சாலும் பிறநூலின் சார்பு – ஏலாதி 5

நேரிசை வெண்பா

தனக்கென்றும் ஓர்பாங்கற் பொய்யான்மெய் யாக்கும்
எனக்கென்(று) இயையான்யா தொன்றும் - புனக்கொன்றை
போலும் இழையார்சொற் றேறான் களியானேல்
சாலும் பிறநூலின் சார்பு. 5 - ஏலாதி

கொன்றை மரம், (Golden Shower Tree) ஃபேபேசியே (Fabaceae)

பொருளுரை:

யாரொருவன் தனக்கெனவும், தன்னைச் சார்ந்த நண்பனுக்கென்றும் வேறுபட்டு பொய் சொல்லாமல் உண்மையே சொல்லிக்கொண்டும், தனக்கு வேண்டுமென்று யாதொரு பொருள் மேலும் பற்று வைக்காமலும், முல்லை நிலத்திலுள்ள கொன்றைப் பூவைப் போன்ற நகைகளையணியும் பெண்களின் சொற்களைப் பின்பற்றாமலும், செருக்குக் கொள்ளாமலும் இருப்பனாயின், அவனுக்கு அறிவு நூல்களால் அறிதற்குரிய ஏனைய பண்புகளும் தாமே வந்து நிரம்பும்.

கருத்து:

பொய்யாமை முதலியன உடையானுக்கு நூல்களால் உணர்தற்குரிய ஏனைய நல்லியல்புகளும் தாமே வந்து நிரம்பும்.

‘இழையார் சொற்றேறான்' என்றது, பெண்வழிச் சேறாமையாகும்.

கடையில் நின்ற ‘ஏல்' என்பதனைப் பொய்யான் முதலியவற்றோடும் கூட்டுக.

பாடலின் கடைசியில் களியானேல் என்ற சொல்லிலுள்ள ஏல் என்பது பொய்யானேல், இயையானேல், சொல்தேறனேல் களியானேல் என்று பொருள் கொள்ளப்படுவதால் இது கடைநிலைத் தீவகம் எனப்படுகிறது.

தீவக அணியின் இலக்கணம்:

ஒரு குணத்தையோ, தொழிலையோ, இனத்தையோ, பொருளையோ குறிக்கும் ஒரு சொல், செய்யுளின் ஓர் இடத்தில் நின்று, அச்செய்யுளில் பல இடங்களிலும் உள்ள சொற்கேளாடு சென்று பொருந்திப் பொருளைத் தருவது தீவக அணியாம். அது முதல் நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடை நிலைத் தீவகம் என்னும் மூன்று விதமாக வரும்.

குணம் தொழில் சாதி பொருள் குறித்து ஒரு சொல்
ஒருவயின் நின்றும் பலவயின் பொருள் தரின்
தீவகம்; செய்யுள் மூவிடத்து இயலும். - தண்டியலங்காரம், 39

தீவக அணி - பெயர்க் காரணம்:

தீவகம் என்னும் சொல்லுக்கு 'விளக்கு' என்று பொருள். ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்கேளாடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

தீவக அணியானது குணம், தொழில், சாதி, பொருள் என்று முதல் நிலை, இடை நிலை, கடை நிலை என்று மூன்று இடங்களிலும் மொத்தம் 12 வகையாக வரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Oct-19, 8:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

மேலே