மற்ற உயிர்களை மாண்புறுத்தி அன்போடு இதஞ்செய்க - மதம், தருமதீபிகை 520

நேரிசை வெண்பா

உற்ற பரமன் உடைமைகளாய்ப் போந்துள்ள
மற்ற உயிர்களை மாண்புறுத்தி - முற்றியபேர்
அன்போ(டு) இதஞ்செய்க; அன்னதே அப்பரமன்
இன்ப மதமாம் இவண். 520

- மதம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உயிர்கள் கடவுளுடைய உடைமைகள்; அவற்றிற்கு அன்பாய் இதம் செய்வதே அவனுக்கு இன்பமான இனிய மதமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உடையான் என்பது கடவுளுக்கு ஒரு பெயர். அகில அண்டகோடிகளும் சகல சீவ கோடிகளும் அவனுடைய உடைமைகளாய் உள்ளமையால் அவன் உடையான் எனப்பட்டான்.

உடையானே! நின்தனை யுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய்! – திருவாசகம்

மாணிக்கவாசகர் இறைவனை நோக்கி இவ்வாறு உருகி உரையாடி யிருக்கிறார், கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவுரிமைகள் அதிசய மறைவுகளாய் மருவி யிருக்கின்றன.

உற்ற என்றது அநாதி நித்தியமாய்ப் பொருந்தியுள்ள அந்தக் கிழமையின் பழமையை உய்த்துணர வந்தது!

பரஞ்சோதியான இறைவனிடமிருந்து பிரிந்து வந்த பொறிகளே யாண்டும் உயிரினங்களாய்ப் பரந்து விரிந்துள்ளன, இந்த உண்மையை உணர்ந்து உறுதி நலங்களை ஓர்ந்து கருதிய நெறியில் ஒழுகி வரின் விழுமிய நன்மைகள் விளைந்து வரும்.

காண முடியாத கடவுளை நேரே காண வேண்டுமாயின் கண்எதிரே திரிகின்ற சீவர்களிடம் கருணை புரிந்து உதவி செய்க: அந்தப் புண்ணிய விளைவு எண்ணிய மகிமைகளை எதிரே காட்டி இன்ப நலங்களை ஊட்டி இருமையும் பெருமையருளும்.

'மதங்களின் விதங்களை வீணே பேசிப் பிதற்றி மதங்கொண்டு திரியாதே! உயிர்களுக்கு இதங்களைச் செய், அதுவே உயர்ந்த தெய்வ வழிபாடாய் உய்தி நலங்களை உதவி வரும்' என மதங்க முனிவர் ஒருமுறை ஓர் மதவாதியை நோக்கி உரைத்தருளினார்.

சமய சின்னங்களைத் தரித்துக் கொண்டு தெய்வ பக்தியுடையவர் போல் சிலர் நடித்து வருகின்றனர்; அவருடைய செயல் இயல்கள் யாவும் கொடுமையும் வஞ்சமும் நெடிது நிறைந்திருக்கின்றன. பொது மக்களுக்கு மத போதனைகளைச் செய்ய நேர்ந்த தலைவர்கள் வேடதாரிகளாய் ஆடம்பர நிலைகளில் பீடங்கள் கொண்டு பெருகி நின்றமையால் பிழைகள் பல பெருகின.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

சென்னிவோர் பனங்காய் போலமுண் டித்துச்
..சீடர்பற் பலர்கள்பின் செல்லச்
சன்னியா சங்கொண்(டு) அழல்மழுக் குறிக்கொள்
..தண்டொடு கமண்டலம் தாங்கி
மன்னிஆ தரிப்போர் மனைதொறும் புகுந்து
..வயிறுசா ணுந்தனி வளர்த்தற்(கு)
உன்னிஊர் தொறும்போய் மடந்தொறும் குடிகொண்(டு)
..ஒண்துகில் காவிதோய்ந் துடுத்தே. 1

உற்றுப நிடதத்(து) உட்பொருள் தன்னை
..உணர்வுறா(து) ஒருவருக்(கு) ஒருவர்
கற்றறி வோதி அத்துவீ தம்தாம்
..கழறுவார் போன்றுகண் தெரியா
மற்றொரு குருடர் குருடருக்(கு) உரைக்கும்
..வழிஎனச் சொல்துறை மயங்கிக்
தெற்றுரை செய்து தியக்கமுற்(று) ஏதும்
..தெளிவுறா தவர்களித் திரளால், 2

மாயவெம் பசியைத் தீர்ப்பதற்(கு) ஏதும்
..மதித்திடா மல்திரி தண்டு
மேயவெண் பட்ட நாமமும் காவி
..இட்டபூந் துகிலுமே விலங்கச்
சீயரென் பவராய் இல்லறத் தோர்க்கும்
..சென்னிதாழ்த்(தி) இறைஞ்சியத் திருமால்
கோயிலின் அமுதம் புசிப்பதற்(கு) அன்றோ
..கொண்டனர் இனையரிக் கோலம். 3

மூங்கில்நெட் டிலைபோல் கோபிசந் தனமும்
..முத்திரைப் பொறிகளும் சாத்தி
ஆங்கத னிடையங் காரமும் தீட்டி
..அங்குலிக்(கு) ஒரொர்செம்(பு) அடுக்கி
நீங்குமின் என்று பிறர்செல விலக்கி
..நெட்டடி குந்திவைத்(து) அனேகம்
ஈங்கிவர் புரிந்தும் தத்துவர்தாம் என்று
..எத்துவார் உலகினை எங்கும். 4 மெய்ஞ்ஞான விளக்கம்

பிற்காலத்தில் மத குருக்களாய் வந்துள்ளவர்களுடைய நிலைகளை இவை வரைந்து காட்டியுள்ளன. வெளிப் பகட்டுகள் விபரீதங்களாயின.

ஆன்ம அனுபவிகளாய் உண்மை நெறிகளை உணர்த்தவுரிய ஆசிரியர்கள் பான்மை திரியவே மதங்களும் மேன்மை குலைந்து போயின. போலிக் குருக்களை நம்பினவர் கேலிக் கூத்தராயிழிந்தனர். குருட்டு நம்பிக்கைகள் மருட்டு வம்புகளாய் மலிந்தன.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே. 1 - 13 அபக்குவன், ஆறாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம், பத்தாம் திருமுறை

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர்
மருளுற்றுப் பாழ்ங்குழி வீழ்வர்முன் பின்அக்
குருடரும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோ டாகிலே. 5 - 34. அசற்குரு நெறி, ஏழாம் தந்திரம், திருமூலர் திருமந்திரம், பத்தாம் திருமுறை

உள்ளே ஞான சீலங்கள் இல்லாமல் புறத்தே வெறும் மதவேடங்களைப் பூண்டிருப்பவரிடம் உறுதி நலங்களை உணர விரும்புவது குருடனிடம் குருடன் வழி கேட்பது போல் இழிவே தரும் எனத் திருமூலர் இவ்வாறு தெளிவுறுத்தியுள்ளார்.

தெளிவான ஞானக்கண் இல்லாமையால் குருடரென நேர்ந்தார். விழியுடையவரே வழி தெரிய வல்லார்; ஞானத்தெளிவுடையவரே கதி நெறி காண உரியார்.

சித்த சுத்தியுடைய தத்துவ ஞானிகளே உத்தம நிலையில் உயர்வர்; அல்லாதவர் பித்தராய் இழிவர்; அவரைப் பின்பற்றுவது பிழையாம் என இது விளக்கியது.

Let them alone: they be blind leaders of the blind, and if the blind lead the blind, both shall fall into the ditch. - Bible

வேடதாரிகளை விட்டுவிடுங்கள்; அவர் குருட்டு வழியினர்; குருடனுக்குக் குருடன் வழி காட்டினால் இருவரும் குழியுள் வீழ்ந்து அழிவார்' என ஏசு இவ்வாறு கூறியிருக்கிறார்.

’குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குழிவிழும்’ எனத் திருமூலர் கூறியபடியே இது மருவி வந்துள்ளது. உறுதியுண்மைகள் உய்த்துணரத் தக்கன.

அன்போடு இதம் செய்க; அன்னதே இன்ப மதம். உயிர்களிடம் அன்புடையனாய் யாண்டும் இரங்கி யாவருக்கும் உதவி செய்க; அதுவே பரமனுக்குப் பிரியமான புனித மதமாம். தெய்வப் பிரீதி உய்வைத் தருகிறது.

இதம் செய்வது எவ்வழியும் திவ்விய இன்பமாய் விளைந்து வருதலால் அதனையே மகான்கள் உவந்து பேணி வருகின்றனர்.

புத்தர் ஒரு முறை ஒரு பெளத்த மடத்தை அடைந்தார், அங்கே இருந்த துறவிகள் எல்லாரும் உவந்து எழுந்து அவருடைய அடியில் விழுந்து வணங்கி நின்றார். அவர் உள்ளே சென்று பார்த்தார்; அங்கே ஒரு துறவி தொழுநோயால் வருந்திக் கிடந்தார். அவரைக் கண்டதும் உள்ளமுருகி அருகே போயமர்ந்து தம் கைகளால் தடவி எடுத்து நீராட்டி உபசரித்து நல்ல படுக்கையில் படுக்க வைத்தார். குட்ட நோயாளனைத் தொட்டெடுத்துப் புத்தர் பெருமான் ஆதரித்தருளியதைக் கண்டதும் எல்லாரும் வியந்து மகிழ்ந்தார். அதன்பின் அத்துறவிகளை நோக்கி அக் கருணை வள்ளல் இதமாகக் கூறிய இனிய அருள்மொழி அயலே வருகிறது.

Whosoever serves the sick and suffering serves me. - Buddha

'ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் யார் ஊழியம் செய்கிறார்களோ அவரே எனக்கு உண்மையாகப் பணி செய்தவராவார்' என இங்ஙனம் சொல்லியருளினார். அன்று பாலி மொழியில் சொன்ன இந்த அமுத வாக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மேல் நாட்டார் உவந்து போற்றி வருகின்றனர். எவ்வுயிர்க்கும் இதம் செய்வதே திவ்விய மதமாம் என்பதைப் புத்த பகவான் யாண்டும் எல்லார்க்கும் போதித்திருக்கிறார்.

அன்பு கனிந்த இனிய உபகாரங்களே பின்பு தருமம் புண்ணியங்கள் எனத் தழைத்து வருகின்றன. தருமாத்துமா, புண்ணியாத்துமா என்னும் பதம் எண்ணரிய மகிமைகளையுடையது.

மன்னுயிர்க்கு அன்பு செய்வது தன்னுயிர்க்குப் பேரின்பமாப்ப் பெருகி வருகிறது. இவ்வுண்மையை உணர்ந்த மகான்கள் எவ்வழியும் நன்மைகளைச் செய்து உய்தி பெறுகின்றனர்.

மதச் சின்னங்களைத் தரித்துக் கொண்டு நெடுநேரம் தெய்வ பூசனைகளைச் செய்கின்றனர்; பசித்து வந்தவர்க்கு யாதும் உதவாமல் இகழ்ந்து விடுகின்றனர். பசியில்லாத கடவுளுக்குப் பாலன்னங்களை ஊட்ட விழைவதும், அந்தக் கடவுளே பசியுடையனாய் மனித வடிவில் வந்தபோது யாதும் காட்டாமல் ஓட்டுவதும் உலக விசித்திரங்களாய் உள்ளன.

நேரிசை வெண்பா

தெய்வத்தின் பேரால் சிலர்வாய் மதம்பேசி
ஐயோ உயிர்கட்(கு) அவம்புரிதல் - வெய்ய
பழிச்செயலே ஆகும்; பரிந்தருளின் அஃதே
பழிச்சல் அவனைப் பணிந்து.

சீவர்களுக்கு இரங்கி உதவுவதே சிறந்த தேவ பூசையாம்' அதனை மறந்து மதங்கொண்டு திரிவது அவமாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Nov-19, 9:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

சிறந்த கட்டுரைகள்

மேலே