மன்னலமுள் நாடிவரின் நதியாய்க் கதிநலங்கள் ஓடி வருமுன் உவந்து - இதம், தருமதீபிகை 510

நேரிசை வெண்பா

தன்னலமே நோக்கித் தவிக்கும் அளவுமோர்
நன்னலமும் நேராக நண்ணாதே; – மன்னலமுள்
நாடி வரினோ நதியாய்க் கதிநலங்கள்
ஓடி வருமுன் உவந்து. 510

- இதம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பிறர் நலத்தைக் கருதாமல் தன்னலத்தையே கருதியிருக்கும் வரை மனிதன் உயர்ந்த பயனை அடையான்; பிறவுயிர்களுக்கு இரங்கி இதம் புரியின் அன்றே கதி நலங்கள் அதி வேகமாய் அவனிடம் வந்து சேரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இதமும், இன்பமும் எவ்வழியும் தமக்கு வேண்டுமென்றே யாவரும் ஆவலோடு அலைந்து திரிகின்றனர். தாம் கருதியபடி யாவும் கைகூடாமையால் யாண்டும் கண்கலங்கி நிற்கின்றனர். மக்கள் நிலை பக்குவம் பெறாமல் பரிதாபம் உறுகின்றது.

மனம் நேர்மையாய் உயர்ந்த போதுதான் மனிதன் சீர்மையும் சிறப்பும் பெறுகின்றான். இனிய பண்பாடுகள் அரிய அமுதங்களாகின்றன; ஆகவே அம் மனிதன் அமரனாகின்றான்.

இரக்கம், தயை, இதம், உதவி என்னும் மொழிகள் உயர்ந்த ஆன்ம நீர்மைகளாய் ஒளி வீசியுள்ளன. இந்தத் தன்மைகள் மனிதனைப் புண்ணியவான் ஆக்கி விடவே அவன் எண்ணிய யாவும் எளிதே பெற்று யாண்டும் இன்ப நலங்களைக் காண்கின்றான்; இனிய பண்புகள் அரிய இன்பங்களாகின்றன.

தனக்கு மாத்திரம் சுகத்தை நாடுகிறவன் குறுகிய நோக்கம் உடையவனாய்ச் சிறுமையையே அடைகிறான், பிறர்க்கு இதத்தைச் செய்கிறவன் பெருந்தகையாளனாய்ச் சிறந்து திகழ்கிறான்,

சுயநலத்தில் மருளும் மயக்கமும் மண்டி இருள் படிந்துள்ளது; பிறர்க்குச் செய்யும் இதத்தில் அருளும் அறமும் பெருகித் தெருள் நிறைந்து நிலவுகிறது. உண்மை தெரியாமல். ஊனமடைகிறார்.

தனனலமே கருதி உழல்கிறவன் பரமன் அருளையிழந்து வெகு தூரத்தில் விலகி நிற்கிறான், தனது நிலைகளை உணராமல் பலர் புலையாடல் புரிந்து புன்மையுறுகின்றனர்.

Self-indulgence is a blind alley that leads only to frustration or satiety. - Human Misery

’சுய நயம் என்பது இடறான களி வெறியில் செல்லுகிற குறுகிய குருட்டு வழியாம்' என்னும் இது இங்கே அறியவுரியது.

விழி திறந்து விரிந்த நோக்கோடு பாராமையால் மனிதன் இருள் வழியில் இழிந்து போகிறான். சின்ன எண்ணங்களையுடையவன் சின்ன மனிதனாகிறான்; பெரிய எண்ணங்களையுடையவன் பெரிய மனிதனாய் அரிய மகிமைகளை அடைகிறான்.

பிற உயிர்களுக்கு இதம் புரிகின்றவன் இறைவனுடைய உறவுரிமையாளனாய் உயர்ந்து திகழ்கிறான். சீவர்களுக்குச் செய்யும் இதங்கள் திவ்விய ஒளிகளாய்ப் பெருகி வருதலால் உபகாரி தெய்வீக நிலையை எய்துகிறான்.

’நதியாய்க் கதி நலங்கள் ஓடி வரும்; என்றது உபகாரிக்கு வரும் ஊதிய நிலைகளை உணர்த்தியருளியது. எளிய பிராணிகளிடம் இரக்கமாய் இதம் செயகின்றவனுக்கு அரிய துறக்க பதவி தனியே உரிமையாகின்றது.

சுவர்க்கம் என்பது புண்ணிய போகங்களை உடையதாதலால், புண்ணியவான்களுக்குத் தனது இன்ப நலங்களை ஏகபோகமாய் அது ஊட்டியருளுகின்றது. கடமையாளரிடம் உடைமைகள் உரிமைகளாய்த் திரண்டு ஒரு முகமாய் வருகின்றன.

தன்னலம் கருதினவன் சின்னவனாய் இன்னலில் உழல்கின்றான், பிறர் நலம் பேணினவன் பேரின்ப நிலைகளில் பெருகி மகிழ்கிறான் உபகார நீர்மைகள் உயிர்க்கு ஊதியங்களாய் உவகை தருகின்றன; அவ்வரவு நிலைகளைக் கூர்மையாயுணர்ந்து வாழ்வைச் சீர்மை செய்து கொள்ளுக; சீருடைமை பேருடைமையாகிறது.

செய்த உபகாரங்கள் உய்தி நலங்களை உதவி உயிரை உயர்த்தியருளுகின்றன. இதம் புரிந்து வந்தவர் இங்கும் அங்கும் இன்ப வாழ்வை எய்துகின்றனர்; அங்ஙனம் புரியாதவர் எங்கும் என்றும் வறியராய்த் துன்பங்களில் உழலுகின்றனர்.

நேரிசை வெண்பா

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர். 94 ஈகை, நாலடியார்

இம்மி அளவாவது நாளும் ஓர் உதவியைச் செய்து உண்ணுக; அது பெரிய நன்மையாகும்; அங்ஙனம் செய்யாது விடின் கேடாம்; அடுப்பில் உலையேற்றாமல் இப்பிறவியில் பட்டினி கிடந்து வருந்துபவர் யார் தெரியுமா? முற்பிறவியில் பிறர்க்கு யாதும் உதவாமல் தன்னலமே கருதி வந்தவரேயாவர் என இது உரைத்துள்ளது. உறுதி உண்மைகளை ஓர்ந்து சிந்திக்க வேண்டும்.

உயிர்களுக்கு இதம் புரிவது தரும வித்துக்களை விதைத்தது போலாம்; ஆகவே இயன்றளவு எவ்வகையிலாவது அதனைச் செய்து வருபவர் புண்ணிய போகங்களைக் காணுகின்றனர். இருமைக்கும் இன்பமாய்ப் பெருகி வருதலால் தருமம் உயிரமுதமாய் மருவியுளது. அரிய சஞ்சீவியை உரிமை செய்து கொள்ளுக.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல். 33 அறன் வலியுறுத்தல்

என வள்ளுவர் இங்ஙனம் சொல்லியுள்ளார்.

நல்ல சிந்தனை, நல்ல சொல், நல்ல செயல் எவ்வழியும் புண்ணியங்களாகின்றன. திவ்விய மகிமைகளை அருளுகின்ற இந்நீர்மைகளை நாளும் பழகிவரின் அது தரும நிலையமாய்த் தழைத்து இருமை இன்பங்களையும் உரிமையோடு தருகிறது.

மன்னுயிர் ஓம்பி வருபவர் புண்ணியவான்களாய்ப் பொலிந்து விளங்குகின்றனர். அங்ஙனம் ஓம்பாதவர் உயர்ந்த நலங்களை இழந்து விடுகின்றனர். உறுதி நிலைகளை உணர்ந்து உயர்க.

கலிவிருத்தம்
(மா மா மா காய்)
537.
ஏவர் எனினும் இடருற் றனராகி
ஓவில் குறைஒன் றுளரே அதுமுடித்தற்(கு)
ஆவி விடினும் அறனை மறுத்துளரேல்
பாவம் அலது பழிவும் ஒழியாதே. 46 காமதகனப் படலம், உற்பத்தி காண்டம், கந்த புராணம்

உயிர்களுக்கு உதவி உயர்கதி யுறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Nov-19, 9:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே