மற்றவனை யாக்குமவர் யாக்கும் அணைந்து – ஏலாதி 8

நேரிசை வெண்பா

உடன்படான் கொல்லா னுடன்றார்நோய் தீர்த்து
மடம்படான் மாண்டார்நூன் மாண்ட - இடம்பட
நோக்கும்வாய் நோக்கி நுழைவானேன் மற்றவனை
யாக்குமவர் யாக்கு மணைந்து. 8 - ஏலாதி

பொருளுரை:

யார் ஒருவன், பிறர் கொலை செய்வதற்கு உடன்படாமல், தானும் ஓருயிரைக் கொல்லாமல், பிணிப்பட்டு வருந்துகிறவர்களின் நோயை மருந்து முதலியன கொடுத்து நீக்கி, அறியாமையில் மயங்கானாய்,

அறிவு மாட்சிமைப்பட்ட சான்றோருடைய நூல்களை சிறந்த கருத்துக்கள் புலனாகும்படி, ஆராய்வதற்குரிய இடத்தில் ஆராய்ந்து, அதற்குத் தக ஒழுகுவானேல் அவ்வியல்பினனை நண்பராக்கிக் கொள்வாரை மேற்கூறிய ஒழுக்கங்களெல்லாம் பொருந்தி மேம்படுத்தும்.

பொழிப்புரை:

ஒன்றினைப் பிறர் கொல்ல உடன்படாது, தானுங் கொல்லாது, பிணியால் வருந்தினார் நோயைத் தீர்த்து பேதைமையின்கட் படாமல் மாட்சிமைப்பட்டார் நூல்களின் மாட்சிமைப்பட்ட குணங்கள் தனக்குப் பெருகும்படி ஆராயுமாயின், தான் ஆராய்ந்தவற்றின்கண் உள்புக்கு ஒழுகுவனாயின், அவனை அணைந்தார்க்கு நெறியெல்லாங் கூடி யாக்கும்.

கருத்து:

நல்லாரோடு இணங்குவார்க்கும் அந் நல்லன உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Nov-19, 8:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 91

சிறந்த கட்டுரைகள்

மேலே