் பிறழின் மற்றதன் துன்பந் துடைத்தல் அரிது - ஏலாதி 3

நேரிசை வெண்பா

தவமெளிது தான மரிதுதக் கார்க்கேல்
அவமரி தாத லெளிதால் - அவமிலா
இன்பம் பிறழி னியைவெளிது மற்றதன்
துன்பந் துடைத்த லரிது. 3 ஏலாதி

பொருளுரை:

யாவர்க்குந் தவஞ் செய்தல் எளிது, கைப்பொருள் வழங்கல் அரிது;

பெரியோர்க்குக் குற்றத்துக்குள்ளாதல் அரிது; நன்னெறியில் ஒழுகுதல் எளிது.

கெடுதலில்லாத இன்பநெறி தடுமாறிச் சென்றால் பிறப்பிற் பொருந்துதல் எளிது. அவ்வாறு பிறந்ததின்கண் உண்டாகுந் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல் அரிது.

கருத்து:

மக்கட்குத் தவம் எளிது, ஈகை அரிது; தக்கார்க்குத் தீமை அரிது, நன்மை எளிது; திருவருள் நெறி தவறின் பிறவி எளிது; ஆனால் அதன் நீக்கம் அரிது.

தவம், தந்நன்மைக்கும், ஈகை பிறர் நன்மைக்கு மாகலின் முன்னது எளிதும், ஏனையது அரிதுமாயின.

‘தக்கார்க்கு ஆதல் எளி'தென்க. இன்பத்துக்கு அவமென்றது, நிலையாமையுந் தாழ்வையுமுடைய குற்றத்தை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Oct-19, 9:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே